அதிமுக அலுவலக சீல் தொடர்பான வழக்கு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு - சென்னை உயர்நீதிமன்றம்
வன்முறையில் ரூ. 25 லட்சம்மதிப்பிலான சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய காவல்துறை வழக்கறிஞர், பொது சொத்துக்கள் சேதம் தடுப்பு சட்ட பிரிவுகளின் கீழும் வழக்கு பதியப்பட்டுள்ளது என்றார்.
அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைத்ததை எதிர்த்து கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வமும் தாக்கல் செய்த மனுக்கள் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.
ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்த போது, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தின் முன், எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். இந்த வன்முறை சம்பவத்தை அடுத்து, கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி இடைகால பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் தரப்பில் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் நேற்றுமுன் தினம் விசாரணைக்கு வந்த போது, ஜூலை 11ம் தேதி நடந்த சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை மறுநாள் தள்ளிவைக்கப்பட்டது. இந்த மனுக்கள் நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தென் சென்னை வருவாய் கோட்டாட்சியர் சாய் வர்தினி மற்றும் ராயப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் கண்ணன் ஆகியோரிடம் அறிக்கைகளையும், வீடியோ, சிசிடிவி மற்றும் போட்டோ ஆதாரங்களையும் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.
தொடர்ந்து வாதிட்ட காவல்துறை தரப்பு வழக்கறிஞர், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, வன்முறையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதால் தான் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன எனவும், தலைமை அலுவலகம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக எந்த நீதிமன்றங்களிலும் வழக்கு நிலுவையில் இல்லை எனவும், வழக்கு நிலுவையில் இருந்தால் சீல் வைக்க முடியாது எனவும், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டதால் மட்டுமே சீல் வைக்கப்பட்டது எனவும் விளக்கமளித்தார். மேலும், தற்போது இரு தரப்பினருக்கும் இடையில் சமாதானம் ஏற்படவில்லை எனவும், மீண்டும் பிரச்னை ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதால் பொது அமைதி, மக்கள், பள்ளி குழந்தைகள் பாதுகாப்பு கருதி சீல் வைத்த உத்தரவை ரத்து செய்யக் கூடாது எனவும் வாதிட்டார்.
சீல் வைத்ததை எதிர்த்து சம்பந்தப்பட்ட அதிகாரியையோ, சிவில் நீதிமன்றத்தையோ அணுகலாம் என நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளதாக குறிப்பிட்ட காவல் துறை தரப்பு வழக்கறிஞர், இதுவரை மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்களை கண்டுபிடிக்க கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் ந்டவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
வன்முறையில் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய காவல்துறை வழக்கறிஞர், பொது சொத்துக்கள் சேதம் தடுப்பு சட்டப் பிரிவுகளின் கீழும் வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும், இழப்பீட்டை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். இடைகால பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், சம்பவ இடத்தில் பன்னீர்செல்வத்தின் பாதுகாப்பு வீரர்களை தவிர வேறு எந்த போலீசாரும் இல்லை எனவும், என்ன நடந்தது என்பதற்கு வீடியோ ஆதாரங்களே போதுமானது எனவும் தெரிவித்தார்.
கட்சி அலுவலகம் அவருக்கு சொந்தமானதாக இருந்தால் அவர் ஏன் அலுவலக கதவை உடைத்து கோப்புகளை எடுத்து செல்ல வேண்டும்? என கேள்வி எழுப்பிய இடைகால பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தரப்பு மூத்த வழக்கறிஞர், சம்பவம் நடந்த தேதியில் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்பதை பன்னீர்செல்வம் தனது மனுவில் ஒப்புக் கொண்டுள்ளார் எனக் குறிப்பிட்டார்.
பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், காவல்துறை அறிக்கை குறித்து ஆட்சேப மனுவை தாக்கல் செய்ய அவகாசம் கோரினர். கட்சியில் தனது பதவி என்ன என்பதை கட்சி அலுவலக உரிமை தொடர்பான விசாரணையில் தீர்மானிக்க முடியாது எனவும், பெரும்பான்மையான பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள் ஆதரவு உள்ளதால் மட்டுமே தொண்டர்கள் அனைவரும் இடைகால பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பக்கம் இருப்பதாக கருத முடியாது என்றும் குறிப்பிட்டார்.
கட்சி அலுவலகத்தின் உரிமை யாருக்கு என்பதை உரிமையியல் நீதிமன்றம் தான் முடிவு செய்ய முடியும் எனவும், கட்சி அலுவலகம் யாரிடம் இருக்கிறது என்றுதான் ஆர்.டி.ஓ பார்க்க வேண்டுமே தவிர யாருக்கு உரிமை உள்ளது என்பதை தீர்மானிக்க முடியாது. இரு தரப்பினருக்கும் இடையே உள்ள சர்ச்சையை நீதிமன்றத்தால் மட்டுமே தீர்க்க வேண்டும் என்பதால், அதுவரை அலுவலகத்தை மூடி வைத்திருக்கலாம் என்றும் தெரிவித்தார்.
பொதுக்குழு நடக்கும் போது மாநிலம் முழுவதும் இருந்து கட்சியினர் வருவர் என்பதால், கட்சி அலுவலகத்தை பூட்டி வைக்கும் பழக்கம் இல்லை எனவும், அப்படி தனது ஆதரவாளர்களுடன் அங்கு சென்றதாகவும், ஆனால் இடைகால பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்படி பழனிசாமி தரப்பின் நான்கு மாவட்ட செயலாளர்கள் வெளியில் அமர்ந்து கொண்டு உள்ளே நுழைவதை தடுத்ததாகவும் பன்னீர்செல்வம் தரப்பு மூத்த வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டினர். கட்சி அலுவலகத்திற்குள் நுழைய முடியாது என்று எந்த நீதிமன்றமும் கூறவில்லை எனத் தெரிவித்த பன்னீர்செல்வம் தரப்பு மூத்த வழக்கறிஞர்கள், பொதுக்குழுவுக்கு அனுமதியளித்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, காவல்துறை அறிக்கைக்கு ஆட்சேபம் தெரிவித்து மனுத்தாக்கல் செய்ய பன்னீர்செல்வம் தரப்புக்கு திங்கள் கிழமை வரை அவகாசம் வழங்கிய நீதிபதி, இருவரின் மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்