ADMK CASE: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஆவாரா எடப்பாடி பழனிசாமி? உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்:
எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்து, கடந்தாண்டு ஜுலை மாதம் 11ம் தேதி நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, அதிமுக பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறும் என கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலுக்காக எடப்பாடி பழனிசாமி வேட்புமனுவும் தாக்கல் செய்தார்.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு:
இதனிடையே, அதிமுக பொதுச்செயலாலர் பதவிக்கான தேர்தலை எதிர்த்து ஓ.பி.எஸ் தரப்பில் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து, விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை அன்று அந்த மனுக்களை நீதிபதி குமரேஷ்பாபு அவசர வழக்காக விசாரித்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட பின்பு, அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்தலாம், ஆனால் தேர்தல் முடிவுகளை வெளியிடக் கூடாது என்று நீதிபதி உத்தரவிட்டார். அதோடு, ஏப்ரல் 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு இருந்த, அ.தி.மு.க.வின் ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பான வழக்கு விசாரணை வரும் 22-ந் தேதி முதலே விசாரிக்கப்பட்டு மார்ச் 24-ல் தீர்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இன்று வழக்கு விசாரணை:
இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம், வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுக்களும், அவரது ஆதாரவாளர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விடுமுறை தினமான இன்று அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிரான வழக்குகளின் விசாரணைக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி அனுமதி அளித்துள்ளார். அதன்படி, இந்த வழக்குகள் இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதி குமரேஷ்பாபு முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.
ஈபிஎஸ்-க்கு சாதகமா?
பொதுக்குழு தொடர்பான வழக்கில் ஒருவேளை ஈபிஎஸ்-க்கு ஆதரவான தீர்ப்பு கிடைத்தால், மற்ற வழக்குகள் அனைத்தும் தாமாகவே பொருளற்றதாகி விடும். ஒருவேளை தீர்ப்பு ஈபிஎஸ்-க்கு சாதகமாக வந்தால், அவர் அதிமுகவின் பொதுச்செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார்.
சசிகலா வழக்கு:
அதேநேரம், அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தம்மை நீக்கியதை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவையும் விசாரிக்க வலியுறுத்தப்பட்டது. இதனை ஏற்று சசிகலா வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.