''இழப்பு இல்லாமல் மின்சாரத்துறையை நடத்த முடியாது'' - சிஏஜி அறிக்கை குறித்து தங்கமணி
மின்சாரத்துறை, வருவாய் ஈட்டித்தரும் துறை இல்லை எனக்கூறியுள்ள முன்னாள் அமைச்சர் தங்கமணி, எந்த ஆட்சி நடந்தாலும் யூகத்தின் அடிப்படையிலேயே சிஏஜி அறிக்கை வெளியிடுவதாக குறிப்பிட்டுள்ளார்
கடந்த ஆட்சி காலத்தில் மின்சாரத்துறையில் 26ஆயிரம் கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிஏஜி எனப்படும் தணிக்கை குழு அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது. இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளிப்பதற்காக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர்,
ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தமிழக மக்களுக்கு தடையில்லாத மின்சாரம் வழங்கப்பட்டது.சிஏஜி அறிக்கையில் பல்வேறு ஊழல் நிகழ்ந்ததாக பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு மின்சார வாரியத்தில் 13,176கோடி நட்டம் என சிஏஜி குறிப்பிட்டுள்ளதே தவிர ஊழல் என்று சொல்லவில்லை. ஆனால் ஊழல் நடந்ததாக ஊடகங்கள் சில செய்திகள் வெளியிடுகின்றன.
மின்சார வாரியம் என்பது சேவைத்துறை. அது வருமானம் ஈட்டித்தரும் துறை கிடையாது. மக்களுக்கு தடையில்லாத மின்சாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அரசின் நிதி உதவி பெற்று மின் கட்டணத்தை உயர்த்தாமல் தடையில்லாத மின்சாரத்தை வழங்கினோம்.
கடந்த 10 ஆண்டு காலத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாளர் செலவு, நிலக்கரி விலை உயர்வு, நிலக்கரியை கொண்டு வருவதற்கான செலவு, மின்பொருட்கள் கொள்முதல் விலை உயர்வு உள்ளிட்ட சிக்கல்களுக்கு ஏற்கெனவே சட்டமன்றத்தில் பேசி இருக்கிறேன்.மின்சார வாரிய பணியாளர்களுக்கு சம்பளம் ஏறிய வகையில் மட்டுமே 2000 கோடி கூடுதல் செலவானது. மின்சார வாரியத்தில் ஏற்பட்டுள்ள கடனுக்கு வட்டி மட்டும் ஆண்டுக்கு 800 கோடி ரூபாய் வட்டி கட்டியுள்ளோம்.
நீண்டகால கொள்முதல் செய்ததுதான் இந்த நஷ்டத்திற்கு காரணம் என சிஏஜி தனது தணிக்கை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. பொதுவாக எந்த மாநிலமும் தனக்கு தேவையான மின்சாரத்தை முழுமையாக உற்பத்தி செய்வது இல்லை . நீண்டகால ஒப்பந்தங்கள் மூலமாக எல்லா அரசாங்கங்களும் மாநிலத்திற்கு தேவையான மின்சாரத்தை கொள்முதல் செய்து வருகிறது.
2014ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா இருந்த காலத்தில் நீண்டகால ஒப்பந்தமாக 3330 மெகாவாட் 4.91 பைசாவிற்கு ஒப்பந்தம் போட்டபோது வேறு சில மாநிலங்கள் 5.50 பைசாவிற்கு கூட மின் ஒப்பந்தங்களை செய்திருந்தது. என்றார்.
ஜெயலலிதா ஆட்சி காலத்தில் போடப்பட்ட 3,330 மெகாவாட்டில் 500 மெகாவாட் உற்பத்தி ஆகவில்லை என்பதால் 2,830 மெகாவாட்டை மட்டுமே தமிழக அரசு கொள்முதல் செய்ததாக குறிப்பிட்ட முன்னாள் அமைச்சர் தங்கமணி, 2006-11 திமுக ஆட்சி காலத்தில் கடுமையான மின்வெட்டு இருந்ததால் அடுத்து வந்த அதிமுக ஆட்சி நீண்டகால மின் ஒப்பந்தங்களை போட்டதாக குறிப்பிட்ட தங்கமணி, திமுக ஆட்சியிலும் நீண்டகால ஒப்பந்தங்கள் போடப்பட்டிருத்தாக குறிப்பிட்டார். ஆனால் அதிமுக ஆட்சியில் மட்டுமே நீண்டகால ஒப்பந்த்தை போட்டுள்ளதாக சிஏஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பைனீர் பவர், டாடா எலக்ரிக்கல் கம்பெனி, பிபிஎன் பவர் உள்ளிட்ட நிறுவனங்கள் உடன் திமுக ஆட்சி காலத்தில் நீண்டகால ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாக கூறிய தங்கமணி, திமுக அதிகவிலைக்கு மின்சாரம் வாங்கினாலும் அதனை குறைசொல்ல விரும்பவில்லை எனவும் எந்த ஆட்சியாக இருந்தாலும் மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கவேண்டும் என்பதே நோக்கம் எனவும் குறிப்பிட்டார்.
எந்த ஆட்சியிலும் யூகத்தின் அடிப்படையிலேயே சிஏஜி அறிக்கை தருவதாக முன்னாள் அமைச்சர் தங்கமணி குறிப்பிட்டார்