’PMAY – G திட்ட நிதி பற்றி தமிழ்நாடு அரசு சொல்வது பச்சை பொய்’ விவரங்களை வெளியிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு..!
'தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழுவை உண்மைக்கு அப்பாற்பட்ட குழு என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும் - அண்ணாமலை’
மத்திய அரசு மாநில அரசுக்கு தரும் நிதி பகிர்மானம் பற்றி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதில் தவறு இருப்பதாக தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு சொல்லியிருந்ததாகவும் அதனை வெயிட்ட ஊடக நிறுவனம் பின்னர் அந்த பதிவை நீக்கப்பட்டுவிட்டதாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு அரசுக்கு அண்ணாமலை பதில்
மத்திய அரசு தமிழ்நாடு அரசுக்கு போதிய நிதியை கொடுக்காமல் பாரப்பட்சம் காட்டுவதாகவும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன நடத்துவதாகவும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட அமைச்சர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். இந்நிலையில், பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு பேட்டி அளித்த நிதி துறை செயலர் மத்திய அரசின் நிதி கூடுதலாகவே வந்திருப்பதாக தெரிவித்ததாக செய்தி வெளியானது. இந்த முரண்பாட்டை முன் வைத்து பாஜகவினர் நிதி துறை செயலர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, தமிழ்நாடு அரசின் முதல்வரும் மத்திய அரசின் நிதி பங்கீடு குறித்து அமைச்சர்களும் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி மக்களை திசை திருப்புவதாக கூறி வந்தனர்.
அண்ணாமலை வெளியிட்ட விவரங்கள்
இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அரசு தரும் நிதி குறித்த விவரங்களை வெளியிட்ட நிலையில், அது உண்மையல்ல என்று தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு சொன்ன செய்தியை சில ஊடகங்கள் வெளியிட்டுவிட்டு, பின்னர் அந்த பதிவை நீக்கியதாக அவர் குற்றஞ்சாட்டியிருக்கிறார். மேலும், இது தொடர்பாக சில உண்மைகளை தெரிவிக்க வேண்டியது தன்னுடைய கடமை என்று குறிப்பிட்டு PMAY-U குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளார். அதில்,
- PMAY-U கடன் இணைக்கப்பட்ட மானியத் திட்டத்தின் கீழ், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம், தேசிய வீட்டுவசதி வங்கிக்கு, வட்டி மானியம் வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு வீட்டுக்கு அதிகபட்ச வட்டி மானியம் ₹2.7 லட்சம் வரை வழங்கப்படுகிறது.
- 2016-17 மற்றும் 2022-23 நிதியாண்டுகளுக்கிடையே, PMAY-G திட்டத்தின் கீழ் மத்திய அரசு தமிழக அரசுக்கு வழங்கியது ரூ. 5541 கோடி ஆகும். இந்த ஆண்டுகளில், இந்தத் திட்டத்துக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து பயன்படுத்திய மொத்த நிதி ₹6921 கோடி.
ஒட்டுமொத்தப் பயன்பாட்டில், PMAY-G திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கு ஆன மொத்த செலவில், மத்திய அரசு 80% செலவிட்டுள்ளது என்பது தெளிவாகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
- இன்னும் சிறிது ஆழமாகச் சென்றால், எடுத்துக்காட்டாக, கடந்த நிதியாண்டு 2022-23ஐ உதாரணமாக எடுத்துக் கொள்வோம்.
- மத்திய அரசின் பங்கு: ₹39 கோடி, மொத்தப் பயன்பாடு (மாநிலப் பங்கு உட்பட): ₹2290.47 கோடி. தமிழக அரசின் பங்கு ₹286.08 கோடி எனத் தெரிகிறது. ஆனால், தமிழக அரசின் செலவீட்டுப் பட்டியலில் வேறுவிதமாக இருக்கிறது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
- கடந்த 2022-23 நிதியாண்டில், ரூ.555.89 கோடி செலவழித்துள்ளதாக தமிழக அரசு கூறுகிறது. இது உண்மையாகச் செலவிட்ட நிதியை விட ₹81 கோடி அதிகமாகும். இதைக் குறித்து தணிக்கை அதிகாரிகள் கேட்கும்போது, தமிழக அரசு பதில் கூறிக்கொள்ளட்டும் என்றும் தன்னுடைய அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
சுருக்கமாகக் கூறினால், PMAY-G திட்டத்தின் கீழ் கட்டப்படும் ஒவ்வொரு வீட்டிற்கும் 70% செலவழிப்பதாக தமிழக அரசு சொல்வது முழுக்க முழுக்க பொய்யானது என அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.