விவசாய சட்டங்கள் குறித்து கங்கனா ரனாவத் மீண்டும் கருத்து: வெடித்த சர்ச்சை.!பாஜக, காங்கிரஸ் இருவரும் கண்டனம் .!
ஹரியானா சட்டப்பேரவைக்கான தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது குறித்து பாஜக எம்.பி கங்கனா ரனாவத் மீண்டும் கருத்து தெரிவித்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஹரியானா தேர்தல்:
ஹரியானா மாநிலத்தின் சட்டப்பேரவைக்கான தேர்தலானது வரும் அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். அங்கு ஆளும் கட்சியாக பாஜக தலைமையிலான அரசு பொறுப்பு வகித்தாலும், இந்த முறை மக்களவைத் தேர்தல் முடிவுகளில் பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டதால், ஹரியானா தேர்தலானது பாஜகவுக்கு சற்று சவாலானதாகவே பார்க்கப்படுகிறது.
கங்கனா ரனாவத் சர்ச்சை கருத்து:
விவசாய சட்டங்களை ரத்து செய்யக்கோரி போராட்டம் நடத்திய மாநிலங்களில் முக்கிய மாநிலங்களில் ஒன்றாக ஹரியானா மாநிலம் இருந்தது.
இந்த தருணத்தில், சில நாட்களுக்கு முன்பு, மூன்று விவசாய சட்டங்கள் குறித்து பாஜக எம்.பி கங்கனா ரனாவத் கருத்தானது , பாஜகவுக்கு நெருக்கடியை கொடுத்ததாக பார்க்கப்பட்டது. இதையடுத்து எதிர்க்கட்சிகள் கங்கனா ரனாவத்தை கடுமையாக விமர்சித்தனர், பாஜக கட்சியினர் கூட அவரின் கருத்தில் இருந்து விலகியே இருந்தனர். மேலும் , பாஜக தலைமைகூட கங்கனா ரனாவத்தை கண்டித்து, இதுபோன்ற கருத்தை தெரிவிக்க வேண்டாம் எனவும் எச்சரித்ததாக கூறப்பட்டது.
மீண்டும் சர்ச்சை கருத்து:
இந்நிலையில், மீண்டும் விவசாய சட்டங்கள் குறித்து கங்கனா ரனாவத் கருத்தானது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவர் தெரிவித்ததாவது “ இந்திய நாட்டின் வளர்ச்சியில் முக்கியமானவர்களாக விவசாயிகள் உள்ளனர். விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என நான் நினைக்கிறேன். சர்ச்சைக்குரிய கருத்தாக இருந்தாலும் பரவாயில்லை. ஒரு சில மாநிலங்களில் மட்டுமே எதிர்த்த மூன்று வேளாண் சட்டங்களை, விவசாயிகளின் நலன்களை மனதில் கொண்டு மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும், என்று நான் கைகளைக் கூப்பி கேட்டுக்கொள்கிறேன்" என சமீபத்தில் பேசியிருந்தார்.
காங்கிரஸ் கண்டனம்:
இது குறித்து காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவிக்கையில் “ விவசாயிகளுக்கு எதிரான வெறுப்பு மனப்பான்மையானது, பாஜகவின் ஒவ்வொருவரின் நரம்பிலும் உள்ளது என்பது நாடு முழுவதும் தெரிந்து விட்டது.
750 விவசாயிகள் உயிர்தியாகம் செய்த பிறகும், விவசாயிகளுக்கு எதிரான பாஜக மற்றும் மோடி அரசுகள் செய்த மாபெரும் குற்றத்தை உணரவில்லை, விவசாயிகளுக்கு எதிரான 3 கருப்புச் சட்டங்களை மீண்டும் அமல்படுத்துவது குறித்து பேசப்படுகிறது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. நமக்கு உணவு வழங்கும் விவசாயிகளுக்கு எதிராக முள்கம்பி, கண்ணீர் புகை, ஆணி, துப்பாக்கி போன்றவற்றைப் பிரயோகித்த பாஜக அரசை இந்தியாவின் 62 கோடி விவசாயிகளால் என்றும் மறக்க முடியாத ஒன்று. இந்த முறை ஹரியானா மாநில மக்கள் உட்பட இதர மக்களும் தக்க பதிலளிப்பார்கள் என மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.
பாஜக கண்டனம்:
இது தொடர்பாக பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா தெரிவித்துள்ளதாவது, `` விவசாயிகளின் நலன் கருதி ரத்து செய்யப்பட்ட விவசாயச் சட்டங்களை திரும்பக் கொண்டு வர வேண்டும் என்ற எம்.பி கங்கனா ரனாவத்தின் சர்ச்சைக்குரிய கருத்திலிருந்து பாஜக விலகிக்கொள்கிறது. விவசாய மசோதாக்கள் மீதான பா.ஜ.க-வின் பார்வை இதுவல்ல. இது அவரது தனிப்பட்ட கருத்து என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். பா.ஜ.க சார்பில் இதுபோன்ற அறிக்கையை வெளியிட அவருக்கு அதிகாரம் இல்லை. இந்த அறிக்கையை நாங்கள் கண்டிக்கிறோம்" என தெரிவித்திருந்தார்.
ஹரியான மாநில தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், பாஜக எம்.பி கங்கனா ரனாவத்தின் கருத்தானது, அக்கட்சியினருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.