Annamalai: நான் பூஜை செய்யவேண்டும் என எதிர்பார்க்கலாமா? சனாதனத்துக்கு விளக்கம் கொடுத்த அண்ணாமலை
எந்த மதத்தில் இருந்து யார் வந்தாலும் அதை முழுவதும் அரவணைத்து கொள்ளும் சக்தி சனாதனத்திற்கு உண்டு என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
எந்த மதத்தில் இருந்து யார் வந்தாலும் அதை முழுவதும் அரவணைத்து கொள்ளும் சக்தி சனாதனத்திற்கு உண்டு என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
நேற்று திருப்பதியில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானும், அவரது மகளும் தரிசனம் செய்தனர். எல்லா இடத்திலும் எல்லாரும் செல்வதற்கு உரிமை இருக்கு, அது சனாதன தர்மத்தின் மகத்துவமே. ஆனால், வேறு மதத்தினருடைய கோயில்களுக்கு இந்துக்கள் போக முடியாது. மசூதிக்கு போக முடியுமா..? நீங்க யாராவது போயிருக்கீங்களா..?” என செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து, “எந்த மதத்தில் இருந்து யார் வந்தாலும் அதை முழுவதும் அரவணைத்து கொள்ளும் சக்தி சனாதனத்திற்கு உண்டு. சனாதனம் என்ன என்றே நம்ம ஆளுங்களுக்கு புரியவில்லை. சனாதனம் என்கிற சமஸ்கிருத வார்த்தைக்கு அர்த்தம் இந்து தர்மம். ஆதியும், அந்தமும்.. முதலும், முடிவும்.. இல்லாத தர்மம், நிலைத்து நிற்கின்ற தர்மத்துக்கு பெயர்தான் சனாதனம்.
உதாரணத்திற்கு தற்போது தரிசனம் செய்தபோது மங்கை அம்மாளுக்கு தரிசனம் செய்தவர் 225 தலைமுறையாக இருக்கிறார்கள். நான் இப்போது போய் அனைவரும் சமம் என்று தெரிவித்து, அந்த பூஜையை நான் செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கலாமா..? அது அவருடைய கடமை, அவர்தான் செய்யமுடியும். அதேபோல், அவரை அழைத்து வந்து நான் செய்யக்கூடிய விவசாயத்தை செய் என்று சொல்லமுடியாது.
என்னை பொறுத்தவரை அனைவரும் சமம்தான். என் வேலையை நான் செய்கிறேன், அவர் வேலையை அவர் செய்கிறார். இந்த கோயிலில் முதல் தலைமுறையாக பூஜை செய்தவர் பெரியாழ்வார். அடுத்ததாக, ஆண்டாள். இப்படி தலைமுறையாக வந்து 225 தலைமுறையாக இவர் இருக்கிறார். அவர் பூஜை செய்து நமக்கு தீபாராதனை செய்கிறார். இதை நான் ஏற்றுகொள்கிறேன்.
இந்த சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசுகிறார்கள். இது எவ்வளவு முட்டாள் தனமாக பேச்சு. 1940 மற்றும் 50-களில் இருந்தே பலரும் இப்படி பேசி தமிழ்நாட்டில் பேசியிருக்கிறார்கள். உள்ளே பூஜை செய்து என்னிடம் குங்குமம் கொடுக்கிறார்கள், அதனால் இந்த அண்ணாமலை தாழ்ந்தவன் ஆகிறானா..? என்னங்க! முட்டாள்தனமான வாதம் இது!
என்னுடைய குலத்தெய்வம் கோயிலுக்கு இன்றைக்கு போனாலும் கூட, அரசு பட்டியலில் யார் தாழ்த்தப்பட்டவராக இருக்கிறாரோ அவங்கதான் என்னுடைய கோயிலில் பூஜை செய்கிறார்கள். இன்னும் ஒருசில கோயில்களில் பெண்கள் மட்டுமே அர்ச்சகராக இருக்கிறார்கள், அங்கே போய் ஆண்கள் சண்டையிட முடியுமா..? இது எதுவுமே புரியாமல், எதையுமே படிக்காமல் நான் ஒரு பெருமைக்குரிய கிறிஸ்துவர் என்று சொல்லக்கூடிய உதயநிதி, சனாதனம் தர்மம் குறித்து பேசுவதற்கு என்ன அருகதை உள்ளது.
அமைச்சர் உதயநிதிக்கு சவால்:
”உதயநிதிக்கு ஒரு சவால் விடுகிறேன் 2024 மற்றும் 2026 தேர்தலில் சனாதன தேர்தலாக வைத்துக் கொள்ளலாமா?திமுக சனாதனத்தை ஒழிப்போம் என தேர்தலில் பிரச்சாரம் செய்யட்டும், பாஜக சனாதானத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் -மக்கள் எப்படி ஓட்டு போடுவார்கள் என பார்க்கலாம்.
திமுக காரர்கள் மூன்று வருடம் சனாதனத்தை ஒழிப்போம் என்று பேசுவார்கள். 4 வருடம் வேல் தூக்குவார்கள், 5-வது வருடம் அப்பாவும் மகனும் வேல் தூக்குவார்கள். தேர்தலை சந்தித்து எங்களது திமுகவில் 90 சதவீதம்பேர் இந்துகள் என்று சொல்லி கொள்வார்கள். மறுபடியும், தேர்தல் முடிந்ததும் சனாதனத்தை ஒழிப்போம் என்று பேசுவார்கள்.
அப்புறம் உதயநிதி பிள்ளையாரை தூக்கிகொண்டு வருவார். என்ன பிள்ளையாரை தூக்கிகொண்டு வருகிறீர்கள் என்று கேட்டால், இது வெறும் களிமண். என் பையன் கொடுத்தால் கையில் வைத்திருக்கிறேன் என்று கூறுவார்.
உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்த பேச்சிலிருந்து பின் வாங்க மாட்டேன் என்ற கருத்திற்கு, பின்வாங்காமல் இருப்பது நல்லது.” என்று தெரிவித்தார்.