சங்கரய்யாவிற்கு டாக்டர் பட்டம் வழங்க முடியாது என ஆளுநர் கூறுவது கண்டனத்திற்குரியது - பாலகிருஷ்ணன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யாவிற்கு டாக்டர் பட்டம் வழங்குவது டாக்டர் பட்டத்திற்கு பெருமை.
சேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், விடுதலை போராட்ட வீரருமான சங்கரய்யாவிற்கு டாக்டர் பட்டம் வழங்க முடியாது என்று ஆளுநர் கூறுவது கண்டனத்திற்கு உரியது. தமிழ்நாடு முதல்வர் பல்வேறு விருதுகளை வழங்கி உள்ளார். அதன் பின்னரே இதற்கு பரிந்துரை செய்யப்பட்டது. அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு ஆளுநருக்கு அனுப்பபட்டு சான்றிதழில் கையொப்பம் வாங்கிட அனுப்பப்பட்ட நிலையில் அதனை ஆளுநர் மறுத்து இருப்பது கண்டனத்திற்குரியது. முதல்வர் தகைசால் விருது வழங்கியபோது அதற்கான தொகையை கூட நிவாரண நிதிக்கு வழங்கியவர் சங்கரய்யா என்றும், இப்படி பட்டவருக்கு மறுத்து இருக்கும் ஆளுநரின் போக்கு அராஜகத்திற்கு உரியது என்றும் ஒரு வேளை விடுதலை போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக ஆளுநர் மறுத்து இருப்பதாகவே கருகிறோம் என்றும் ஆளுநர் என்ற பதவியை கொச்சைபடுத்தும் வகையில் ஆளுனர் செயல்பட்டு வருகிறார் என்றும் தமிழக அரசின், உயர்கல்வி துறை அமைச்சரின் கோரிக்கையை நிறைவேற்றுவரா என்பதை பொறுத்து இருந்து பார்க்க வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருக்கு சங்கரய்யாவிற்கு டாக்டர் பட்டம் வழங்குவது டாக்டர் பட்டத்திற்கு பெருமை என்று கூறினார்.
மேலும் பாஜக மாநில தலைவர் நடைபயணம் என்ற பெயரில் பதட்டமான சூழலை உருவாக்கி வருகிறார். தென்காசியில் நடந்த சம்பவத்தில் இரு தரப்பினரிடையே மோதல் உருவாக்கும் வகையில் அவரது செயல்பாடுகள் உள்ளன என்றும் இந்து முன்னணியின் பின்புலத்தில் இருந்து இது போன்ற பதட்டமான சூழலை உருவாக்கி வருவதாக குற்றம் சாட்டினார். தமிழகம் அமைதியான நிலையில் உள்ளது இதனை கலைக்க வேண்டும் என்ற நிலையில் பாஜக, ஆர்எஸ்எஸ் போன்றவை அமைதியை கலைத்திட திட்டம் தீட்டி வருவதாகவும், குற்றம் சாட்டினர். சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் கூறிய நிதி பங்கீடு குறித்த தகவலை சுட்டிகாட்டிய அவர், தமிழகத்திற்கும், உத்தரபிரதேச மாநிலத்திற்கும் உள்ள வேறுபாடுகளை சுட்டிகாட்டினர். கேரளா தமிழகம் ஆகிய மாநிலங்களை வஞ்சிக்கும் நிலையை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது.
எடப்பாடி பழனிசாமியின் சிறுபான்மை மக்கள் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், ஜெயலலிதா இறப்பிற்கு பிறகு சிறுபான்மைக்கு எதிரான ஒன்றிய அரசின் ஒவ்வொரு சட்டங்களுக்கும் முதலில் குரல் கொடுத்து ஆதரவு தெரிவித்தவர் எடப்பாடி பழனிசாமி தான், சிஏஏ சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து விட்டு தற்போது சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக பேசி அவர்களின் ஆதரவு பெறலாம் என்று நினைப்பது பகல் கனவு தான் என்று கருத்து தெரிவித்தார்.
நீட் தேர்வு தொடர்பாக திமுக கையெழுத்து இயக்கம் நடத்துவது தொடர்பாக கேள்விக்கு அதற்கு அனைவரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றார். நீட் தேர்வு தொடர்பாக மாநில அரசு மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கையும் மேற்கொண்டாலும் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய மத்திய அரசு அதற்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதை எடப்பாடி பழனிசாமி கண்டிக்காமல் இருப்பது ஏன் என்றும் இப்போது கூட மோடிக்கு ஆதரவாக உள்ளார் என்றார். பாஜகவிற்கு ஆதரவாக உள்ளவர்களின் மட்டும் அமலக்கத்துறை சோதனை நடத்தாமல் இருப்பது ஏன் என்றும் தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஒன்றிய அரசு பெரிய நிறுவனங்களில் சோதனை நடத்துவது அவர்களை மிரட்டி தேர்தலுக்கு மறைமுகமாக நிதி திரட்டுவதாகவே தகவல்கள் தெரிவிப்பதாகவும் கூறினார்.
கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் கொடுக்க முன் வந்த போது, தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க கூடாது என்று 2 முறை கடையடைப்பு நடத்தி போராட்டம் நடத்தியது பாஜக மற்றும் அவர்களது ஆதரவான இயக்கங்கள் தான். தமிழகத்திற்கு தண்ணீர் கொடுப்பதை தடுப்பது கர்நாடக பாஜக தான். இரு மாநில பிரச்சனைகளில் கூட்டணி குறித்து குற்றம் சொல்வது நியாயம் இல்லை. பாஜகவை பொறுத்தவரை இரட்டை வேடம் போட்டு செயல்பட்டு வருவதாகவும் பாஜக தலைவர் அண்ணாமலை கர்நாடக பாஜகவிடம் பேசி போராட்டம் நடத்திட வேண்டாம் என்று ஏன் கூறவில்லை என்று கேள்வி எழுப்பினார். இலங்கை கடற்கொள்ளையர்களை கட்டுப்படுத்தும் பொறுப்பு ஒன்றிய பாஜக அரசுக்கு தான் உள்ளது. இலங்கை அரசின் செயல்பாட்டை இதுவரை மோடி கண்டிக்காமல் இருப்பது ஏன் என்றும் இந்த விவகாரத்தில் சீமான் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய அவர், நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீட்டில் எந்த பிரச்சனையும் இருக்காது. சுமுகமாக முடிந்து 40 தொகுதியிலும் இந்த கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.