Annamalai: திருச்செந்தூர் கோயிலில் 5 ஆயிரம் மாடுகளை காணவில்லை - அண்ணாமலை குற்றச்சாட்டு
பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலைய துறையே இல்லாமல் ஆக்கி விடுவோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டமானது தமிழ்நாட்டிலுள்ள அறநிலையத்துறையை கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டது.
அறநிலையத்துறை:
அப்போது பேசிய அண்ணாமலை, "பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலைய துறையே இல்லாமல் அனைத்து வேலைகளையும் சுலபமாக மாற்றி விடுவோம். இந்துக்களின் பாதுகாவலர்கள் என்று சொல்லக்கூடிய தி.மு.க. , ஒரு சிலையையாவது மீட்டு கொண்டு வந்தீர்களா? அதற்கான ஆவணங்கள் உள்ளதா? இந்து கோயில்களில் ஒரு எண்ணைய், விளக்கு திரி வாங்குவது என்றாலும் கூட EO கிட்ட கேட்க வேண்டியதுள்ளது. ஆனால், தேவாலயம் மற்றும் மசூதிகளில் இது போன்று கிடையாது. தமிழ்நாட்டில் கோயில்கள் இடிக்கப்படுகிறது, பக்தர்களின் பணம் சுரண்டப்படுகிறது.
மாடுகளை காணவில்லை:
திருச்செந்தூர் முருகன் கோவிலில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகளை காணவில்லை. திருச்செந்தூர் கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய மாடுகள் குறித்தான தகவல்கள் உள்ளன. அந்த மாடுகளை ஏலம் விட்டது யார்? மாட்டை திருடி சென்றனரா? என்பது குறித்தான தகவல்கள் தெரியவில்லை. வடிவேலு கிணற்றை காணும் என்பது போல் மாட்டை காணவில்லை" என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.