ஆளுநரை அரசியலுக்கு இழுக்கக்கூடாது இது தவறான செயல் - ஆர்.எஸ்.பாரதிக்கு புகழேந்தி அட்வைஸ்
ஆளுநரை அரசியலுக்கு இழுக்க கூடாது - கரூரில் அதிமுக ஓபிஎஸ் அணி செய்தி தொடர்பாளர் புகழேந்தி செய்தியாளர் சந்திப்பு.
கரூர் மாவட்ட அதிமுக ஓ.பி.எஸ் அணியின் மாவட்ட அலுவலகத்திற்கு அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் புகழேந்தி வந்திருந்தார்.
அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “பாராளுமன்ற தேர்தலில் ரவீந்திரநாத் மட்டும்தான் வெற்றி பெற்றார். தோல்வியடைந்த ஜெயக்குமார் பேசக்கூடாது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமியை மக்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. பொதுக்குழுவில் வீசிய பாட்டிலில் ஆசிட் அடித்திருந்தால் என்ன ஆவது? அங்கு பாதுகாப்பு இல்லை. கொள்ளைக்காரனும், கொலைக்காரனும் கட்சி நடத்துகிறார்கள். எல்லோரும் விரைவில் ஜெயிலுக்கு போக போகிறார்கள். கட்சி காப்பாற்றப்பட வேண்டும். எம்.ஜி.ஆர். மீட்டெடுத்த கட்சி இது.
தமிழகத்தில் DVAC சரியாக செயல்படவில்லை என எடப்பாடி சொல்வது சரி. ஏனென்றால், வேலுமணி, கொடநாடு உள்ளிட்ட பல வழக்குகள் அப்படியே உள்ளது. அவர்களை கைது செய்யவில்லை. அதனால்தான் விடியா அரசு என்று இந்த அரசை பேசுகிறார்கள். ஜெயலலிதா வழக்கு பற்றி சி.வி.சண்முகத்துக்கு என்ன தெரியும். அம்மா இறக்கும்போது நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் எதுவும் நடக்காது.
பூச்சாண்டி காட்டுகிறார்கள். பன்னீர்செல்வம் தலைமையில் கட்சி மீட்டெடுக்கப்படும். பணம் இருப்பதற்காக பழனிசாமி பின்னால் சுற்றுகிறார்கள். கரூர் மாவட்டமே விரைவில் நிச்சயமாக அண்ணன் தலைமையில் அதிமுக கோட்டையாக மாறும் எனப்பேசினார். முன்னதாக நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் திமுக பொதுக்கூட்டத்தில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ஆளுநரை தரக்குறைவாக கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஆளுநரை அரசியலுக்கு இழுக்கக்கூடாது இது தவறான செயல் என்று ஆர்.எஸ்.பாரதிக்கு அட்வைஸ் கூறினார்.