கரூர் உள்ளாட்சி இடைத் தேர்தல்: அதிரடி காட்டும் செந்தில்பாலாஜி...! அமைதி காட்டும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்!
’’கரூரில் வெளிப்படையாக செயல்வீரர்கள் கூட்டத்தை செந்தில் பாலாஜி நடத்தி வரும் நிலையில், பத்திரிக்கைகளுக்கு சொல்லாமல் ரகசியமான முறையில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தி வருகிறார்’’
கரூர் மாவட்டத்தில் சில பகுதிகளில் வார்டு உறுப்பினர் மற்றும் தலைவர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் தமிழகத்தில் 9 மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலை இந்த சேர்த்து தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது. இந்நிலையில் நேற்று கிருஷ்ணராயபுரம் தொகுதிக்குட்பட்ட ஒரு இடத்திலும், நொய்யல் பகுதியில் ஓரிடத்திலும் திமுக சார்பாக கூட்டணி கட்சிகளின் செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது. இதில் மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கலந்துகொண்டு தேர்தல் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் வெற்றி பெற நாம் தின்ணை பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும் என கூறினார்.
கட்டுக்கடங்காத திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் திருமண மண்டபம் நிறைந்து அதிகளவில் வெளியிலும் மண்டபத்தில் வாசலிலும் நின்று அவரது பேச்சை உன்னிப்பாக கவனித்து வந்தனர். அதேபோல் நேற்று யாருக்கும் தகவல் அளிக்காமல் வெள்ளியணை பகுதியில் உள்ள ஒரு தனியார் அதிமுக மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் மாவட்ட கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை வழங்கினர். அப்போது பேசிய முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக கழகச் செயலாளருமான எம். ஆர். விஜயபாஸ்கர் மின் தட்டுப்பாடு குறித்து நாளொன்றுக்கு பெரிய பெரிய கதைகளை விட்டு வருகிறார் நம்ம ஊரு ஆளு என்று சூட்சமமாக கூறினார். திமுக சார்பில் நடைபெற்ற கூட்டணிக் கட்சியின் செயற்குழு கூட்டத்திற்கு பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். ஆனால் அதிமுகவில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு பத்திரிக்கைகளுக்கு அழைப்பு விடாமல் மாலை போட்டோ மட்டும் அனுப்பி வைத்துள்ளனர்.
தமிழகத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் மட்டுமே நடைபெறுகிறது. மற்ற மாவட்டங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு மட்டும் இடைத்தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த 9 மாவட்டங்களை குறிவைத்தே காய்களை நகர்த்தி வரும் நிலையில் கரூர் மாவட்டத்தில் செந்தில் பாலாஜிக்கும், எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும் இடையே நடந்து வரும் இருதுருவ அரசியல் உள்ளாட்சி இடைத் தேர்தலிலும் எதிரொலிக்கத் தொடங்கி உள்ளது.
ஒரே நாளில் இரண்டு இடங்களில் திமுக செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தி தேர்தல் வேலைகளை துரிதமாக துல்லியமாக மேற்கொள்ள ஆணையிட்டு உள்ள திமுக மாவட்ட கழக பொறுப்பாளர் அமைச்சர் செந்தில்பாலாஜி அவருக்கு இணையாக ஓட வேண்டிய கட்டாயத்தில் கரூர் மாவட்ட அதிமுக மாவட்ட கழக செயலாளர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இருப்பதால் தளத்தில் ஜெயிக்கப்போவது திமுகவா, அதிமுகவா என்ற கேள்வி எழுந்துள்ளது.