ADMK Poster: ‘கபடதாரியை அடையாளம் காண்பீர்’ - ஓபிஎஸ்க்கு எதிராக சேலத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர்..!
ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாக அதிமுகவின் தொண்டர்கள் இரண்டாக பிரிந்து போஸ்டர் யுத்தத்தை தொடங்கியுள்ளனர்.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தேசிய மக்கள் இயக்கம் சார்பில் சேலம் மாநகரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஆகிய இருவரும் தலைமை பதவியை கைப்பற்ற போவது யார் என்ற போட்டியில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாக அதிமுகவின் தொண்டர்கள் இரண்டாக பிரிந்து போஸ்டர் யுத்தத்தை தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் சேலம் மாநகரப் பகுதிகளில் சில நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக சேலம் மாவட்ட அதிமுக செயலாளர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எதிரிகளை வதம் செய்ய சூரசம்ஹாரம் தொடங்கிவிட்டது என்பதை சித்தரிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி கையில் வேல் வைத்திருப்பது போன்ற படத்தில் சூரசம்ஹாரம் ஸ்டார்ட் என்ற வாசகங்களுடன் சேலம் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. ஒட்டப்பட்டிருந்த சில மணி நேரங்களில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் கிழிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியது. இந்நிலையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொந்த மாவட்டமாக சேலத்தில் அவருக்கு பலர் ஆதரவு தெரிவித்து வந்தாலும் ஒரு சிலர் எதிர்த்து வருகின்றனர். இதில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக சேலம் மாநகர் பகுதிகளில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
இந்த போஸ்டரில் அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் இன்றி ஒரு அணுவும் அசையாது தொண்டர்கள் சொல் கேளாமல் தன்னிச்சையாக செயல்படும் எடப்பாடி பழனிசாமியை கண்டிக்கிறோம் என்ற வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இந்த நிலையில் தற்போது தேசிய மக்கள் இயக்கம் சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக சேலம் மாநகரின் முக்கிய பகுதிகளான புதிய பேருந்து நிலையம், 4 ரோடு, அஸ்தம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதில் "வீரம் செரிந்த எமது தென்னகத்து தேவர் இன சொந்தங்களை தனது அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தும் கபடதாரியை அடையாளம் காண்பீர். தெய்வீக தேவரின மக்கள் ஒருபோதும் இந்த கபடதாரியை நம்ப மாட்டார்கள்" என்ற வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. வருகின்ற ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் அதிமுகவினர் இரண்டு தரப்பாக பிரிந்து போஸ்டரில் சண்டை போட்டுக் கொள்வது வேதனை அளிப்பதாகவும், நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான நிரந்தரம் முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று அதிமுகவின் தொண்டர்கள் கூறுகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்