(Source: ECI/ABP News/ABP Majha)
ஒரே தேர்தல் என்றால் இது தான் உங்களுக்கு கடைசி தேர்தல் - பாஜகவை எச்சரிக்கும் கீ.வீரமணி
திமுக தான் இந்தியாவையே காப்பாற்றுகிறது. தற்போது இந்தியா என்ற பெயர் சொல்வதற்கே மோடி பயப்படுகிறார். அதான் பாரதம் பாரதம் என்கின்றனர்.
திராவிடர் கழகம் சார்பில் ஒன்றிய பாஜக அரசின் குலத் தொழிலை திணிக்கும் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை எதிர்த்து நெல்லை பாளையங்கோட்டையில் மாபெரும் பொதுக்கூட்டம் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் திராவிட கழகத் தலைவர் கீ.வீரமணி கலந்து கொண்டு பேசுகையில், தமிழக இளைஞர்கள் படிக்க கூடாது என்ற நோக்கில் குலத்தொழில் திட்டத்தை திணிக்கும் ஒன்றிய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறோம். மீண்டும் குலத்தொழிலை திணிப்பது சமூதாயத்திற்கு பேராபத்தை ஏற்படுத்தும். 9 ஆண்டுகால பாஜக ஆட்சியில் நாடு வளர்ச்சிக்கு பதிலாக ஒவ்வொரு நாளும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். விஸ்வகர்மா யோஜனா திட்டம் சாதிய தொழிலை மீண்டும் உருவாக்கும் ஒரு திட்டமாகும். இது மோடியின் சூழ்ச்சித் திட்டம். நெல்லையில் சமீபத்தில் சாதி ரீதியாக இரண்டு பட்டியல் இன இளைஞர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறை நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் பின்னணியை நாம் பார்க்க வேண்டும்.
இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக இருக்கக்கூடிய ஒப்பற்ற முதல்வர் என்றால் அது ஸ்டாலின் தலைமையில் நடக்கும் திராவிட மாடல் ஆட்சி தான், இதை குறை சொல்ல வழியில்லை, ஆனால் தீண்டாமை குறித்து பேசுவதற்கே ஒருவர் அரசியல் நடத்துகிறார். அவர் தான் ஆளுநர். அவர் வேலையை விட்டு விட்டு சம்பந்தம் இல்லாமல் உளறுகிறார். எதை செய்யக்கூடாதோ அதை செய்கிறார். சாதிய தீண்டாமை பிரச்சினையில் காவல்துறை உடனடி நடவடிக்கை எடுத்துள்ளனர். மது அருந்தியதால் தான் சாதிய பிரச்சினை என்கின்றனர். ஆனால் நான் அடிக்கடி ஒரு விசயம் சொல்வதுண்டு. 5 வருடம் நாங்கள் சாதி ஒழிப்பு பிரச்சாரம் செய்யாததை சில நேரங்களில் டாஸ்மாக்கே செய்துவிடுகிறது. இந்த கொடுமைகளை சாதி தத்துவத்தை மீண்டு்ம் ஆணி அடிக்க வேண்டும், மனுதர்மத்தை எடுக்க வேண்டும், அதனை கல்வி மூலம் செய்ய வேண்டும், கை விலங்கு, கால் விலங்கை விட மூளைக்கு போடும் விலங்கு மிக ஆபத்தான விலங்கு" என்றார்.
"70 ஆண்டுகளுக்கு முன் திராவிட இயக்கம் போராடி குலக்கல்வி திட்டத்தை ஒழித்தது. அதனால்தான் இன்று நாம் கல்வி கற்க முடிகிறது, வேலைக்கு செல்லும் நிலை உள்ளது. தமிழகம் கல்வியில் அபார வளர்ச்சி அடைந்துள்ளது. இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஒன்றிய அரசு, விஸ்வகர்மா யோஜனா திட்டம், நீட்தேர்வு போன்றவைகளை கொண்டு வருகிறது. இதனை எதிர்த்து தமிழகத்தில் தொடர்ந்து போராட்டம் ஜனநாயக முறைப்படி நடந்து வருகிறது. தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்ந்து வருகிறது. இதனை சீர்குலைக்கவே ஒன்றிய அரசு இதுபோன்ற திட்டங்களை கொண்டு வருகிறது. 2024 இல் I.N.D.I.A கூட்டணி தான் வெற்றி பெற போகிறது. திமுக தான் இந்தியாவையே காப்பாற்றுகிறது. தற்போது இந்தியா என்ற பெயர் சொல்வதற்கே மோடி பயப்படுகிறார். அதான் பாரதம் பாரதம் என்கின்றனர். ஒரே தேர்தல் என்பதை நாமும் சொல்கிறோம். ஒரே தேர்தல் என்றால் இது தான் உங்களுக்கு கடைசி தேர்தல். பிஜேபி ஆட்சி என்பது இந்தியாவில் எந்த மூலையிலும் வர முடியாது.. இன்னும் 6 மாதம் மட்டுமே அதன்பின்பு நாட்டில் எந்த மூலையிலும் பாஜக ஆட்சி இல்லாத நிலை ஏற்படும் 2024 தேர்தல் பாஜகவை வழியனுப்பும் ஒரே தேர்தலாக இருக்கும்" என தெரிவித்தார்.