பயணிகளுக்கு செம ஜாக்பாட்! பயணப் பாதுகாப்பு இனி உறுதி - ஜெர்மன் தொழில்நுட்ப எல்.எச்.பி. புதிய ரயில் பெட்டிகள்..
பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியை மேம்படுத்தும் வகையில், தாம்பரம் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் நவீன எல்.எச்.பி. பெட்டிகள் இணைக்கப்படுவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

திருச்சி: இந்தியாவின் பொதுப் போக்குவரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் ரயில்வே துறை, பயணிகளின் பாதுகாப்பையும், அவர்களது பயணத்தை மிகவும் வசதியாகவும் மாற்றுவதற்காக பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தென்னக ரயில்வே நிர்வாகம் திருச்சிராப்பள்ளி கோட்டத்திற்கு உட்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களில் இதுவரை பயன்பாட்டில் இருந்த பழைய வகை மரபுசார் (Conventional) பெட்டிகளை மாற்றிவிட்டு, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன எல்.எச்.பி. (Linke-Hofmann-Busch - LHB) பெட்டிகளை இணைக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த மாற்றமானது பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றுவதோடு, விபத்து காலங்களில் உயிரிழப்புகளைத் தவிர்க்கும் வகையில் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பயணிகளின் பாதுகாப்பும் வசதியும் முதன்மை நோக்கம்
ரயில் பயணத்தின் போது பயணிகளுக்குத் தடையற்ற பாதுகாப்பு வழங்குவதையும், அதிர்வற்ற சுகமான பயண அனுபவத்தை உறுதி செய்வதையுமே தென்னக ரயில்வே தனது முதன்மைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. வழக்கமான ரயில் பெட்டிகளுடன் ஒப்பிடும்போது, ஜெர்மன் தொழில்நுட்பமான எல்.எச்.பி. பெட்டிகள் எடையில் மிகவும் குறைவானதாகவும், ஆனால் அதிக உறுதி கொண்டதாகவும் தயாரிக்கப்படுகின்றன.
மேலும், இந்த நவீன பெட்டிகள் அதிநவீன ஏர் சஸ்பென்ஷன் (Air Suspension) அமைப்பைக் கொண்டுள்ளதால், ரயில் வேகமாகவும் வளைவுகளில் செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் பெரிதும் குறைக்கப்பட்டு பயணிகளுக்கு மிகவும் வசதியான சூழல் உருவாக்கப்படுகிறது. இந்த எல்.எச்.பி. பெட்டிகள் அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம் ரயிலின் ஒட்டுமொத்த தரம் மேம்படுவதுடன், பயண நேரம் மற்றும் பயணத்தின் போது ஏற்படும் சோர்வு போன்றவையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எக்ஸ்பிரஸ் ரயிலில் எல்.எச்.பி. பெட்டிகள் இணைப்பு
தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, தாம்பரம் மற்றும் ராமேஸ்வரம் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் இந்த புதிய பெட்டிகள் மாற்றப்பட உள்ளன. அதன்படி, ரயில் எண் 16751 மற்றும் 16752 கொண்ட தாம்பரம் - ராமேஸ்வரம் - தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில் ஆனது, முழுமையான நவீன எல்.எச்.பி. பெட்டிகளுடன் இயங்கும் வகையில் மாற்றியமைக்கப்படவுள்ளது.
தாம்பரத்தில் இருந்து புறப்படும் ரயில்களுக்கு வருகிற 2026 -ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி முதல் இந்த புதிய எல்.எச்.பி. பெட்டிகள் நடைமுறைக்கு வரவுள்ளன. அதேபோல், மறுமார்க்கமாக ராமேஸ்வரத்தில் இருந்து தாம்பரம் நோக்கி இயக்கப்படும் ரயிலுக்கு 2027-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 03-ஆம் தேதி முதல் இந்த நவீன பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படவுள்ளன என்பதை ரயில்வே நிர்வாகம் தெளிவாகத் தெரிவித்துள்ளது.
புதிய பெட்டிகளின் அமைப்பு மற்றும் விவரங்கள்
இந்த எல்.எச்.பி. பெட்டி மாற்றத்தைத் தொடர்ந்து, தாம்பரம் - ராமேஸ்வரம் - தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஒட்டுமொத்த பெட்டி அமைப்பும் (Composition) முழுமையாக மாற்றிமைக்கப்பட்டு திருத்தப்பட்டுள்ளது. புதிய கட்டமைப்பின்படி, இந்த ரயிலில் மொத்தம் 22 பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன. இதில் 1 குளிர்சாதன முதலாம் வகுப்புப் பெட்டியும் (AC First Class Coach), 1 இரண்டாம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டியும் (AC Two Tier Coach), மற்றும் 4 மூன்றாம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டிகளும் (AC Three Tier Coaches) இடம்பெறுகின்றன. மேலும், நடுத்தர மற்றும் சாதாரண வர்க்கப் பயணிகளின் வசதிக்காக 10 ஸ்லீப்பர் வகுப்புப் பெட்டிகளும் (Sleeper Class Coaches), 4 பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகளும் (General Second Class Coaches) இணைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, மாற்றுத்திறனாளி பயணிகளின் நலனைப் பாதுகாக்கும் வகையில் திவ்யாங்ஜன் நட்புணர்வு கொண்ட (Divyangjan Friendly) 1 இரண்டாம் வகுப்புப் பெட்டியும், மற்றும் 1 லக்கேஜ் மற்றும் பிரேக் வேன் (Luggage cum Brake Van) பெட்டியும் இந்த புதிய ரயிலின் கட்டமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்























