பள்ளி மாணவர்களின் உயிருக்கு உலைவைக்கும் மூங்கில் பாலம்: பள்ளி மாணவர்கள் தினசரி மரணப் போராட்டம்...
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆற்றை கடக்க நிரந்தர பாலம் இல்லாததால் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் ஆபத்தான முறையில் உயிரை பணயம் வைத்து பள்ளிக்கு சென்று வரும் அவலநிலை நிலவிவருகிறது.

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்காவிற்கு உட்பட்ட கடைமடைப் பகுதிகளில் நிலவும் அடிப்படை வசதிக் குறைபாடுகள் தற்போது பள்ளி மாணவர்களின் உயிர் பாதுகாப்பிற்கே கேள்விக்குறியாக மாறியுள்ளன. சீர்காழி ஒன்றியத்தில் உள்ள மாத்தாம்பட்டிணம் கிராம மக்கள் அன்றாட தேவைகளுக்காகவும், பள்ளி மாணவ மாணவிகள் கோணயாம்பட்டிணம் பள்ளிக்குச் செல்ல அப்பகுதியில் உள்ள முல்லையாற்றை கடக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகளைக் கடந்தும், இங்கு ஒரு கான்கிரீட் பாலம் இல்லாததால், மக்கள் தங்களின் உயிரைப் பணயம் வைத்து மூங்கில் பாலத்தைப் பயன்படுத்தி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆபத்தான பயணம்: முல்லையாற்றின் அவலம்
காவிரி ஆற்றின் கடைமடைப் பகுதியாக விளங்கும் முல்லையாறு, மாத்தாம்பட்டிணம் மற்றும் கோணயாம்பட்டிணம் ஆகிய இரு கிராமங்களை பிரிக்கிறது. கோணயாம்பட்டிணத்தில் உள்ள பள்ளிக்குச் செல்ல வேண்டுமென்றால் மாத்தாம்பட்டிணம் கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் இந்த ஆற்றைக் கடந்துதான் செல்ல வேண்டும்.
இந்த ஆற்றில் பாலம் இல்லாததால், பல ஆண்டுகளுக்கு முன்பே கிராம மக்களே ஒன்றிணைந்து தங்கள் சொந்த முயற்சியால் மூங்கில் மரங்களைக் கொண்டு தற்காலிகப் பாலம் ஒன்றை அமைத்தனர். பராமரிப்பு இன்றி தவிக்கும் இந்த மூங்கில் பாலம், தற்போது பெய்த மழையாலும், ஆற்றின் நீரோட்டத்தாலும் கடும் சேதமடைந்து காணப்படுகிறது. பாலத்தின் பல இடங்கள் உடைந்தும், வழுக்கும் தன்மையுடனும் இருப்பதால், இதன் மேல் நடந்து செல்வது கயிறு மேல் நடப்பது போன்றதொரு சாகசமாக மாறியுள்ளது.
மயிலாடுதுறை: எட்டாக்கனியாகும் சுதந்திர காலக் கோரிக்கை..
நன்றி: துரை.கோபி & ஜெக.சண்முகம் pic.twitter.com/swXF7NA9py
">
விபத்தில் சிக்கிய மாணவி: பெற்றோர்கள் அச்சம்
இந்த ஆபத்தான பாலத்தைக் கடக்கும்போது அசம்பாவிதங்கள் நிகழலாம் என்ற அச்சம் நிலவி வந்த சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளிக்குச் சென்ற மாணவி ஒருவர் பாலத்தின் பிடிமானம் நழுவி நிலைதடுமாறி ஆற்றுக்குள் விழுந்துள்ளார். அதிர்ஷ்டவசமாக அருகிலிருந்தவர்கள் மீட்ட போதிலும், அந்த மாணவியின் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. "ஒவ்வொரு நாளும் எங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும்போது, அவர்கள் பத்திரமாகத் திரும்புவார்களா? என்ற அச்சத்திலேயே இருக்கிறோம். ஒரு பாலம் இல்லாத காரணத்தால் எங்கள் குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாக வேண்டுமா?" எனப் பெற்றோர் கண்ணீர் மல்கக் கேள்வி எழுப்புகின்றனர்.
எட்டாக்கனியாகும் சுதந்திர காலக் கோரிக்கை
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "நாங்கள் சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்தே இங்கு ஒரு கான்கிரீட் பாலம் கட்டித் தரக் கோரி தொடர்ந்து மனு அளித்து வருகிறோம். தேர்தல் நேரத்தில் வாக்குச் சேகரிக்க வரும் வேட்பாளர்கள் அனைவரும் 'நிச்சயம் பாலம் கட்டித் தருவோம்' என வாக்குறுதி அளிக்கிறார்கள். ஆனால், வெற்றி பெற்ற பிறகு யாரும் இந்த பக்கம் திரும்புவது கூட இல்லை. அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், நிதி ஒதுக்கீடு, ஆய்வு என காலம் கடத்தப்படுகிறதே தவிர, ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை" என வேதனை தெரிவிக்கின்றனர்.
சமூக ஆர்வலர்களின் கோரிக்கை
இப்பிரச்சனை குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், "தமிழக அரசு 'இல்லம் தேடி கல்வி', 'புதுமைப் பெண்' போன்ற பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வரும் வேளையில், அடிப்படை வசதியான பாலம் இல்லாததால் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல அஞ்சுவது வேதனைக்குரியது. மழைக் காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் இந்த கிராமங்கள் முற்றிலுமாகத் துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது. உயிரிழப்புகள் ஏற்படும் வரை அரசு காத்திருக்காமல், உடனடியாகத் தலையிட வேண்டும்" என வலியுறுத்தியுள்ளனர்.
அரசின் கவனத்திற்கு..
காவிரி டெல்டா மாவட்டமான மயிலாடுதுறையில், கடைமடைப் பகுதி மக்கள் இன்றும் அடிப்படை வசதிகளுக்காகப் போராடி வருவது நிர்வாகத்தின் மெத்தனப் போக்கையே காட்டுகிறது. எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சனையை சிறப்பு நேர்வாகக் கருதி, "போர்க்கால அடிப்படையில்" முல்லையாற்றின் குறுக்கே உயர்மட்ட கான்கிரீட் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.






















