இந்த வாக்குச்சாவடிகளில் உஷாராக இருக்கணும் - மயிலாடுதுறை ஆட்சியர் எச்சரிக்கை
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 288 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆய்வு
பாராளுமன்ற தேர்தல் தேதி நாளை தேர்தல் ஆணையம் மூலம் அறிவிக்கப்பட உள்ளது. இதன் இடையே மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 288 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. இதில் 14 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர்.
சீர்காழி வாக்குச்சாவடிகள்
சீர்காழி தென்பாதி வி.தி.பி.நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்து வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கப்படுவது குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து சீர்காழி அடுத்த மேலையூர் சீனிவாசா மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி, மணி கிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி ஆகியவற்றிலும் ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்தனர். கடந்த கால தேர்தலில் வாக்குச்சாவடிகளில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெற்றனவா போன்ற விவரங்களை அப்போது விரிவாக ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் கேட்டறிந்தனர். வாக்குச்சாவடிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் ஆட்சியர் அறிவுறுத்தினார்.
மேலும், மயிலாடுதுறை வட்டம் பட்டமங்களம் ஊராட்சி அங்கன்வாடி மையம், சீனிவாசபுரம் கம்பர் தெருவில் உள்ள லயன்ஸ் கிளப் தொடக்கப் பள்ளி, திருஇந்தளூர் நகராட்சி உயர்நிலைப் பள்ளி ஆகிய பகுதியில் வாக்கு சாவடி மையங்கள், தரங்கம்பாடி வட்டம் கருவாழக்கரை ஊராட்சி மருதூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளிலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இருவரும் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் வாக்குச்சாவடிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.
பள்ளியில் ஆட்சியர்
தொடர்ந்து, சீர்காழி வட்டம், மணிக்கிராமம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், பள்ளி மாணவிகளின் கற்றல் திறனையும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்கு தயார் செய்யப்பட்டுள்ள மதிய உணவின் தரத்தினையும் ஆய்வு செய்தார். இவ்வாய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.மீனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) செல்வம், மயிலாடுதுறை வட்டாட்சியர் விஜயராணி, சீர்காழி வட்டாட்சியர் இளங்கோவன், தரங்கம்பாடி வட்டாட்சியர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.