மதுபோதையில் முந்திரி மரங்களுக்கு தீ வைக்கும் மது பிரியர்கள் - விவசாயிகள் அதிர்ச்சி
சீர்காழி அருகே அரசு மதுபான கடையால் அல்லல்படும் விவசாயிகள் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கிராமத்தில் செயல்படும் அரசு மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்ற வில்லை எனில் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என அப்பகுதி விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
டாஸ்மாக் பிரச்சினை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் ஊராட்சியில் அரசு மதுபான கடையான டாஸ்மாக் கடை பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. ஆரம்ப காலத்தில் முதல் முதலாக அரசு சார்பில் திருமுல்லைவாசல் அரசினர் மாதிரி மேல்நிலைப் பள்ளி அருகே அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த கடையினை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வந்தனர். அதன் விளைவாக அங்கிருந்து டாஸ்மாக் கடையினை சற்று ஊருக்கு வெளியே கொண்டு சென்றனர்.
மீண்டும் மாற்றப்பட்ட டாஸ்மாக்
ஆனால், அப்பகுதி சீர்காழி திருமுல்லைவாசல் செல்லும் பிரதான நெடுஞ்சாலை என்பதால் டாஸ்மாக் அமைந்திருந்த இடத்தில் தொடர்ந்து விபத்துகள் நடைபெற்று வந்தன. அதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் பல்வேறு கட்சி மற்றும் அமைப்பினர் மீண்டும் டாஸ்மாக் கடையினை இடம் மாற்றம் செய்ய கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் சுமூக முடிவு எட்டப்படததால் அந்த இடத்தில் இருந்தும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை வேறு இடமான திருமுல்லைவாசல் தொடுவாய் சாலையில் குடிருப்புகள் இல்லாத இடத்திற்கு மாற்றப்பட்டது.
விவசாயிகள் எதிர்ப்பு
இந்நிலையில் சூழலில் அப்பகுதி முழுவதும் முந்திரி மற்றும் சவுக்கு மரங்களை அப்பகுதி விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது டாஸ்மாக் கடை அப்பகுதியில் செயல்பட்டு வரும் நிலையில், அங்கு மது வாங்க வரும் மது பிரியர்கள் மதுவை வாங்கி கொண்டு அருகில் உள்ள முந்தரி மற்றும் சவுக்க காடுகளில் அமர்ந்து மது அருந்தி வருகின்றனர். அவர்கள் மது அருந்துவது மட்டும் இன்றி மது பாட்டில்களை உடைந்து போடுவது, பிளாஸ்டிக் கவர்கள், வாட்டர் பாட்டில்கள் என விளை நிலங்களில் போட்டு விடுகின்றனர். இவை எல்லாவற்றுக்கும் மேலாக குடி போதையில் முந்தரி மற்றும் சவுக்கு மரங்களுக்கு தீவைத்து விட்டு சென்று விடுகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் முந்தரி மரங்கள் தீயிக்கு இரையாகினர். இந்த சூழலில் தற்போது மீண்டும் முந்திரி மரத்திற்கு தீவைத்து சென்றுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மதுகடையினை வேறு இடத்திற்கு மாற்ற கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.
எச்சரிக்கை விடுக்கும் விவசாயிகள்
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தொடர்ந்து மது அருந்திவிட்டு அடிக்கடி அப்பகுதியில் செல்லக்கூடிய பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் மது பிரியர்கள் தகராறில் ஈடுபடுகின்றனர். அதுமட்டுமின்றி கடந்த சில தினங்களுக்கு முன்பு டாஸ்மாக் அருகே உள்ள முந்திரி காட்டை மதுபோதையில் இருந்த சிலர் தீவைத்து எரித்துவிட்டனர். இதனால் தங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது, ஆகையால் தங்கள் பகுதியில் செயல்படும் அரசு மதுபான கடையை அகற்றி வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும், இந்த கடையால் விவசாயக் கூலி தொழிலாளர்கள் உட்பட பலரும் மதுவிற்கு அடிமையாகும் சூழல் ஏற்பட்டுள்ளது என மனுவில் குறிப்பிட்டு மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளதாகவும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க விட்டால் விவசாயிகள் அனைவரையும் ஒன்று திரட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர். மேலும் மனுவினை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உரிய நடவடிக்கை எடுப்பதாக அப்போது உறுதியளித்தார்.