மீனவர்களுக்கு பயனளிக்கும் இப்படி ஒரு ஆராய்ச்சி மையமா..! எங்கே தெரியுமா..?
எம்.எஸ்.சுவாமிநாதன் உருவாக்கிய அனைவருக்கும் மீன் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் 15-ஆம் ஆண்டு விழா பூம்புகாரில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்திய கடலோர சமுதாயத்தில் நிலைத்தன்மை மற்றும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் பொருட்டு, மறைந்த வேளாண் விஞ்ஞானி முனைவர். எம்.எஸ்.சுவாமிநாதன் நிறுவிய அனைவருக்கும் மீன் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் 2025 ஜனவரியில் தனது பதினைந்து ஆண்டை நிறைவு செய்கிறது. 2004-ம் ஆண்டு நம் நாட்டின் கடலோர பகுதிகளை உலுக்கிய மாபெரும் பேரிடரான சுனாமியின் எதிரொலியாக இந்த நிறுவனம் டாடா அறக்கட்டளையின் நிதியுதவி உடன் 2009 டிசம்பர் 26 அன்று இந்த மையம் உருவாக்கப்பட்டது.
மையத்தின் நோக்கம்
வளங்குன்றா கடலோர விரிவாக்கத்திற்கான அவசர தேவையை பூர்த்தி செய்தல், பேரிடர் தயார் நிலையை பலப்படுத்துதல், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மீனவ சமுதாயத்தை மீட்டெடுத்தல் போன்ற தெளிவான கொள்கைகள் உடன் இந்த நிறுவனம் தன் பயணத்தை துவங்கியது. இந்த பதினைந்து ஆண்டுகளில் அனைவருக்கும் மீன் நிறுவனமானது சமூகம் சார்ந்த ஆராய்ச்சி, தொழில்நுட்பம் மற்றும் கூட்டு முயற்சி போன்றவற்றின் மாற்றும் ஒன்றாக செயல்பட்டு வருகிறது.
பயனடைந்த 3 லட்ச மீனவர்கள்
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரை அடிப்படையாக இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் 5 இந்திய மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 22 கடலோர மாவட்டங்களை சென்றடைந்து மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவ மக்களுக்கு வளங்குன்றா மீன்வளம், கடல் பாதுகாப்பு மற்றும் சமுதாய வாழ்வாதாரம் ஆகியவற்றில் பயனளித்து வருகிறது. இந்நிறுவனம் உருவாக்கிய புதுமையான கைப்பேசி செயலி 'மீனவ நண்பன்' உண்மை கால வானிலை விவரங்கள், முன்கூட்டிய எச்சரிக்கைகள், மீன்பிடி பகுதிகள் பற்றிய வழிகாட்டல்கள் போன்ற அவசியமான தகவல்களை மீனவர்களுக்கு வழங்கி வருகிறது.
33.3 டன் கடல் குப்பைகள் சேகரிப்பு
இந்த நிறுவனத்தின் முக்கியத்துவம் அதன் திட்டங்களில் மட்டுமின்றி, தொலைதூர மாற்றங்களை வினையூக்குவதிலும் இருக்கிறது. செயற்கை பவளப்பாறைகளை நிறுவுதல் போன்ற கடல் பாதுகாப்பு செயல்பாடுகள் மூலம் இந்த மையம் கடலில் பல்லுயிர் தன்மை மற்றும் மீன் வளத்தை 25% அதிகரித்தாக கூறப்படுகிறது. உபரி மீன்பிடியை குறைக்கும் சாதனங்களின் செயல்விளக்கம் மற்றும் 33.3 டன் கடல் குப்பைகள் சேகரிப்பு மூலம் மையம் எண்ணற்ற கடல்வாழ் சிற்றினங்களை காப்பாற்றி உள்ளது. இது சுற்றுசூழல் பாதுகாப்பு மீதான மையத்தின் அக்கறையை காட்டுகிறது.
அது போல கடலோர சமுதாயத்தை குறிப்பாக மீனவ பெண்கள் மற்றும் சிறு-குறு மீனவர்களை மேம்படுத்துவதில் மையம் முக்கிய பங்கு வகிக்கிறது. தனது தனிநபர் திறமை வளர்ப்பு மற்றும் வாழ்வாதார திட்டங்கள் மூலம் பல மீனவர் மற்றும் மீனவ பெண்களை தொழில் முனைவர்கள் மற்றும் தலைவர்களாக உருமாற்றி உள்ளது. இந்த மையத்தின் ஆதரவால் உருவான வெற்றிப்பாவை, பாரதிதாசன், மற்றும் காவேரி மீன் உற்பத்தியாளர் கம்பெனிகள் போன்றவை கூட்டு முயற்சியின் பலன், வேலை வாய்ப்பு உருவாக்கம் மற்றும் கடலோர குடும்பங்களுக்கு வருவாய் உற்பத்தி செய்தல் ஆகிய நன்மைகளுக்கு சான்றாக அமைந்துள்ளது.
15 -ம் ஆண்டு விழா
இத்தகைய சிறப்பு மிக்க இந்த மையம் பதினைந்து ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, அதனை கொண்டாடுவதன் முலம் இந்த மையம், எதிர்நோக்கி வரும் சவால்களான காலநிலை மாற்றம், கடல்சார் பல்லுயிர் தன்மையை பாதுகாப்பு மற்றும் சமான வளங்கள் மேலாண்மை ஆகியவற்றை நோக்கிய செயல்பாடுகளை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு விழா கொண்டாட்டம், இந்நிறுவனத்தின் கடந்தகால சாதனைகளின் எதிரொலியாக மட்டும் அல்லாமல் எதிர்கால நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுக்கும் வகையிலும் அமைந்தது.
இந்த ஆண்டுவிழா நிகழ்வில் அனைவருக்கும் மீன் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் 15 ஆண்டு செயல் அறிக்கை , மீன் விற்பனை செய்யும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் தீர்வுக்கான கொள்கைச் சுருக்கம், சிறு-குறு மீனவர்களுக்கான புதிய வாழ்வாதாரத் திட்டம், தனிப்பயனாக்கப்பட்ட சிறிய வகையிலான சூரிய மீன் உலர்த்திகள், மீன் பதபடுத்தும் முறைகள் குறித்த டிஜிட்டல் கல்வியறிவு தொகுப்பு, கடல் வள பாதகாப்பு மற்றும் மீனவ மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக தன்னார்வமாக பணிபுரியும் உள்ளூர் நிபுணர்களை அங்கீகரித்தல் போன்றவைகள் நடைபெற்றன.
Dr.சௌமியா சுவாமிநாதன் பேச்சு
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக .எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் Dr.சௌமியா சுவாமிநாதன் ஆன்லைன் மூலமாக பங்கேற்று உரையாற்றினார். சிறப்பித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் அனைவருக்கும் மீன் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் கடந்த 15 ஆண்டுகளாக மக்களின் முன்னேற்றத்திற்காக செய்யும் பல்வேறு சேவைகளையும், காலநிலை மாறிவரும் சூழலில் நம்மை நாம் எவ்வாறு பாதுகாத்து கொள்வது பற்றியும், இதற்காக அரசு பின்பற்ற வேண்டிய யுத்திகள் பற்றியும், பெண்களுக்கான முன்னேற்றம் பற்றியும் விரிவாக பேசினார். மேலும் காலநிலை மாற்றம் மற்றும் மீனவர் உடல்நலம் குறித்த பிரத்யேக ஆராய்ச்சியில் ஈடுபட போவதாக குறிப்பிட்டார். மேலும் இந்த நிகழ்ச்சியில் 23 கிராமங்களிலிருந்து ஏராளமான மீனவர்களும், மீனவ பெண்களும், உள்நாட்டு மீன் வளர்ப்பு விவசாயிகளும் நேரடியாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆன்லைனிலும் கலந்து கொண்டனர்.