ஷவர் வசதியுடன் கூடிய நீச்சல் குளத்தில் கும்மாளம் - உற்சாகத்தில் யானை அபயாம்பிகை
மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தின் அபயாம்பிகை யானைக்கு 45 லட்சம் மதிப்பீட்டில் நீச்சல் மற்றும் குளம் தங்கும் அறைக்கான திறப்பு விழா இன்று நடைபெற்றது.
மயூரநாதர் கோயில் வரலாறு
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் தேவாரப் பாடல்கள் பெற்ற 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மயூரநாதர் ஆலயம் அமைந்துள்ளது. பார்வதி தேவியின் தந்தை தட்சன் நடத்திய யாகத்துக்கு சிவனை அழைக்காத காரணத்தால் சிவன் பார்வதி தேவியை யாகத்துக்கு செல்ல அனுமதிக்கவில்லை. ஆனால் சிவனின் பேச்சை மீறி யாகத்திற்கு பார்வதி தேவி சென்றுள்ளார். அதனால் சினம் கொண்ட சிவபெருமான், வீரபத்திரர் அவதாரம் எடுத்து யாகத்தை தடுத்து நிறுத்தியுள்ளார். மேலும், தன் சொல்லை மீறி யாகத்திற்கு சென்றதால் அம்பாள் பார்வதி தேவியை மயில் வடிவம் எடுக்கும்படி சிவன் சாபம் இட்டார்.
அதனால் மயிலாக மாறிய அம்பாள் பார்வதி இந்த கோயில் இருக்கும் இடத்திற்கு வந்து சிவனை நோக்கி தவமிருந்தார். சிவனும் இங்கு மயில் வடிவத்தில் வந்து அம்பாளின் தவத்தில் மகிழ்ந்து அவருக்கு கெளரி தாண்டவ தரிசனம் தந்து அம்பாளின் சுயரூபம் பெற அருள் செய்தார். சிவபெருமான் மயில் வடிவத்தில் வந்து அருள் செய்ததால் இவ்வாலயத்தில் உள்ள சிவன் மாயூரநாதர் என பெயர் பெற்றார். இந்த வரலாற்றின் அடிப்படையில் உருவான கோயில் இதுவாகும்.
அபயாம்பிகை யானை வருகை
திருவாவடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான இந்த ஆலயத்திற்கு 1972 -ஆம் ஆண்டு மூன்று வயது குட்டியாக அபயாம்பிகை யானை அழைத்துவரப்பட்டது. மூன்று தலைமுறைகளாக யானை பாகன்கள் குடும்பத்தினர் யானையை பராமரித்து வருகின்றனர். மயிலாடுதுறை மக்களின் செல்ல பிள்ளையாகவும் மயிலாடுதுறை அடையாளங்களில் ஒன்றான இந்த யானை, மயிலாடுதுறையில் நடைபெறும் அனைத்து ஆலய விழாக்களில் முன்னே செல்வது வழக்கம். தற்போது அபயாம்பிகை யானைக்கு 56 வயதாகிறது.
ஷவர் பாத்துடன் கூடிய நீச்சல் குளம்
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி மாவட்ட வளர்ப்பு யானைகள் மேலாண்மை திட்டம் 2011-ன் கீழ் ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் யானை தங்கும் அறை 28 அடி உயரம் 30 அடி அகலம் 25 அடி நீளத்திலும் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் யானை குளிப்பதற்கு ஷவர் பாத்துடன் உள்ள பிரம்மாண்ட நீச்சல் குளம் கோயில் நிர்வாகத்தினரால் அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து யானை தங்கும் அறை மற்றும் நீச்சல் குளம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. முன்னதாக சிறப்பு ஹோமங்கள் கோபூஜை, கஜபூஜை, செய்யப்பட்டு புதிதாக கட்டப்பட்ட யானைக் கோட்டகையை ஆலயத்தின் தலைமை அர்ச்சகர் சுவாமிநாத சிவாச்சாரியார் திறந்து வைத்தார். தொடர்ந்து யானை அபயாம்பிகை உள்ளே சென்று யானைக்கு சிறப்பு பூஜைகள் மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.
உற்சாகத்தில் அபயாம்பிகை யானை
தொடர்ந்து நீச்சல் குளத்தில் அபயாம்பிகை யானை முதல் முறையாக உற்சாகத்துடன் நீராடியது. நீச்சல் குளத்தில் இறங்கிய யானை அபயாம்பிகை மகிழ்ச்சியுடன் தண்ணீரில் உருண்டு புரண்டு உற்சாகமாக பிளிறியவாறு ஆனந்த் குளியல் இட்டது. ஷவர் பாத்திலும் உற்சாகம் பொங்க யானை குளித்தது பொது மக்களை பரவசப்படுத்தியது. யானை குளிக்கும் காட்சிகளை ஆர்வமுடன் பொதுமக்கள் தங்கள் செல்போனில் படம் பிடித்தனர். யானை அபயாம்பிகை குளிப்பதற்கு முன்பு இருந்த ஷவர் வசதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற கோயில் கும்பாபிஷேகத்தின் போது அகற்றப்பட்ட நிலையில் தற்போது நீச்சல் குளத்துடன் புதிதாக ஷவர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மயிலாடுதுறை மக்களின் செல்லப்பிள்ளையாக திகழும் அபயாம்பிகை யானைக்கு வெள்ளி கொலுசு, கழுத்து செயின், விலை உயர்ந்த ஆடைகள் என பக்தர்கள் பலரும் வாங்கி கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.