நாற்பது ஆண்டு கால ஏக்கம் தீர்ந்தது: காரைக்கால் - பேரளம் தண்டவாளங்களில் மீண்டும் கேட்கும் ரயில்வே ஹார்ன்!
காரைக்கால் - பேரளம் இடையே சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட வேண்டும் என்ற பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை: தமிழக டெல்டா மாவட்ட மக்களின் பல தசாப்த கால கனவு நனவாகியுள்ளது. காரைக்கால் - பேரளம் இடையே சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு ரயில் போக்குவரத்து நடைமுறையில் இருந்தது. காலப்போக்கில் இந்த தடம் கைவிடப்பட்ட நிலையில், இந்தப் பாதையை மீண்டும் அகல ரயில் பாதையாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதனை தொடர்ந்து அப்பகுதி மக்களின் தொடர் கோரிக்கையை ஏற்று மீண்டும் வழித்தடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று முடிந்தது. அதனை அடுத்து முன்னதாக காரைக்கால் துறைமுகத்திற்கு சரக்கு ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது மக்களின் இந்த நீண்ட கால கோரிக்கையை ஏற்று, ரயில்வே வாரியம் காரைக்கால் - பேரளம் புதிய தடத்தில் புதிய ரயில் சேவைகளைத் தொடங்க அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, நாளைய தினம் மே 20-ஆம் தேதி முதல் இந்த வழித்தடத்தில் பயணிகள் ரயில்கள் மீண்டும் சீறப்பாய உள்ளன.
புதிய தினசரி ரயில் சேவைகள்
மயிலாடுதுறை மற்றும் வேளாங்கண்ணி/காரைக்கால் இடையே புதிய தினசரி ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன:
1.வேளாங்கண்ணி - மயிலாடுதுறை தினசரி பாசஞ்சர் (56008/56007): மே 20 முதல் மயிலாடுதுறையிலிருந்தும், மே 21 முதல் வேளாங்கண்ணியிலிருந்தும் இயக்கப்படும். இது வேளாங்கண்ணியிலிருந்து காலை 06.30-க்குப் புறப்பட்டு, காரைக்கால் (07.29), பேரளம் (08.16) வழியாக காலை 08.40-க்கு மயிலாடுதுறையை அடையும்.
2. மயிலாடுதுறை - காரைக்கால் தினசரி பாசஞ்சர் (56009/56010): காரைக்காலில் மதியம் 12.45-க்குப் புறப்பட்டு மதியம் 14.15-க்கு மயிலாடுதுறை சென்றடையும். மயிலாடுதுறையிலிருந்து காலை 09.35-க்குப் புறப்படும். இந்த ரயில்கள் காரை-கோவில்பத்து, திருநள்ளாறு, பட்டக்குடி மற்றும் அம்பகரத்தூர் போன்ற முக்கிய நிலையங்களில் நின்று செல்லும்.
ரத்து செய்யப்படும் சேவைகள்
புதிய வழித்தட மாற்றங்கள் காரணமாக, வேளாங்கண்ணி - நாகப்பட்டினம் மற்றும் நாகப்பட்டினம் - காரைக்கால் இடையே இயக்கப்பட்ட சில டெமு (DEMU) ரயில்கள் மே 20 மற்றும் 21 தேதிகளில் இருந்து நிரந்தரமாக ரத்து செய்யப்படுகின்றன.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ரயில் போக்குவரத்துத் தொடக்கம் காரைக்கால் சனீஸ்வரர் கோயில், நாகூர் தர்கா மற்றும் வேளாங்கண்ணி ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்களுக்குப் பெரும் வரப்பிரசாதமாக அமையும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
முக்கிய ஆன்மீகத் தலங்களை இணைக்கும் ரயில் நீட்டிப்பு
தாம்பரம் - காரைக்கால் எக்ஸ்பிரஸ் (16175/16176) ரயில் இனி பேரளம் மற்றும் காரைக்கால் வழியாக வேளாங்கண்ணி வரை நீட்டிக்கப்படுகிறது.
பயண விவரம்: மே 20 முதல் தாம்பரத்திலிருந்து இரவு 21.30-க்குப் புறப்படும் ரயில், மறுநாள் அதிகாலை 02.24-க்கு பேரளம் சந்திப்பை வந்தடையும். அங்கிருந்து திருநள்ளாறு (02.50), காரைக்கால் (03.06), நாகூர் (03.26), நாகப்பட்டினம் (03.43) வழியாக அதிகாலை 04.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.
மறுமார்க்கம்: வேளாங்கண்ணியிலிருந்து இரவு 21.50-க்குப் புறப்பட்டு, காரைக்காலுக்கு 22.38 மணிக்கும், பேரளத்திற்கு 23.17 மணிக்கும் சென்று, மறுநாள் காலை 04.35 மணிக்கு தாம்பரத்தைச் சென்றடையும். தாம்பரம் முதல் பேரளம் வரை இந்த ரயிலின் நேரங்களில் எவ்வித மாற்றமும் இல்லை.
மீண்டும் வரும் திருச்சி - காரைக்கால் பாசஞ்சர்
திருச்சி மற்றும் காரைக்கால் இடையே முன்பு இயக்கப்பட்ட ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படுகிறது.
வண்டி எண் 76826 திருச்சி - காரைக்கால் ரயில் மே 20 முதல் திருச்சியிலிருந்து மாலை 16.45-க்குப் புறப்பட்டு இரவு 21.20-க்கு காரைக்கால் சென்றடையும்.
வண்டி எண் 76825 காரைக்கால் - திருச்சி ரயில் மே 21 முதல் காரைக்காலிலிருந்து காலை 06.35-க்குப் புறப்பட்டு முற்பகல் 11.20-க்கு திருச்சி வந்தடையும். இந்த ரயில் வேளாங்கண்ணி ரயில் நிலையத்திற்குச் செல்லாது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















