திடீரென மாற்றப்பட்ட ரயில் நேரங்கள்! பயணிகள் செய்ய வேண்டியது என்ன?
திருச்சி மற்றும் சேலம் கோட்டங்களில் அக்டோபர் 3, 4, 5 ஆகிய தேதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பல்வேறு ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மயிலாடுதுறை: தென்னக ரயில்வேயின் திருச்சி கோட்டத்திற்குட்பட்ட பல்வேறு இரயில் பாதைகளிலும் மற்றும் சேலம் கோட்டத்திற்குட்பட்ட சில குறிப்பிட்ட பகுதிகளிலும் அத்தியாவசியமான பொறியியல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யவும், இரயில் போக்குவரத்தை மேலும் சீராகவும் வேகமாகவும் மாற்றும் பொருட்டும் இந்த கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, அக்டோபர் 3, 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் குறிப்பிட்ட வழித்தடங்களில் இயங்கும் பயணிகள் மற்றும் விரைவு இரயில்களின் சேவைகளில் பகுதி ரத்து, தொடங்கும் இடம் மாற்றம் மற்றும் நேரக் கட்டுப்பாடு உள்ளிட்ட முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வேயின் திருச்சி கோட்ட வணிக மேலாளர் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் கோ. நிறைமதி எழிலன் பிள்ளைகனி வெளியீட்டுள்ள செய்திக்குறிப்பில் மூலமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
திருச்சி - காரைக்கால் பாசஞ்சர் இரயில் சேவையில் பகுதி ரத்து
திருச்சி ரயில்வே கோட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொறியியல் பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி கோட்டப் பாதையில் இயங்கும் 'டெமு' (DEMU) ரயில்களின் சேவைகளில் பகுதி ரத்து செய்யப்படுகிறது. இதன்படி, திருச்சி சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து தினமும் காலை 08.40 மணிக்கு காரைக்கால் நோக்கி புறப்படும் வண்டி எண் 76820 கொண்ட திருச்சி - காரைக்கால் டெமு இரயில், வரும் அக்டோபர் மாதம் 3, 4 மற்றும் 5 ஆகிய மூன்று நாட்களுக்கு திருவாரூர் சந்திப்புடன் தனது சேவையை நிறைவு செய்து கொள்ளும்.
இந்த இரயிலானது திருச்சி சந்திப்பிலிருந்து திருவாரூர் சந்திப்பு வரை மட்டுமே இயங்கும் என்றும், திருவாரூரிலிருந்து காரைக்கால் வரையிலான அதன் சேவை பகுதி நேரமாக ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் - திருச்சி இரயில் தொடங்கும் இடத்தில் மாற்றம்
மேற்கூறிய பொறியியல் பணிகள் காரணமாக மறுமார்க்கமாக இயங்கும் இரயிலின் தொடங்கும் இடத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி காரைக்கால் இரயில் நிலையத்திலிருந்து தினமும் பிற்பகல் 14.55 மணிக்கு திருச்சி நோக்கி புறப்பட வேண்டிய வண்டி எண் 76819 கொண்ட காரைக்கால் - திருச்சி டெமு இரயில், வரும் அக்டோபர் 3, 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் காரைக்காலுக்குப் பதிலாக திருவாரூர் சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து இயங்கத் தொடங்கும்.
காரைக்கால் மற்றும் திருவாரூர் இடையே இந்த இரயில் சேவை பகுதி நேரமாக ரத்து செய்யப்படுவதால், பயணிகள் தங்கள் பயணத் திட்டத்தை இதற்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த இரயில் வழக்கம்போல் திருவாரூர் சந்திப்பிலிருந்து தனது அட்டவணை நேரமான பிற்பகல் 16.15 மணிக்கு திருச்சி நோக்கிப் புறப்பட்டுச் செல்லும்.
திருச்சி - மயிலாடுதுறை மேமு விரைவு இரயில் சேவை கட்டுப்பாடு
அதேபோல, திருச்சி கோட்டத்தில் நடைபெற்று வரும் பொறியியல் பணிகளின் காரணமாக மற்றொரு விரைவு இரயிலின் நேரத்திலும் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருச்சி சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து தினமும் மாலை 16.20 மணிக்கு மயிலாடுதுறை நோக்கிப் புறப்படும் வண்டி எண் 16834 கொண்ட திருச்சி - மயிலாடுதுறை 'மேமு' (MEMU) விரைவு இரயில், வரும் அக்டோபர் 3-ஆம் தேதி சனிக்கிழமையன்று அதன் வழக்கமான வழியில் ஏதேனும் ஒரு வசதியான இடத்தில் சுமார் 30 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இயங்க வைக்கப்படும் (Regulated). பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக ஏற்படும் இந்த தாமதத்தை பயணிகள் பொறுத்துக்கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
சேலம் கோட்டத்தில் மூர்த்திபாளையம் - புகழூர் இடையே பராமரிப்பு பணி
இதேபோல், சேலம் ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட மூர்த்திபாளையம் மற்றும் புகழூர் ஆகிய இரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் முக்கிய பொறியியல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக, பாலக்காடு டவுனிலிருந்து தினமும் காலை 06.30 மணிக்கு புறப்பட்டு திருச்சி வரை செல்லும் வண்டி எண் 16844 கொண்ட பாலக்காடு டவுன் - திருச்சி விரைவு இரயில், வரும் அக்டோபர் 3-ஆம் தேதி சனிக்கிழமையன்று புகழூர் இரயில் நிலையத்துடன் பகுதியாக நிறுத்தப்படும். இந்த இரயில் பாலக்காடு டவுனிலிருந்து புகழூர் வரை மட்டுமே வழக்கம்போல் இயங்கும். அதன் பின்னர், பராமரிப்பு பணி நேரம் முடிந்த பிறகு, புகழூரிலிருந்து திருச்சி சந்திப்பு வரை பயணிகள் முன்பதிவில்லா சிறப்பு இரயிலாக (Unreserved Special Train) அதே நிறுத்தங்களுடன் இயக்கி இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளுக்கு தென்னக ரயில்வேயின் முக்கிய வேண்டுகோள்
பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவைகளில் செய்யப்பட்டுள்ள இந்தத் தற்காலிக மாற்றங்களை உணர்ந்து, பயணிகள் அனைவரும் தங்கள் பயணத்தை திட்டமிடுமாறு தென்னக ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் ரயில்வேயின் இந்த தற்காலிக மாற்றங்கள் குறித்த கூடுதல் தகவல்களையும் உடனுக்குடனான அறிவிப்புகளையும் அறிய பயணிகள் சமூக வலைதள பக்கங்களான எக்ஸ் (X), ஃபேஸ்புக், த்ரெட்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் திருச்சி ரயில்வே கோட்டத்தின் அதிகாரப்பூர்வ பக்கங்களை பின் தொடருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Before You Go
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















