அடங்காத ரவுடிகள்... அசராத எஸ்பி சினேஹா ப்ரியா! அலறும் குற்றவாளிகள்!
மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுமக்களை மிரட்டி அமைதிக்கு இடையூறு செய்த 63 பேர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் பொது அமைதிக்கும், மக்களின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக செயல்பட்டு வந்த 2 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் (History Sheeters) உட்பட மொத்தம் 6 குற்றவாளிகள் மீது ஒரே சமயத்தில் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மயிலாடுதுறையில் பொதுமக்கள் மிரட்டல் - 4 பேர் கைது
கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி, மயிலாடுதுறை காவல் சரகத்திற்குட்பட்ட பகுதியில் வீதியில் சென்ற பொதுமக்களை வழிமறித்து மிரட்டி, பொது அமைதிக்கு இடையூறு விளைவிப்பதாக புகார் எழுந்தது. இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை காவல் உதவி ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக, கழுக்கானிமுட்டம் ஈ.வெ.ரா தெருவைச் சேர்ந்த சுந்தரபாண்டியன் (25), சுபாஷ் (21), கழனிவாசல் பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்த தினேஷ் (25) மற்றும் வழுவூர் காந்தி நகரைச் சேர்ந்த முகேஷ் (19) ஆகிய 4 பேரையும் காவல் துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
பெரம்பூர் காவல் நிலைய சரகத்தில் 2 ரவுடிகள் கைது
அதேபோல, கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி பெரம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பொதுமக்களை மிரட்டி அச்சுறுத்தியதாக மற்றொரு சம்பவம் பதிவானது. பெரம்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில், முட்டம் பகுதியைச் சேர்ந்த சகோதரர்களான சரித்திர பதிவேடு குற்றவாளிகள் முவேந்தன் (25) மற்றும் தங்கதுரை (27) ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.
குண்டர் சட்டத்தின் கீழ் அதிரடி நடவடிக்கை
கைது செய்யப்பட்ட மேற்படி 6 நபர்களும் தொடர்ச்சியாக சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களின் அமைதியான வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக விளங்கி வந்தனர். இதனையடுத்து, குற்றச் செயல்களைத் தடுக்கும் பொருட்டு, அவர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.B.சினேஹா ப்ரியா, மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர், கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதி 6 பேரையும் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதனடிப்படையில், செப்டம்பர் 25-ஆம் தேதி 6 எதிரிகளும் குண்டர் சட்டத்தின் கீழ் திருச்சி மற்றும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
நடப்பாண்டில் 63 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது
மயிலாடுதுறை மாவட்டத்தில் குற்றச் செயல்களை முற்றிலும் கட்டுப்படுத்த காவல் துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. நடப்பாண்டில் (2026) இதுவரை பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 63 நபர்கள் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
* கொலை வழக்குகள்: 05 நபர்கள்
* பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல்: 24 நபர்கள்
* கஞ்சா விற்பனை: 21 நபர்கள்
* மதுவிலக்கு குற்றங்கள்: 09 நபர்கள்
* பாலியல் குற்றங்கள்: 03 நபர்கள்
* குட்கா விற்பனை: 01 நபர்
மாவட்ட எஸ்.பி. கடும் எச்சரிக்கை
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. B. சினேஹா ப்ரியா கூறுகையில், "மாவட்டத்தில் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களின் நடவடிக்கைகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் மற்றும் வணிகர்களை அச்சுறுத்தும் ரௌடிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றவாளிகள், கஞ்சா, தடைசெய்யப்பட்ட புகையிலை (குட்கா) மற்றும் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் மிகக் கடுமையான நடவடிக்கை தொடரும்" என எச்சரித்துள்ளார்.
Before You Go
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















