"அரசு செய்யல... நாங்களே பண்ணிக்கிறோம்!" - ஆட்சியாளர்களுக்கு பாடம் புகட்டிய கிராமம்!
சீர்காழி அருகே பலமுறை கோரிக்கை வைத்தும் ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளாமல் இருந்த கிராம சாலையை மக்களே ஒன்றிணைந்து அமைத்த நிகழ்வு ஆளும் கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் இன்றி பொதுமக்கள் சந்தித்து வரும் இன்னல்கள் தொடர்கதையாகி வருகின்றன.
அந்த வகையில், சாமியம், சரஸ்வதி விளாகம், கொன்ன காட்டு படுகை, கீரங்குடி, பட்டிய மேடு, பாலுரான் படுகை மற்றும் வடரங்கம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் தெற்கு ராஜன் வாய்க்காலின் தென்கரையில் அமைந்துள்ளன. இந்தப் பகுதி கிராமங்களை இணைக்கும் மிக முக்கியமான 7 கிலோமீட்டர் நீளமுள்ள சாலை, போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் நாளுக்கு நாள் பழுதடைந்து முழுமையாக மண் சாலையாக மாறியது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
பொதுமக்களின் தொடர் கோரிக்கைகள் மற்றும் போராட்டங்களின் பலனாக, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வடரங்கம் முதல் கொன்ன காட்டு படுகை வரையிலான பகுதிக்கு தார் சாலை அமைக்கப்பட்டது. இருப்பினும், கொன்ன காட்டு படுகை முதல் சரஸ்வதி விளாகம் வரையிலான 2 கிலோமீட்டர் தொலைவிலான சாலை எவ்வித மேம்பாடும் செய்யப்படாமல் அப்படியே கைவிடப்பட்டது.
பல ஆண்டுக் கால போராட்டமும் அதிகாரிகளின் புறக்கணிப்பும்
மேம்படுத்தப்படாத இந்த 2 கிலோமீட்டர் மண் சாலை, மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக மாறி போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் தங்களின் அன்றாட அத்தியாவசிய தேவைகளுக்குக்கூட வெளியே வர முடியாத சூழல் உருவானது. பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் உரிய நேரத்திற்கு கல்வி நிறுவனங்களுக்குச் செல்ல முடியாமலும், விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களைச் சந்தைப்படுத்த முடியாமலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
கொள்ளிடம், சீர்காழி மற்றும் சிதம்பரம் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்குச் செல்ல முடியாமல் போக்குவரத்து முடங்கியது. கைவிடப்பட்ட சாலையில் புதிய பாலம் கட்ட வேண்டும் என்றும், தார் சாலையாக சீரமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, அப்பகுதி கிராம மக்கள் பல ஆண்டுகளாக யூனியன் அலுவலகம், தாலுகா அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என அனைத்து அரசுத்துறை கதவுகளையும் தட்டி மனுக்களைக் கொடுத்து வந்தனர். ஆனால், மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகளும், மக்கள் பிரதிநிதிகளும், அரசு அதிகாரிகளும் இவர்களது கோரிக்கையைக் கண்டுகொள்ளாமல் முற்றிலுமாகப் புறக்கணித்து வந்தனர்.
ஒன்றிணைந்த கிராம மக்கள்: வரி வசூல் செய்து சொந்த செலவில் சாலை
அதிகாரிகளின் அலட்சியப் போக்காலும், அரசின் புறக்கணிப்பாலும் இனி பலன் ஏதும் கிடைக்காது என்பதை உணர்ந்த கொன்ன காட்டு படுகை கிராம மக்கள், தங்களின் இன்னல்களுக்குத் தாங்களே தீர்வு காண முடிவு செய்தனர். கிராமக் கூட்டத்தைக் கூட்டி, சொந்த செலவில் சாலை அமைப்பது என ஒருமனதாகத் தீர்மானித்தனர். இதற்காக ஊரில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் தலா 2,000 ரூபாய் வீதம் வரி வசூல் செய்யப்பட்டது.
இவ்வாறு முதற்கட்டமாகத் திரட்டப்பட்ட 5 லட்சம் ரூபாய் நிதியைக் கொண்டு, சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாகத் தொடங்கப்பட்டன. ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் ரோடு ரோலர்கள் வரவழைக்கப்பட்டு, கிராம மக்களே நேரில் களமிறங்கி உடலுழைப்பை நல்கினர். 2 கிலோமீட்டர் தொலைவிற்கு பெட் மிக்ஸ் கலவையைக் கொண்டு சாலைக்கான உறுதியான அடித்தளத்தை கிராம மக்கள் ஒன்றிணைந்து வெற்றிகரமாக அமைத்துக் காட்டி, அரசு இயந்திரத்திற்கே சவாலாக உருவெடுத்துள்ளனர்.
அதிகாரிகளின் மெத்தனப் போக்கு: போராட்டத்தில் புதிய திருப்பம்
கிராம மக்களே சொந்தச் செலவில் சாலை அமைக்கும் தகவல் பரவியதை அடுத்து, ஒன்றிய ஆணையர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் விரைந்து வந்து மக்கள் அமைத்த சாலைத் தளத்தைப் பார்வையிட்டனர். ஆனால், பார்வையிட்டுச் சென்ற அதிகாரிகள், அடுத்தகட்டமாக தார் சாலை அமைக்கும் பணியை அரசு ஏற்றுச் செய்யும் என்ற சிறு உறுதி மொழியைக் கூட வழங்காமல் சென்றது அப்பகுதி மக்களை மேலும் அதிர்ச்சிக்கும் ஏமாற்றத்திற்கும் உள்ளாக்கியது.
இருப்பினும் மனம் தளராத கிராம மக்கள், மீண்டும் கூடுதல் தொகையை வசூல் செய்து நிச்சயமாக முழுமையான தார் சாலையைத் தாங்களே அமைப்போம் என்று உறுதியுடன் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து தங்களைப் புறக்கணித்து வரும் அரசு மற்றும் அரசு அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தங்களின் ரேஷன் கார்டுகள், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களை விரைவில் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்போவதாக கிராம மக்கள் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
மக்கள் தங்களின் சொந்தச் செலவில் சாலை அமைத்த சம்பவம் ஒருபுறம் நெகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தாலும், அதிகாரிகளின் அலட்சியத்தால் அரசு ஆவணங்களைத் திருப்பித் தர கிராம மக்கள் எடுத்துள்ள முடிவு அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
Before You Go
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















