அடிப்படை உரிமையான குடிநீருக்கே இத்தனை போராட்டமா? சீர்காழி அருகே ஒரு கிராமத்தின் கண்ணீர் கதை!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே குமாரநத்தம் கிராமத்தில் உப்பு நீர் விநியோகத்தால் 200 குடும்பங்கள் குடிநீருக்காக 2 கி.மீ. நடந்து செல்லும் மக்களின் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மருதங்குடி ஊராட்சியில் குமாரநத்தம் கிராமம் அமைந்துள்ளது. இப்பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாயம் மற்றும் கூலித் தொழிலை நம்பி வாழும் இக்கிராம மக்களின் அடிப்படைத் தேவையான குடிநீர் விநியோகம், கடந்த சில ஆண்டுகளாகவே பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது.
ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தாலும், அதில் வரும் தண்ணீர் முழுமையாக உப்பு நீராக மாறியிருப்பதால் பொதுமக்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.
நிலத்தடி நீர் மாற்றமும் உப்பு நீர் விநியோகமும்
குமாரநத்தம் கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நல்ல குடிநீர் கிடைத்து வந்தது. ஆனால், காலப்போக்கில் ஏற்பட்ட பருவநிலை மாற்றம் மற்றும் கடல் நீர் உட்புகுதல் உள்ளிட்ட காரணங்களால் அப்பகுதியின் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகப் பாதிக்கப்பட்டு, தண்ணீர் உப்பு நீராக மாறியுள்ளது. ஊராட்சி நிர்வாகம் சார்பில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு ஏற்றப்படும் நீரும் உப்பு நீராகவே இருப்பதால், குழாய்களில் வரும் தண்ணீரைக் குடிக்கவோ, சமையலுக்குப் பயன்படுத்தவோ முடியாத சூழல் நிலவுகிறது.
இந்த உப்பு நீரைப் பயன்படுத்திச் சமைக்கும்போது உணவுப் பொருட்கள் கெட்டுப்போவதுடன், பாத்திரங்களிலும் உப்புப் படிந்து சேதமடைவதாக இல்லத்தரசிகள் வேதனை தெரிவிக்கின்றனர். குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் கூட இந்தத் தண்ணீர் உகந்ததாக இல்லை என்பது கிராம மக்களின் பிரதான குற்றச்சாட்டாக உள்ளது.
குடிநீருக்காக அண்டை கிராமங்களுக்குப் படையெடுப்பு
அன்றாடக் குடிநீர் மற்றும் சமையல் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காகக் குமாரநத்தம் கிராம மக்கள் நாள்தோறும் பெரும் போராட்டத்தைச் சந்தித்து வருகின்றனர். நல்ல குடிநீரைத் தேடி சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பனமங்கலம் மற்றும் மருவத்தூர் ஆகிய அண்டை கிராமங்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
அதிகாலை வேளையிலும், மாலை நேரங்களிலும் பெண்கள், முதியவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் என அனைவரும் கைகளில் குடங்களுடன் நீண்ட தூரம் நடந்து சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர். சைக்கிள் மற்றும் இருசக்கர வாகன வசதி உள்ளவர்கள் ஒருவாறு தண்ணீரைக் கொண்டு வந்தாலும், வசதியற்ற ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் தலையிலும் இடுப்பிலும் குடங்களைச் சுமந்து கொண்டு வெயிலிலும் மழையிலும் அலைக்கழிக்கப்படும் அவலம் தொடர்கதையாகி வருகிறது.
உடல்நலப் பாதிப்புகளும் சிறுநீரகக் கோளாறுகளும்
குடிநீருக்காகத் தினசரி பல கிலோமீட்டர் தூரம் நடப்பதாலும், கனமான குடங்களைத் தூக்கிச் செல்வதாலும் இப்பகுதி பெண்களுக்குத் தீராத இடுப்பு வலி, மூட்டு வலி மற்றும் உடல் சோர்வு உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மறுபுறம், வேறு வழியின்றி ஊராட்சி குழாய்களில் வரும் உப்பு நீரைப் பயன்படுத்துபவர்களும், அரைகுறையாகச் சுத்திகரிக்கப்பட்ட நீரைப் பருகுபவர்களும் கடுமையான உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக, இந்த உப்பு நீரைத் தொடர்ந்து உட்கொள்வதால் கிராமத்தில் உள்ள பலருக்குச் சிறுநீரகக் கற்கள் மற்றும் சிறுநீரகச் செயல்பாட்டுக் குறைபாடுகள் ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் அச்சத்துடன் தெரிவிக்கின்றனர். மேலும், தோல் நோய்கள் மற்றும் முடி உதிர்வு போன்ற பிரச்சனைகளும் அதிகரித்து வருவதால் கிராம மக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
நிரந்தரத் தீர்வு காண கிராம மக்கள் கோரிக்கை
தங்களின் அடிப்படை உரிமையான சுத்தமான குடிநீரைப் பெறுவதற்காகக் குமாரநத்தம் கிராம மக்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடமும், வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் பலமுறை கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனர். ஆனால், இதுவரை எவ்வித நிரந்தர நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. தற்காலிக ஏற்பாடாக டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்வதை விடுத்து, கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குமாரநத்தம் கிராமத்திற்குத் தடையின்றி நல்ல குடிநீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் ஒருமித்த எதிர்பார்ப்பாக உள்ளது. மனித உயிர்களின் ஆரோக்கியத்தோடு தொடர்புடைய இப்பிரச்சனையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் நேரடியாகத் தலையிட்டு, போர்க்கால அடிப்படையில் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் எனக் குமாரநத்தம் கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்























