இளைஞர்களே தயாரா? ஒரே இடத்தில் 25+ முன்னணி நிறுவனங்கள் - வேலை பெற அரிய வாய்ப்பு!
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் செப்டம்பர் 18-இல் நடைபெறும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 500 மேற்பட்டோருக்கு வேலை வழங்கப்பட உள்ளது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த வேலைதேடும் இளைஞர்கள் மற்றும் மகளிரின் எதிர்காலத்தை வளமாக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு மையம் இணைந்து சிறப்பு முயற்சியை மேற்கொண்டுள்ளன. அதன்படி, மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் வரும் செப்டம்பர் 18-ஆம் தேதி வெள்ளிக்கிழமை சிறப்புத் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
காலை 10.00 மணிக்குத் தொடங்கும் இந்த முகாமில், பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்குத் தேவையான பணியாளர்களை நேரடியாகத் தேர்வு செய்யவுள்ளன.
பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு
இவ்வேலைவாய்ப்பு முகாமில் மயிலாடுதுறை மாவட்டம் மட்டுமன்றி, தமிழகத்தின் பிற மாவட்டங்களைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிலும் முனைவோர்கள் நேரடியாகக் கலந்து கொள்ளவுள்ளனர். இந்நிறுவனங்களில் காலியாக உள்ள 500-க்கும் மேற்பட்ட பல்வேறு பணியிடங்களுக்குத் தகுதியான நபர்களைத் தேர்வு செய்ய விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உற்பத்தி, சேவை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் விற்பனை ஆகிய பல்வேறு துறைகளைச் சார்ந்த நிறுவனங்கள் ஒரே இடத்தில் கூடுவதால், வேலைநாடுநர்களுக்குத் தங்கள் திறமைக்கேற்ற சிறந்த வேலைவாய்ப்பைப் பெற இது ஒரு மிகச்சிறந்த களமாக அமையும்.
கல்வித் தகுதிகள் மற்றும் வயது வரம்பு
இந்தச் சிறப்பு முகாமில் பங்கேற்க 18 வயது முதல் 35 வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரும் தகுதி படைத்தவர்கள் ஆவர். கல்வித் தகுதியைப் பொறுத்தவரை குறைந்தபட்சம் 5-ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் முதல் 12-ஆம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றவர்கள், ஐ.டி.ஐ (ITI), டிப்ளமோ (Diploma), பி.இ (B.E) போன்ற தொழில்நுட்பக் கல்வி பயின்றவர்கள் மற்றும் இதர இளங்கலை, முதுகலை பட்டதாரிகள் வரை அனைவரும் இதில் கலந்து கொள்ளலாம். வேலை அனுபவம் உள்ளவர்கள் மட்டுமன்றி, புதிதாகப் படிப்பை முடித்து வேலை தேடும் புதியவர்களும் தங்களின் கல்வித் தகுதிக்கு ஏற்பப் பொருத்தமான நிறுவனங்களைத் தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம்.
வழிகாட்டுதல் மற்றும் இலவசப் பயிற்சித் திட்டங்கள்
நேரடி வேலைவாய்ப்பு மட்டுமன்றி, இளைஞர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு பல்வேறு கூடுதல் வழிகாட்டுதல் சேவைகளும் இந்த முகாமில் இலவசமாக வழங்கப்படவுள்ளன. 'வெற்றி நிச்சயம்' திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்குத் தேவையான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் பற்றிய தகவல்கள் வழங்கப்படவுள்ளன. மேலும், சொந்தமாக தொழில் தொடங்கி சாதனையாளராக விரும்பும் இளைஞர்களுக்கு தேவையான தொழில் கடனுதவிகள், வங்கிக் கடன் வசதிகள், அயல்நாட்டு வேலைவாய்ப்புக்கான அரசு வழிமுறைகள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் முறைகள் குறித்தும் துறை சார்ந்த வல்லுநர்களால் இலவச ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.
தேவையான சான்றிதழ்கள் மற்றும் இணையதளப் பதிவு
இவ்வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விரும்பும் தகுதியான நபர்கள் தங்களது புதுப்பிக்கப்பட்ட சுய விவர அறிக்கை (Resume), கல்வித் தகுதிச் சான்றிதழ்கள், தேசிய அடையாளச் சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் மற்றும் முன் அனுபவம் ஏதும் இருப்பின் அதற்கான சான்றிதழ்களின் நகல்களுடன் நேரில் வருகை தர வேண்டும். மேலும், முகாமில் பங்கேற்க விரும்பும் வேலையளிப்போர் மற்றும் வேலைநாடுநர்கள் தங்களது விவரங்களை தமிழ்நாடு அரசின் தனியார் வேலைவாய்ப்பு இணையதளமான www.tnprivatejobs.tn.gov.in என்ற முகவரியில் முன் பதிவு செய்து கொள்வது அவசியமாகும்.
மாவட்ட ஆட்சியர் அழைப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த தனியார்துறை நிறுவனங்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களுக்குத் தேவையான உள்ளூர் பணியாளர்களைத் தேர்வு செய்துகொள்ளலாம். அதேபோல, வேலைவாயப்பற்ற தகுதியான இளைஞர்கள் அனைவரும் இந்த இலவச முகாமைப் பயன்படுத்தித் தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், கேட்டுக்கொண்டுள்ளார். இம்முகாம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 04364-299790 என்ற தொலைபேசி எண்ணை அலுவலக வேலை நேரங்களில் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Before You Go
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















