கங்கை நீராடிய புண்ணிய பூமிக்கு வந்த காவிரி: துலாக்கட்டத்தில் கரைபுரளும் நீர் வரத்து..
மேட்டூர் அணையில் திறந்து விடப்பட்ட காவிரி நீர், விக்ரமன் மதகைக் கடந்து பிரசித்தி பெற்ற மயிலாடுதுறை துலாக் கட்டத்தை வந்தடைந்துள்ளது.

மயிலாடுதுறை: தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் காவிரிப் படுகை மக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பும், விவசாயிகளின் வாழ்வாதாரக் கனவும் நிறைவேறும் வகையில், மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர் தனது நெடும் பயணத்தைக் கடந்து மயிலாடுதுறை மண்ணைச் சிலிர்க்க வைத்துள்ளது. ஆன்மீகச் சிறப்பும் வரலாற்றுப் பெருமையும் வாய்ந்த மயிலாடுதுறை காவிரி துலாக் கட்டத்திற்கு வெள்ளையென நுரைத்து வந்த காவிரி நதிநீரை, அப்பகுதி மக்கள் தங்களின் சொந்தக் குடும்ப உறுப்பினரை நீண்ட நாட்களுக்குப் பிறகு நேரில் காண்பது போன்ற பேரானந்தத்தோடு நேரில் கண்டு பரவசமடைந்தனர்.
கல்லணை கடந்து காவிரி ஆற்றில் பாய்ந்தோடி வந்த நீர் வரத்து
தமிழக முதலமைச்சர் விஜய், விவசாயப் பெருமக்களின் பாசனத் தேவைகளுக்காகவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் நோக்கிலும் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காகக் தண்ணீரைத் திறந்து வைத்தார். மேட்டூரில் இருந்து ஆர்ப்பரித்து வந்த காவிரி நீர், டெல்டா மாவட்டங்களின் பிரதானப் பிரிப்பு மையமான கல்லணையை கடந்த சில தினங்களுக்கு முன்பு வந்தடைந்தது.
அதனைத் தொடர்ந்து, கடந்த 6-ஆம் தேதி கல்லணையில் இருந்து பல்வேறு பாசனக் கால்வாய்கள் மற்றும் ஆறுகளில் நீர் திறந்து விடப்பட்டது. அவ்வாறு திறக்கப்பட்ட நீரானது தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டங்களைக் கடந்து, நேற்று மயிலாடுதுறை மாவட்டத்தின் எல்லையான திருவாலங்காடு பகுதியில் அமைந்துள்ள விக்ரமன் தலைப்பு நீர்ஒழுங்கிக்கு (மதகு) வந்து சேர்ந்தது.
விக்ரமன் மதகில் இருந்து மயிலாடுதுறைக்கு வந்தடைந்த வேளை
திருவாலங்காடு விக்ரமன் நீர்ஒழுங்கி வந்தடைந்ததும், அங்கிருந்து பாசனத்துக்காகவும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காகவும் வினாடிக்கு 803 கன அடி வீதம் காவிரி ஆற்றில் தண்ணீர் படிப்படியாகக் திறந்து விடப்பட்டது. மதகுகளின் வழியே சீறிப்பாய்ந்த நீரானது, வழிநெடுகிலும் இருந்த கிராமங்களையும் விவசாய நிலங்களையும் நனைத்தபடி, மயிலாடுதுறையின் இதயப் பகுதியான வரலாற்றுச் சிறப்புமிக்க துலாக் கட்டத்தை அடைந்தது. சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், ஆற்றுப் படுகையில் நீர் ஓடிவரும் அழகைக் காண்பதற்காகக் காலை முதலே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் ஆன்மீக அன்பர்கள் ஆற்று படுகையில் ஒன்று கூடத் தொடங்கினர்.
ஆரத்தி எடுத்து பாடல் பாடி பொன்னிக்குக் கிடைத்த கோலாகல வரவேற்பு
கங்கை, யமுனை, நர்மதை போன்ற இந்தியாவின் புண்ணிய நதிகள் அனைத்தும் ஐப்பசி மாதத்தில் நீராடித் தங்களின் பாவங்களைப் போக்கிக் கொண்டதாகப் புராண வரலாறு போற்றும் புண்ணிய பூமியாக மயிலாடுதுறை துலாக் கட்டம் திகழ்கிறது. அத்தகைய புனிதமான துலாக் கட்டத்திற்குத் தண்ணீர் வந்து சேர்ந்த அந்தப் பொன்னான நிமிடத்தில், கரைகளில் திரண்டிருந்த பெண்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாகத் திரண்டு பொன்னி நதிக்கு மகத்தான வரவேற்பு அளித்தனர்.
காவிரித் தாய்க்கு மங்கலப் பொருட்களான மஞ்சள், குங்குமம், பூக்கள் மற்றும் மலர் மாலைகளைத் தூவியும், கைகளில் ஏந்திய தட்டுகளில் தீபச் சூடம் ஏற்றி மங்கல ஆரத்தி எடுத்தும் வழிபட்டனர். மேலும் "நடந்தாய் வாழி காவேரி" என்ற புகழ்பெற்ற வரிகளைப் பக்திப் பரவசத்துடன் பாடலாகப் பாடி, பொங்கி வந்த காவிரி நீரைத் தொட்டுத் தங்கள் கண்களில் ஒற்றிக் கொண்டு மெய்சிலிர்த்தனர்.
கடலை நோக்கித் தொடரும் பொன்னியின் பயணம்
மயிலாடுதுறையைக் கடந்து கரைகளைத் தொட்டபடி பயணிக்கும் இந்தக் காவிரி நீரானது, நாளை மயிலாடுதுறை மாவட்ட பகுதியான மேலையூரில் அமைந்துள்ள கடைசி கதவணையைச் சென்று அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு மதகுகள் திறக்கப்பட்டு, பாசன வாய்க்கால்களுக்கு நீர் பகிர்ந்தளிக்கப்பட்ட பிறகு, எஞ்சிய நீரானது காவிரியின் வரலாற்று இறுதிப் புள்ளியான பூம்புகார் கடலில் சென்று சங்கமிக்கும். நிலமெங்கும் பசுமையைப் பூக்கச் செய்யவும், மக்களின் தாகத்தைத் தீர்க்கவும் ஓடோடி வந்த காவிரித் தாயின் வருகையால் மயிலாடுதுறை மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகள் அளவில்லா மகிழ்ச்சியிலும் கொண்டாட்டத்திலும் மூழ்கியுள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















