Maha Shivaratri 2024: பரதம், கதக், குச்சிப்புடி, மோகினியாட்டம் - மெய் சிலிர்க்க வைத்த மாயூரநாதர் கோயில் மகா சிவராத்திரி!
மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் நடைபெற்ற மகா சிவராத்திரி மயூரநாட்டியாஞ்சலி நிகழ்ச்சி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான சிவனை அபயாம்பிகை அம்மன் மயிலுரு கொண்டு பூஜித்து சாப விமோசனம் அடைந்த புகழ்வாய்ந்த பழமையான மாயூரநாதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு மயிலை சப்த ஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் கடந்த 17- ஆண்டுகளாக மயூரநாதர் கோயில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது வருகிறது.
இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில், மயிலாடுதுறை சப்த ஸ்வரங்கள் அறக்கட்டளை 18 -ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி கடந்த 7 -ம் தேதி இரவு தொடங்கியது. இந்த நாட்டியாஞ்சலி நிகழ்வானது தொடர்ந்து 4 நாட்கள் பெற்று மார்ச் 10-ம் தேதி நிறைவு பெறுகிறது. மயூரா நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை தலைவர் பரணிதரன் வரவேற்புரையாற்றி நிகழ்ச்சி துவங்க அறக்கட்டளையின் அறங்காவலர் ஒருங்கிணைப்பு குழு தலைவர் ரவிச்சந்திரன், துணைத் தலைவர் சிவலிங்கம், அறங்காவலர்கள் செந்தில்வேல், பிச்சை கண்ணன், மருத்துவர் அருண்குமார், செந்தில்குமார், மதியழகன் மோகன்ராஜ், தொழிலதிபர்கள் சாந்தகுமார், பாஸ்கர், செந்தில்குமார், திருவாவடுதுறை ஆதீன பொது மேலாளர் ராஜேந்திரன், ஆதீன புலவர் குஞ்சதபாதம், மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குனர் கவிதா ராமு, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மங்கள ஒளிவிளக்கு ஏற்றி மயூர நாட்டியாஞ்சலியை துவக்கி வைத்து வாழ்த்து வழங்கினர். தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் நற்பணிகளை பாராட்டி சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் “மயூர நன்னெறி செம்மல்” என்ற விருதும், தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குனர் நாட்டிய கலைஞர் கவிதா ராமு ஐஏஎஸ் அவர்களுக்கு “மணிமேகலை பொற்சதங்கை”விருதும் ஆன்மீக திருப்பணிகளை சிறப்பாக செய்து வரும் மயிலாடுதுறை சௌ.விஜயகுமார் அவர்களுக்கு “மயூர நற்பணி நல்லரசு” என்ற விருதும் வழங்கப்பட்டது.
ஆலங்குடி ஏவி பக்கிசாமி நாதஸ்வர குழுவினரின் மங்கள இசையுடன் தொடங்கிய முதல் நாள் மயூரநாட்டியாஞ்சலியில் மலேசியா லாஸ்யா ஆர்ட்ஸ் அகாடமி குழுவினர், சென்னை அனுஷம் டான்ஸ் குரூப் டான்ஸ் குழுவினர், ஸ்ரீ ஞான முத்ரா குழுவினர், கோயம்புத்தூர் கிருஷ்ணபிரியா உள்ளிட்ட குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை செயலாளர் மாயவரம் விஸ்வநாதன் நன்றி கூறினார். துணை செயலாளர் அகஸ்டின் விஜய் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். முதல் நாள் நிகழ்வுகளை ஏராளமான கலை ஆர்வலர்கள் கண்டு ரசித்தனர்.
அதேபோன்று மகா சிவராத்திரி நேற்றிரவு நடைபெற்றதை தொடர்ந்து நேற்றிரவு விடிய விடிய நடைபெற்ற மாயூர நாட்டியாஞ்சலி நிகழ்வு சிவராத்திரி வழிப்பாடு மேற்கொண்ட அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்து. மேலும் கதக், குச்சிப்புடி, மோகினியாட்டம், பரதநாட்டியம் என அனைத்தும் ஒரே மேடையில் நடைபெற்றது. இதில் சென்னை, கோவை, கேரளா, பெங்களூர், விசாகப்பட்டினம் என தமிழகம், வெளி மாநிலம் மற்றும் இன்றி சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து நாட்டிய கலைஞர்கள் பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். தொடர்ந்து நிறைவு நாளான நாளை இரவு ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வரும் நடன கலைஞர்களின் நாட்டியாஞ்சலி நிகழ்வு நடைபெற உள்ளது.