தேர்தலில் விலகிய மன்சூர் அலிகான்; அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு புகழாரம்
தான் போட்டியிடும் தொண்டாமுத்தூர் தொகுதியில் இருந்து விலகியதாக அறிவித்துள்ள மன்சூர் அலிகான், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொகுதிக்கு நிறைய செய்துள்ளதாக உருக்கமாக கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி தமிழ் தேசிய புலிகள் என்கிற கட்சியை துவக்கிய நடிகர் மன்சூர் அலிகான், கோவை தொண்டாமுத்தூரில் அக்கட்சி சார்பில் வேட்புமனுத்தாக்கல் செய்தார். அதிமுக சார்பில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, திமுக சார்பில் கார்த்திகேய சேனாதிபதி போட்டியிடும் அத்தொகுதியில் மன்சூர் அலிகானின் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது. நாளை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவிருக்கும் நிலையில் தான் போட்டியில் இருந்து விலகி கொள்வதாக மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார். அது தொடர்பாக ஆடியோ ஒன்றை
வெளியிட்டுள்ள அவர், வெளிப்படையாக சில கருத்துக்களையும் தெரிவித்துள்ளார்,
கட்சி ஆரம்பித்த பின் போட்டியிடுவது பெரிய போராட்டமாக இருந்ததாகவும், நண்பர்கள் தனக்கு உதவியதாக கூறியுள்ள மன்சூர் அலிகான், தொகுதியில் எங்கு சென்றாலும் எவ்வளவு பணம் வாங்கினீர்கள் என தம்மை பார்த்து பலர் கேட்டதாகவும் அது தனக்கு கவலையளித்ததாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய ஓட்டுகளை பிரிக்க தான் நிற்பதாக பரவலாக பேசப்பட்டதாகவும், தான் தொகுதிக்கு சென்ற வரை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிறைய செய்திருப்பதாக தெரிவதாகவும், அதை கடந்து தனக்கு அரசியலில் எதுவும் தெரியவில்லை என்றும் கூறியவர், மூன்று பெண் குழந்தைகளை வைத்திருப்பதால் கெட்ட பெயருடன் வெளியேற விரும்பவில்லை என வேதனை தெரிவித்தார். 10 பேரை சந்தித்தால் அவர்களில் 8 பேர் என்னை பணம் வாங்கியதாக பேசுகிறார்கள் என்றும், இனத்தை அடமானம் வைக்கும் எண்ணம் எனக்கு எப்போதும் இல்லை என்பதால் மனவேதனையுடன் தேர்தல் வேண்டாம் என சென்னை புறப்படுகிறேன் என்று கூறியுள்ள மன்சூர் அலிகான், சுயேட்சைகள் பிரசாரத்திற்கு அழைக்கிறார்கள் என்றும், தேவைப்பட்டால் அவர்களுக்கு பிரசாரம் செய்வேன் என்றும், மற்றபடி தேர்தலில் இருந்து விலகிக் கொள்வதாக ஆடியோ மூலம் தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.