மேலும் அறிய
திருப்பரங்குன்றம் தீபம்: மதுரை முழுவதும் 144 தடை! உச்ச நீதிமன்ற உத்தரவு என்னாகும்?
திருப்பரங்குன்றம் மலை மீது ஏறவும், மதுரையில் போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தவும் தடை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

144 தடை உத்தரவு
Source : whatsapp
மதுரை மாவட்டம் முழுவதும் (BNSS) சட்டப்பிரிவு 163-ன் கீழ் தடை உத்தரவு 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக நிலவும் சட்டம் – ஒழுங்கு பிரச்னையை முன்னிட்டு, மதுரை மாவட்டம் முழுவதும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) சட்டப்பிரிவு 163-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா உத்தரவிட்டுள்ளார். திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவது தொடர்பாக பல்வேறு அமைப்புகள் திரண்டு போராட்டங்களில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும், மதுரை மாநகர் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு சட்டம் – ஒழுங்கு பாதிக்கப்படலாம் என்றும் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், பொதுமக்களின் அமைதி மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, நவம்பர் 23-ஆம் தேதி இரவு 9 மணி முதல் நவம்பர் 25-ஆம் தேதி காலை 10 மணி வரை மதுரை மாவட்டம் முழுவதும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தவும், திருப்பரங்குன்றம் மலை மீது ஏறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
144 தடை உத்தரவு
அனுமதி பெற்ற நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், திருமணம் மற்றும் இறுதிச்சடங்கு போன்ற நிகழ்வுகள், மத நிகழ்ச்சிகள், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள் நடத்தும் சடங்குகள் மற்றும் திருவிழாக்களுக்கு இந்தத் தடை பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உச்சநீதிமன்றத்தின் நவம்பர் 20-ஆம் தேதி உத்தரவை அமல்படுத்தும் நடவடிக்கைகளுக்கும், மலையில் வழக்கமாக நடைபெறும் மத வழிபாடுகள் மற்றும் தர்கா உள்ளிட்ட பிற வழிபாட்டுத் தலங்களின் சட்டபூர்வமான செயல்பாடுகளுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவை காவல்துறையின் ஒழுங்குமுறைக்கு உட்பட்டு நடைபெற வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா நவம்பர் 23-ஆம் தேதி பிறப்பித்த இந்த உத்தரவு, முன்னதாகத் திரும்பப் பெறப்படாவிட்டால் நவம்பர் 25-ஆம் தேதி காலை 10 மணி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் கடந்த இரண்டு நாட்களாக பேசுபொருளாகியுள்ள நிலையில் தற்போது இந்த 144 தடை உத்தரவு என்பது முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
நாளை தான் இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை என எதிர்பார்க்கப்படுகிறது
எப்போதும் போல தீபம் ஏற்றும் இடத்தில் மட்டும் ஏற்றப்படும் அல்லது உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள இடத்தில் இந்த ஆண்டு தீபம் ஏற்றப்படுமா? என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. நாளை தான் இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் பணிகளுக்காக ஏற்கனவே 5500 ககும் மேற்பட்ட காவல்துறையினர் தற்போது தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் 144 உத்தரவைத் தொடர்ந்து இன்னும் கூடுதலாக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion




















