திண்டுக்கல்லில் ஆண் பிணமாக மீட்கப்பட்ட வழக்கில் திருப்பம் - 4000 பணம் திருடியதற்காக கொலை செய்தது அம்பலம்
ஆத்திரம் அடைந்த முருகன், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து முத்துவை கொலை செய்து, உடலை கொடைரோடு அருகே முட்புதருக்குள் வீசி சென்றது தெரியவந்தது
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே நிலக்கோட்டை செல்லும் சாலையில் அம்மையநாயக்கனூர் ரெயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இந்த சுரங்கப்பாதை அருகே உள்ள முட்புதருக்குள், கடந்த 17ஆம் தேதி மர்மமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவர் பிணமாக கிடந்த நிலையில், இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட வாலிபரின் முகம், கத்தியால் வெட்டப்பட்டு அடையாளம் தெரியாத வகையில் கொடூரமான முறையில் சிதைக்கப்பட்டு இருந்தது. அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். மேலும் இந்த வழக்கை விசாரிக்க திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. ரூபேஷ்குமார் மீனா, காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். சம்பவ இடத்தை பார்க்கும்போது, உடல் கிடந்த இடத்தின் அருகே கொலை நடைபெறவில்லை என்பதை தனிப்படையினர் உறுதி செய்தனர். எங்கேயோ கொலை செய்து விட்டு வாகனத்தில் இளைஞரின் உடலை ஏற்றி கொண்டு வந்து முட்புதருக்குள் வீசி சென்றதும் தெரியவந்தது. இதனை அடுத்து கொடைரோடு சுங்கச்சாவடியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். கடந்த 16ஆம் தேதி கொடைரோடு சுங்கச்சாவடியை கடந்து சென்ற வாகனங்கள் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்தனர். அப்போது கடந்த 16ஆம் தேதி இரவு, திண்டுக்கல்லில் இருந்து கொடைரோடு சுங்கச்சாவடியை கருப்பு நிற கார் கடந்து சென்றது. அதன்பிறகு 10 நிமிடத்துக்குள் மீண்டும் அந்த கார், கொடைரோடு சுங்கச்சாவடியில் இருந்து திண்டுக்கல் நோக்கி திரும்பியதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அதே கார், அம்மையநாயக்கனூர் நிலக்கோட்டை சாலையில் சென்றதும் கண்காணிப்பு கேமராவில் தெரிந்தது. இந்த காரில் இருந்து விசாரணையை தொடங்கிய போலிசார் திருப்பூர் மாவட்ட பதிவு எண் கொண்ட அந்த காரின் உரிமையாளர் குறித்து போலீசார் விசாரணை செய்தனர்.
அந்த கார், ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் முருகன் (34) என்பவருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. இவர், திருப்பூர் மாவட்டம் பல்லடம் மகாலட்சுமி நகரில் மதுரை மண்பானை சமையல் என்ற பெயரில் உணவகத்தையும், மதுபான பாரையும் நடத்தி வந்துள்ளார். இதனை அடுத்து அவரது செல்போன் எண்ணை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, கொடைரோடு பகுதியில் வந்தபோது முருகனின் செல்போன் ஆப் செய்யப்பட்டிருந்தது. ஆனால் கடந்த 18ஆம் தேதி காலையில் பல்லடம் சென்றபோது முருகனுடைய செல்போன் செயல்பாட்டுக்கு வந்தது. முருகனின் கார் மற்றும் செல்போன் செயல்பாடு ஆகியவை அவர் மீது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் பல்லடம் சென்ற தனிப்படை போலீசார், முருகனை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது முருகன் நடத்திய பாரில் தேனி மாவட்டம் போடி சோலை சொக்கலிங்கநகரை சேர்ந்த முத்து (35) என்பவர் வேலை செய்து வந்தார். அவர், பாரில் இருந்த 4 ஆயிரத்தை திருடியதாக கூறப்படுகிறது. இதனால் முத்துவை முருகன் கண்டித்தார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த முருகன், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து முத்துவை கொலை செய்து, உடலை கொடைரோடு அருகே முட்புதருக்குள் வீசி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து முருகனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
அவர் கொடுத்த தகவலின் பேரில் இந்த கொலையில் தொடர்புடைய சிவகங்கை மாவட்டம் மாங்குடியை சேர்ந்த மருது செல்வம் (32), மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறையை சேர்ந்த கோபால் (34), திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சிறுகுடியை சேர்ந்த கார்த்திக் (31), சிவகங்கை மாவட்டம் கு.அய்யாபட்டியை சேர்ந்த கவின் (19), மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியை சேர்ந்த டென்னிஸ் (29) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் முருகன் நடத்திய ஓட்டல் மற்றும் பாரில் ஊழியர்களாக வேலை செய்து வந்தனர். பல்லடத்தில் பதுங்கி இருந்தபோது தனிப்படை போலீசார் இவர்களை கைது செய்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்