கோயில் பூசாரி தற்கொலை வழக்கில் ஓபிஎஸ் சகோதரர் விடுதலை; எதிர்தரப்பினர் அதிர்ச்சி
கோயில் பூசாரியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா விடுதலை - திண்டுக்கல் சிறப்பு பட்டியலின மற்றும் பழங்குடியினர் நீதிமன்ற நீதிபதி முரளிதரன் தீர்ப்பு.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியை சேர்ந்த சுப்புராஜ் மகன் நாகமுத்து(22). இவர் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் பூசாரியாக பணிபுரிந்துவந்தார். இவர், கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் 7 ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். முன்னதாக தனது தற்கொலைக்கு கோயில் அறங்காவலர்களாக இருந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தம்பி ஓ.ராஜா, லோகு, சரவணன், ஞானம், மணிமாறன், சிவக்குமார், பாண்டி ஆகிய 7 பேர் தான் காரணம் என கடிதம் எழுதிவைத்துள்ளார்.
இதையடுத்து பூசாரி நாகமுத்துவின் தந்தை சுப்புராஜ் புகாரில் பெரியகுளம் தென்கரை போலீஸார் நாகமுத்துவை தற்கொலைக்கு தூண்டியதாக ஓ.ராஜா உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். நீதிமன்றத்தில் 390 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தேனி நீதிமன்றத்தில் துவங்கிய நிலையில், வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி சுப்புராஜ் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, இந்த வழக்கு 2015ல் திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணைகள் நடைபெற்றுவந்தது. குற்றம்சாட்டப்பட்டவர் அமைச்சரின்(அப்போது) தம்பியாக உள்ளதால் அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜராகக்கூடாது. அதற்கு பதிலாக சிறப்பு வழக்கறிஞரை நியமிக்கவேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இறந்த நாகமுத்துவின் தந்தை சுப்புராஜ் வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து சிறப்பு வழக்கறிஞரை நியமிக்க திண்டுக்கல் ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. சாட்சிகள் விசாரணை நடைபெற்றுவந்த நிலையில் இந்த வழக்கில் அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாததால் வாதாட முடியாது என சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டவர் தெரிவித்ததால் வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில் வழக்கை வெளிமாநிலத்திற்கு மாற்றக்கோரியும் சுப்புராஜ் கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கு பின்னர் திண்டுக்கல் மாவட்ட பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. விசாரணைகள் முழுமையடைந்த நிலையில் நவம்பர் 13 ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் எனவும், அன்று குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நேரில் ஆஜராகவேண்டும் என்றும் நீதிபதி முரளிதரன் அறிவித்தார். இந்த நிலையில் இன்று, வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதை ஓ.ராஜா உள்ளிட்ட ஆறு பேர் நீதிபதி முரளிதரன் முன்னிலையில் ஆஜராகினர்.
இதில் பாண்டி வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே இறந்துவிட்டார். இந்த நிலையில் நீதிபதி முரளிதரன் வழங்கிய தீர்ப்பில், குற்றம்சாட்டப்பட்ட ஓ.ராஜா உள்ளிட்ட ஆறு பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். தீர்ப்பு குறித்து ஓ.ராஜா சார்பில் வழக்கறிஞர் சந்திரசேகர் கூறும் போது, இது பொய் வழக்கு 43 சாட்சியங்கள், 3 தடயங்களை விசாரணை செய்யப்பட்டது. நீதிபதி சரியான தீர்ப்பை வழங்கியுள்ளார்.
சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞர் பாப்பா மோகன் கூறும் போது, “பூசாரி நாகமுத்து தொடர்ந்து மிரட்டப்பட்டுள்ளார். விடுதலையை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இது சமூகநீதி காண போராட்டம். இது தற்கொலை வழக்கு மட்டுமல்ல வன்கொடுமை சேர்ந்த வழக்கு இன்று நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. கண்டிப்பாக உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வோம்" என தெரிவித்தார்