Dindigul: பாலியல் புகார் வழக்கில் தனியார் நர்சிங் கல்லூரியின் தாளாளருக்கு 7 ஆண்டு சிறை
திண்டுக்கல் அடுத்த முத்தனம்பட்டி பகுதியை சேர்ந்த தனியார் நர்சிங் கல்லூரியின் தாளாளருக்கு பாலியல் தொல்லை புகார் வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு.
திண்டுக்கல் மாவட்டம் முத்தனம்பட்டி பகுதியில் தனியார் நர்சிங் கல்லூரி செயல்படுகிறது. இந்த கல்லூரியின் தாளாளராக இருந்து வருபவர் ஜோதிமுருகன் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கல்லூரியில் படித்த மாணவிகள் சிலருக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்து வந்த நிலையில், மாணவிகள் சார்பில் தாளாளர் ஜோதிமுருகனை கண்டித்து போராட்டம் நடந்தது. இதையடுத்து 3 மாணவிகள் தாடிக்கொம்பு காவல்நிலையத்தில் ஜோதிமுருகன் மீதும் மேலும் விடுதி வார்டன் ஆகியோர் மீதும் புகார் கொடுத்தனர்.
அதன்பேரில் தாளாளர் ஜோதிமுருகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர் போலீசார். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக கூறி விடுதி வார்டன் அர்ச்சனாவை போலீசார் கைது செய்தனர். ஆனால் தாளாளர் கைது செய்வதற்கு தப்பி ஓடினார். நீண்ட நாட்களாக போலீசார் அவரை தேடி வந்த நிலையில், ஜோதிமுருகன் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். பின்னர் அவர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் ஜோதிமுருகன் நிபந்தனை ஜாமீன் பெற்றார். இதை அறிந்த மகளிர் அமைப்புகள் ஜோதி முருகனுக்கு வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று போராட்டங்களும் நடத்தினர். அதேநேரம் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் போலீசார் மற்றும் அகில இந்திய பெண்கள் கூட்டமைப்பு சார்பில் ஜோதி முருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜோதி முருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ததோடு குறிப்பிட்ட நாட்களில் திண்டுக்கல் நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிட்டார்.
கடந்த 19.11.21 தேதியிலிருந்து இந்த வழக்கானது நடைபெற்று வந்தது. இந்த நிலையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஜோதி முருகன் மற்றும் விடுதி காப்பாளர் அர்ச்சனா ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்கள். இது தொடர்பான வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கருணாநிதி நேற்று ஜோதி முருகனுக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனையும் 75 ஆயிரம் ரூபாய் அபராதமும், விடுதி காப்பாளர் அர்ச்சனாவிற்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் 25,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.