கயத்தாறு To ஐஐடி... மாணவர்களின் அறிவு பசியை தூண்டிவிட்ட காவலர்... முன்னாள் மாணவரின் சபாஷ் செயல்
கயத்தாறு அரசு பள்ளி மாணவர்கள் தூத்துக்குடியிலிருந்து விமானம் மூலம் சென்னை பயணம். ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகத்தை பார்வையிட்டனர். முன்னாள் மாணவர்கள் சிறப்பு ஏற்பாடு
கயத்தாறு வீரபாண்டிய கட்ட பொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் விமானம் மூலம் தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு பயணம் செய்து ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை பார்வையிட்டனர்.
வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளி
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் அமைந்துள்ளது வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளி இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவரும், தற்போது காஞ்சிபுரம் காவல்துறையில் பணிபுரிந்து வருபவருமான தலைமை காவலர் அசோக் பிரபாகரன் தனது சொந்த செலவில், கல்வியிலும், பண்பிலும், ஒழுக்கத்திலும் சிறந்த 5 மாணவர்களை தேர்வு செய்து தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து செல்ல விரும்புவதாக பள்ளி தலைமை ஆசிரியர் சுதாவிடம் தெரிவித்திருந்தார்.
அதன்படி கல்வித் துறை உயர் அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெற்ற பிறகு இரண்டு நாட்கள் சென்னை பயணத்திற்கு திட்டமிடப்பட்டு, அதன்படி மேல்நிலை வகுப்பு பயிலும் நான்கு மாணவிகள் ஒரு மாணவர் என 5 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தலைமை ஆசிரியர் சுதா மேற்பார்வையில் தூத்துக்குடிக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னை அழைத்துச் செல்லப்பட்டனர்.
மாணவர்களுக்கு புது அனுபவம்
சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழகம், அழகப்பா தொழில் நுட்பக்கல்லூரி, ஐஐடி, அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, பிர்லா கோளரங்கம், அறிஞர் அண்ணா நூற்றாண்டுநூலகம், சென்னை மருத்துவக் கல்லூரி, தலைமைச்செயலகம், தலைமைச் செயலக மியூசியம் ஆகிய இடங்களை மாணவர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு தங்களது உயர்கல்விக்குரிய வாய்ப்புகள் குறித்து ஆர்வத்துடன் தெரிந்து கொண்டனர். இது அவர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியை ஊட்டக்கூடிய புது அனுபவமாக இருந்தது.
இப்பள்ளியின் 1997ம் வருட பிரிவு முன்னாள் மாணவரும், தற்போது அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் துறைத்தலைவராக பணிபுரியும் மருத்துவர் மூர்த்தி, மருத்துவமனையில் உள்ள அதிநவீன மருத்துவ உபகரணங்கனைப் பற்றியும், அதன் செயல்பாடு பற்றியும் மாணவர்களுக்கு விளக்கிக் கூறினார். மாணவர்கள் அதனை ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொண்டனர் அதேபோன்று, 1998ம் வருட பிரிவு பள்ளி மாணவரும், தற்போது தலைமைச்செயலக உயர்கல்வித்துறையில் பணிபுரிபவருமான கணேசன், மாணவர்களை தலைமைச் செயலகம், அருங்காட்சியகம் ஆகிய இடங்களை பார்வையிட ஏற்பாடுகளை செய்திருந்தார்.
ஊக்கமாக அமையும் என மாணவர்கள் கருத்து
இரண்டு நாள்கள் பயணம் முடிந்து, ஊர் திரும்பிய மாணவர்கள் பள்ளியில் பிற மாணவர்களுடன் பயண அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கல்வியிலும், விளையாட்டிலும், ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கி வெற்றிகள் பெற்றிட அவர்களை ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்துவதன் அவசியத்தை உணர்ந்து, பயண திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்திய அசோக் பிரபாகரனை பள்ளித்தலைமை ஆசிரியர். ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பாராட்டினர். இந்த பயண திட்டத்தை ஒவ்வொரு வருடமும் செயல்படுத்த இருப்பதாக அசோக் பிரபாகரன் கூறியுள்ளார்.
தொடர்ந்து மாணவர்களுக்கு இதுபோன்று கல்வி சுற்றுலா மூலம் ஊக்கமளிப்பதால், மாணவர்கள் வருங்காலங்களில் இது போன்ற இடத்தில் படிக்க வேண்டும். அதற்கான முன்னெடுப்புகள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படும் என்பதாலே இதுபோன்ற முன்னெடுப்புகளை முன்னெடுப்பதாக தெரிவித்தார். இந்த பயணம் மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.