காஞ்சிபுரம்: குடியிருப்பு, பள்ளி அருகே மதுபான விடுதி! மக்கள் கொந்தளிப்பு, போராட்டம் தீவிரம்!
"காஞ்சிபுரம் - செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் புதிய மதுபான விடுதிக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்"

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட குடியிருப்பு பகுதி மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகே மதுபானம் கூடம் செயல்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களில் திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சியில் திறக்கப்பட்ட புதிய மதுபான விடுதி
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன காஞ்சிபுரம் பகுதியில், காஞ்சிபுரம் - செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் புதியதாகத் தனியாருக்குச் சொந்தமான ஒரு மதுபான விடுதி (Bar) அனுமதி பெற்றுச் செயல்பாட்டிற்கு வந்ததையடுத்து, அதை உடனடியாக இழுத்து மூடுமாறு வலியுறுத்தி அப்பகுதி மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிதாகத் திறக்கப்பட்டுள்ள இந்த மதுபான விடுதியானது, பிரதான சாலையில் பொதுமக்களுக்குப் பெரும் இடையூறாக இருப்பதாகவும், குறிப்பாக அந்தப் பகுதிக்கு மிக அருகில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அமைந்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் நீண்டகாலமாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர். மேலும், இந்த விடுதிக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று கூறி பலமுறை மாவட்ட நிர்வாகத்திடமும் பொதுமக்கள் தரப்பில் முறையான புகார்கள் அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி மதுபான விடுதி செயல்பாட்டிற்கு வந்த நிலையில், இந்தப் போராட்டம் வெடித்தது.
மதுபான கூடத்திற்குள் சென்று போராட்டம்
மதுபான கூடம் இயங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், முதலில் கடைக்கு வெளியே திரண்டு தங்களின் எதிர்ப்பை முழக்கமிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, போராட்டக்காரர்கள் திடீரென கடைக்குள் புகுந்து, "இந்தப் பகுதியில் பார் செயல்படக்கூடாது, உடனடியாக இழுத்து மூடுங்கள்" எனக் கோஷங்களை எழுப்பித் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதில் பெண்களும் பெருமளவில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சில போராட்டக்காரர்கள், ஆத்திரத்தில் கடையில் இருந்த பொருட்களைத் தூக்கி அடித்து, உடைக்க முயன்றதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், சக போராட்டக்காரர்களே அவர்களைச் சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனர்.
காவல்துறை சமாதான பேச்சு வார்த்தை
சம்பவம் குறித்த தகவலின் பேரில் உடனடியாக நிகழ்விடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இது குடியிருப்புப் பகுதி மற்றும் கல்வி நிறுவனங்கள் நிறைந்த பகுதி என்பதால், இந்த மதுபானக் கூடம் செயல்படக் கூடாது என்ற தங்களது கோரிக்கையை அப்போது பொதுமக்கள் காவல்துறையினரிடம் மீண்டும் வலியுறுத்தினர்.
பொதுமக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த காவல்துறையினர், இது தொடர்பாக உரிய அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து, காவல்துறையினரின் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவம் காஞ்சிபுரம் - செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் சில மணிநேரம் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது.





















