காஞ்சி சங்கரமடம் எதிரில் பெரியார் சிலை... சிலை வைக்க நடந்த போராட்டங்கள் பற்றி தெரியுமா ?
பெரியாரின் 146வது பிறந்தநாள் கொண்டாடப்படும் வரும் நிலையில், காஞ்சிபுரம் சங்கர மடம் எதிரில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை குறித்து தெரிந்து கொள்வோம்.
தமிழ்நாடு அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கும் ஒற்றை பெயர்தான் பெரியார். சமத்துவம், சமூகநீதி போன்ற மனிதகுலத்தின் மிக அத்தியாவசியமான கொள்கைகளுக்காக, குரல் கொடுத்து மிக முக்கிய சீர்திருத்தங்களுக்கான காரணமாக திகழ்கிறார். இந்தியாவின் பல மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, பெண் கல்வி, பெண் சுதந்திரம் மற்றும் பெண்கள் வளர்ச்சி போன்றவற்றில் தமிழ்நாடு முன்னோடியாக திகழ காரணமும் பெரியார் விதைத்த விதை தான் காரணம்.
சாதிய கட்டமைப்பை நியாயப்படுத்தவும் சமூக படிநிலையில் கீழ் உள்ள சாதி மக்களை அடிமைகளாக வைத்திருக்கவே கர்மா, மறுபிறவி, வர்ணம், தர்மம், மோட்சம் ஆகிய கோட்பாடுகள் நிலைநிறுத்தப்படுவதாகவும் பெரியார் வாதிட்டார். சாதி, மதம் எனும் பெயரால் மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வு கூடாது, கடவுள் தான் அப்படி படைத்தார் என கூறினால் அவர் கடவுளே கிடையாது என கடவுள் மறுப்பை முன்னெடுத்த பெரியாரின் 146வது பிறந்த நாள் இன்று. இதனை, தமிழக அரசு சமூகநீதி நாளாக கொண்டாடி வருகிறது.
பெரியார் சிலைகள்
மதங்களில் உள்ள மூடநம்பிக்கைகள், சமத்துவமற்ற தன்மை, பெண்களுக்கு உரிமை மறுப்பு உள்ளிட்டவைகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து எழுதியும் பேசியும் வந்த பெரியாருக்கு தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களுக்கு முன்பு சிலை வைக்கப்பட்டுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு முன்பாக வைக்கப்பட்ட பெரியாரின் சிலையின் கீழ் கடவுளை கற்பித்தவன் முட்டாள், கடவுளை வழிபடுகின்றவன் காட்டுமிராண்டி என்ற வாசகங்களும் எழுதப்பட்டு இருக்கும். இதே போல காஞ்சிபுரத்தில் உள்ள சங்கரமடத்தின் முன்பாகவும் பெரியார் சிலையை வைக்க திராவிடர் கழகம் திட்டமிட்டது.
அரசியல் செல்வாக்கு மிக்க சங்கர மடம்
காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள காஞ்சி சங்கர மடம் ஆன்மீக மடமாக மட்டும் இல்லாமல், ஒரு படி மேலே சென்று அரசியல் செல்வாக்குமிக்க இடமாகவும் விளங்கி வருகிறது. குடியரசுத் தலைவர்கள், ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் சங்கர மடத்தில் உள்ள சங்கராச்சாரியார்களை தரிசித்துச் செல்வது வழக்கம். அந்த அளவிற்கு செல்வாக்குமிக்க மடமாக காஞ்சிபுரம் சங்கரமடம் விளங்கி வருகிறது.
தொடர் முயற்சிகள்
1974 ஆம் ஆண்டில் சங்கரமடம் அருகே பெரியார் சிலை வைப்பதற்காக, முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது, அப்போது தமிழக அரசு சார்பில் அதற்காக அனுமதி கொடுக்கப்படவில்லை. இதனிடையே இந்தியா முழுவதும் அவசர நிலை சட்டம் அமலுக்கு வந்ததால், பெரியார் சிலை அமைப்பதற்கான முயற்சிகள் சில மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து 1978 ஆம் ஆண்டு, செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் காஞ்சி. சி.பி. இராசமாணிக்கம் நகராட்சி, காவல்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அனுமதியுடன் பெரியார் நூற்றாண்டு விழாவில் சிலை அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டபோது எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக அரசு அனுமதி மறுத்தது. இந்த விவகாரம் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் கூட எதிரொலித்தது.
இதனையடுத்து காஞ்சி. சி.பி. இராசமாணிக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தொடர்ந்தார். வழக்கினை விசாரித்த நீதியரசர் வீ.இராமசாமி அரசுக்கு மூன்று வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு தாக்கீது பிறப்பித்தார் (7.9.1979). இதனையடுத்து நீதிமன்றத்தின் அனுமதியுடன் சங்கர மடம் அருகே சிலை வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிலை அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று , 24-02-1980, அன்று திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கி. வீரமணி திறந்து வைத்தார்.
பெரியார் சிலைக்கு மரியாதை
சங்கரமடம் முன்பாக இருக்கும் பெரியார் சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மரியாதை செலுத்துவது வழக்கமாக மாறி வருகிறது. தமிழ்நாட்டுச் சேர்ந்த முக்கிய கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் அதன் தொந்தரர்கள் தொடர்ந்து சங்கர மடம் எதிரே இருக்கும் பெரியார் சிலைக்கு ஆண்டுதோறும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.