Kanchipuram: காஞ்சிபுரம் 2026 யாருக்கு சீட்.. இப்போதே தொடங்கிய காய் நகர்த்தல்.. போட்டியில் முக்கிய கட்சி நிர்வாகிகள்
Kanchipuram Mla Election: காஞ்சிபுரம் வருகின்ற சட்டமன்ற தேர்தலில், தங்கள் கட்சியில் சீட்டு வாங்க இப்போதே, கட்சி பிரமுகர்கள் காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளனர்.

அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக இப்போதே அனைத்து கட்சிகளும் தயாராக தொடங்கியுள்ளன. கட்சிகள் மட்டும் இல்லாமல், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட பல்வேறு, கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் இப்போதே காய் நகர்த்த தொடங்கியுள்ளனர். அந்த வகையில் அண்ணா பிறந்த மண்ணான காஞ்சிபுரத்தில், இப்போதே கட்சியில் சீட்டு வாங்கி விட வேண்டும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் தேர்தல் முடிவுகள்
காஞ்சிபுரத்தில் 1971-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெற்ற தேர்தல்களில், 5 முறை திமுக வெற்றி பெற்றுள்ளது. 7 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது. ஒருமுறை பாமக வெற்றி பெற்றுள்ளது. 2016 மற்றும் 2021 ஆகிய தேர்தலில் திமுகவை சேர்ந்த சி.வி.எம்.பி. எழிலரசன் தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளார்.
2026 தேர்தல் நிலை என்ன?
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை காஞ்சிபுரம் தொகுதியில் திமுக, அதிமுக, பாமக, பாஜக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சேர்ந்தவர்கள் போட்டியிட விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
திராவிட முன்னேற்ற கழகம்
திமுகவை பொருத்தவரை திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராகவும், தொடர்ந்து இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வரும் சி.வி.எம்.பி. எழிலரசன் மூன்றாவது முறையாக தனக்கு சீட்டு ஒதுக்கப்படும் என நம்பிக்கையில் இருக்கிறார்.
ஆனால் திமுகவில் கடும் போட்டி நிலவி வருகிறது, தலைமை செயற்குழு உறுப்பினராக உள்ள எம்.எஸ். சுகுமார், காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார் ஆகியோரும் போட்டியில் உள்ளனர். இவர்களும் தங்களுக்கு சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அதற்கான காய்களை இப்போதே நகர்த்தத் தொடங்கியுள்ளனர்.
அதிமுகவின் நிலை என்ன ?
கடந்த முறை காஞ்சிபுரத்தில் அதிமுக போட்டியிடாமல், அதன் கூட்டணி கட்சியான பாமகவிற்கு ஒதுக்கப்பட்டது. இந்த தொகுப்பு அதிமுக போட்டியிட்டிருந்தால் வெற்றி பெற்றிருக்கும் என்ற பேச்சு பரவலாக இருந்து வருகிறது. கடந்த முறை உத்திரமேரூர் தொகுதியில் போட்டியிட்ட, முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம், காஞ்சிபுரம் அல்லது உத்திரமேரூர் தொகுதியில் போட்டியிட முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுபோக அதிமுகவில் மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம் மற்றும் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யுஎஸ். சோமசுந்தரம் ஆகியோரும் போட்டியிட ஆர்வம் காட்டி வருகின்றனர்
தமிழ் மாநில காங்கிரஸ்
வட தமிழ்நாட்டில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கட்டமைப்பு ரீதியாக, பலமாக உள்ள இடமாக காஞ்சிபுரம் இருந்து வருகிறது. எனவே, வருகின்ற தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமை, காஞ்சிபுரத்தில் போட்டியிட ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வழக்கறிஞரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தெற்கு மாவட்ட தலைவருமான மலையூர் வி.புருஷோத்தமன் வேட்பாளராக களம் இறக்க வாய்ப்பு உள்ளது.
பாரதிய ஜனதா கட்சி
பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை காஞ்சிபுரத்தில் பலர் அதற்கான காய்களை நகர்த்தி வருகின்றனர். காஞ்சிபுரத்தில் மாவட்டத் துணைத் தலைவராக உள்ள செந்தில்குமார் போட்டியிட அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்.
பாட்டாளி மக்கள் கட்சி
பாமகவை பொறுத்தவரை கடந்த 2016 மற்றும் 2021 ஆகிய தேர்தல்களில் மகேஷ் குமார் போட்டியிட்டு தோல்வியடைந்தார். எந்தக் கூட்டணி அமைந்தாலும், காஞ்சிபுரம் பாமகவிற்கு ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கையில், மகேஷ் குமார் பணியாற்றி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது மட்டுமில்லாமல் தமிழக வெற்றி கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சிகளிலும் வருகின்ற தேர்தலில், போட்டியிட அக்கட்சி நிர்வாகிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.





















