ஐபோன் தயாரிக்கும் ஆலையில் திருமணமான பெண்களுக்கு வேலை மறுப்பா ? - அரசும் பாக்ஸ்கான் நிறுவனமும் சொல்வது என்ன ?
பாக்ஸ்கான் நிறுவனத்தில் 70% பெண்கள் அதாவது 40,000 பெண்கள் பணி செய்து வருவதாகவும், 30 சதவீத ஆண் ஊழியர்கள் பணியாற்றி வருவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஐபோன்களுக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனமான பாக்ஸ்கான், திருமணம் முடிந்த பெண்களுக்கு பணி தர மறுப்பதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பான பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன .
பாக்ஸ்கான் நிறுவனம்
முன்னணி நிறுவனமான ஆப்பிள் ஐபோன்களுக்கான உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் பாக்ஸ்கான். சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுர் அருகே உள்ள சுங்குவார்சத்திரத்தில் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் நிரந்தர ஊழியர்களாகவும் மற்றும் ஒப்பந்த ஊழியர்களாகவும் ஆயிரக்கணக்கான ஆண் மற்றும் பெண் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்தநிலையில் ஐபோன் தயாரிக்கும் இந்த நிறுவனத்தில், திருமணமான பெண்களை பணிக்கு எடுப்பது இல்லை என்ற புகார் எழுந்துள்ளது. திருமணமான பெண்கள் அதிக அளவு குடும்ப பொறுப்புகளை சுமக்க வேண்டும் மற்றும் குழந்தைகளையும் பார்க்க வேண்டும் உள்ளிட்ட காரணங்களுக்காக அவர்களுக்கு பணி மறுக்கப்படுவதாக செய்திகள் வெளியாகி இருந்தன. ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களை பணியில் அமர்த்தும் போது பாகுபாடு காட்டக் கூடாது என்று 1976- ஆண்டின் சட்டம் இருக்கும் பொழுது இதற்கு எதிராக இந்த நிறுவனம் நடந்து கொண்டதா என கேள்வி எழுப்பியது.
இது தொடர்பாக மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- ஆப்பிள் ஐபோன் தொழி்ற்சாலையான ஃபாக்ஸ்கான் இந்தியா நிறுவனத்தில் திருமணமான பெண்கள் பணியாற்ற அனுமதிப்பதில்லை என்ற ஊடகச் செய்திகளை மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது. இந்த செய்திகளின் பின்னணியில், விவரமான அறிக்கையை அளிக்குமாறு தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறையிடமிருந்து மத்திய அமைச்சகம் கோரியுள்ளது.
ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தும் போது, பாகுபாடு காட்டக்கூடாது என 1976-ம் ஆண்டின் சமவேலைக்கு சமஊதியம் சட்டத்தின் பிரிவு-5 தெளிவாக தெரிவிக்கிறது. இந்தச் சட்டத்தின் அம்சங்களை அமல்படுத்துதல் மற்றும் நிர்வகித்தலுக்கு உரிய அதிகாரம் கொண்டது மாநில அரசு என்பதால், அதனிடமிருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளது. அதே சமயம், உண்மை நிலை அறிக்கையை மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்துக்கு அளிக்குமாறு பிராந்திய தலைமை தொழிலாளர் நல ஆணையர் அலுவலகமும் பணிக்கப்பட்டுள்ளது என அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
பாக்ஸ்கான் நிறுவனம் சொல்வது என்ன ?
இந்த விவாகாரம் சார்பாக அந்நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்களிடம் நாம் பேசினோம்: செய்தி நிறுவனங்களில் வெளியான புகாருக்கு மறுப்பு தெரிவிப்பதாகவும், திருமணமானவர்கள் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து அரசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாக ஊழியர்கள் நம்மிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் இது தொடர்பாக பாக்ஸ்கான் நிறுவனம் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்த தகவலின் அடிப்படையில், பாக்ஸ்கான் நிறுவனத்தில் தற்பொழுது 25% சதவீத பெண்கள் திருமணம் ஆனவர்கள் என அந்த நிறுவனம் தெளிவுபடுத்தி உள்ளது. மேலும் பாக்ஸ்கான் நிறுவனத்தில் 70% பெண்கள் அதாவது 40,000 பெண்கள் பணி செய்து வருவதாகவும், 30 சதவீத ஆண் ஊழியர்கள் பணியாற்றி வருவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. திருமணமான பெண்கள் தொழிற்சாலைகளில் பணிகள் அமர்த்துவதில்லை என வெளியான செய்திக்கு அந்த நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.