Zomato: பீட்சாவை டெலிவரி செய்யாமல் ரத்து செய்த ஜொமேட்டோ.. ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்த ஆணையம்.. என்ன ஆச்சு?
உரிய நேரத்தில் உணவை டெலிவரி செய்யாமல் ரத்து செய்த சோமேட்டோ நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் செயல்பட்டு வரும் முன்னணி உணவு டெலிவரி நிறுவனங்களில் ஒன்று சோமேட்டோ. தினமும் பலர் இந்த சோமேட்டோ மூலம் உணவு ஆர்டர் செய்து வருகின்றனர். அந்தவகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஒருவர் உணவை ஆர்டர் செய்துள்ளார். எனினும் அவருடைய உணவிற்கு பணத்தை பெற்று கொண்டு ஆர்டரை சோமேட்டோ நிறுவனம் ரத்து செய்துள்ளது. இதற்காக சோமேட்டோ நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நடந்தது என்ன?
கடந்த சில நாட்களுக்கு முன்பாக அஜய் குமார் சர்மா என்ற நபர் சோமேட்டோ செயலியை பயன்படுத்தி இத்தாலி ட்ரீட் பீட்சா கடையில் ஒரு பீட்சாவை ஆர்டர் செய்துள்ளார். இந்த பீட்சாவை அவர் இரவு 10.25 மணியளவில் ஆர்டர் செய்துள்ளார். அதற்கான கட்டணமாக 287 ரூபாய் மற்றும் விரைவான டெலிவரிக்கான கூடுதலாக 10 ரூபாயையும் செலுத்தியுள்ளார். அவருடைய கட்டணத்தை பெற்று கொண்டு சில நேரத்திற்கு பிறகு சோமேட்டோ நிறுவனம் அவருடைய ஆர்டரை ரத்து செய்துள்ளது. அத்துடன் அவருடைய பணத்தை திருப்பி செலுத்துவதாக உறுதியளித்துள்ளது.
இந்தச் சூழலில் சோமேட்டோ நிறுவனம் அனைவருக்கும் உணவு சரியான நேரத்தில் வழங்கப்படும் என்று விளம்பரம் செய்து வந்தது. இதை பார்த்து அஜய் குமார் சர்மா முதலில் சோமேட்டோ நிறுவனம் மீது மாவட்ட ஆணையத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவருடைய வழக்கை மாவட்ட ஆணையம் தள்ளுபடி செய்துள்ளது. இதைத் தொடர்ந்து அவர் மாநில ஆணையத்தில் மேலும் ஒரு வழக்கை தொடர்ந்துள்ளார் .
அந்த வழக்கை விசாரித்த மாநில வாடிக்கையாளர் ஆணையம் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. அதன்படி, “இரவு நேரத்தில் இவரிடம் இருந்து உரிய கட்டணத்தை பெற்று கொண்டு சோமேட்டோ நிறுவனம் உணவை தரவில்லை. அந்த உணவு அவருடைய குழந்தைகளுக்காக ஆர்டர் செய்துள்ளார். அந்த உணவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் ஆசையுடன் இருந்த அவருடைய குழந்தைகளுக்கு அவர் மிகவும் வருத்தத்துடன் இந்த விஷயத்தை தெரிவித்திருப்பார்.
இவ்வாறு தங்களுடைய சேவையை சரியாக செய்யவில்லை மற்றும் வாடிக்கையாளருக்கு மன உளைச்சல் ஏற்படுத்திய காரணத்திற்காக சோமேட்டோ நிறுவனம் அபராதம் செலுத்த வேண்டும்” எனத் தெரிவித்தது. அந்த தீர்ப்பின்படி சோமேட்டோ நிறுவனம் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கேட்டது சீனி காஃபி! வந்தது சிக்கன் காஃபி! சர்ச்சையில் சிக்கிய சோமேட்டோ
டெல்லியைச் சேர்ந்த சுமித் சவுரப் என்ற நபர் கடந்த ஜனவரி மாதம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில், “சோமேட்டோ செயலி மூலம் காஃபி ஒன்றை ஆர்டர் செய்தேன். அந்த காஃபியில் ஒரு சிக்கன் துண்டு இருந்தது. இன்றுடன் உங்களுக்கும் எனுக்குமான தொடர்பு முடிந்தது” எனத் தெரிவித்திருந்தார்.
சோமேட்டோவின் பதில்:
இதற்கு சோமேட்டோ நிறுவனம் சார்பில் ஒரு பதில் விளக்கமும் அளிக்கைப்பட்டுள்ளது. அதையும் அந்த நபர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவருக்கு வருத்தம் தெரிவித்துவிட்டு சோமேட்டோ நிறுவனம் தன்னுடைய ப்ரோ வாடிக்கையாளர் வசதியை அவருக்கு இலவசமாக வழங்கியுள்ளது. இதை பதிவிட்டு அவர் இப்படி ஒரு தவறை செய்துவிட்டு நீங்கள் என்னுடைய மதிப்பை நீங்கள் பெற முடியாது எனப் பதிவிட்டிருந்தார்.
இது பெரும் சர்ச்சையாக மாறிய சூழலில் தற்போது சோமேட்டோ நிறுவனம் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:'கடவுள் உயர் சாதி இல்லை; பெண்கள் யாருமே பிராமணர்கள் அல்ல'- ஜேஎன்யூ துணைவேந்தர் பேச்சால் சர்ச்சை