Yaas Cyclone: வங்கக் கடலில் வந்திறங்கிய ‛யாஸ்’ புயல்; வானிலை மையம் எச்சரிக்கை!
புயல் கரையை கடக்கும்போது மணிக்கும் 155 முதல் 165 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் நான்கு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதோ... அதோ... என எதிர்பார்கக்ப்பட்ட யாஸ் புயல், வங்கக் கடலில் உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வானது, யாஸ் புயலாக மாறியதாகவும், இந்த புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும் என்றும், யாஸ் புயல் வரும் 26ஆம் தேதி ஒடிசா - மேற்கு வங்கம் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த புயலை எதிர்கொள்ள இரண்டு மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மீட்பு குழுவினர் உஷார் நிலையில் உள்ளனர்.
புயல் கரையை கடக்கும்போது மணிக்கும் 155 முதல் 165 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் நான்கு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
மேலும், ‘இந்த புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும். சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம். மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும். நாளை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும்’ என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தப் புயலுக்கு ஓமன் நாடு கொடுத்த 'யாஸ்' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு டவ்தே புயலுக்கு பிறகு வரும் இரண்டாவது புயல் யாஸ் ஆகும். மேலும் வங்கக்கடலில் உருவான முதல் புயல் இதுவாகும். முன்னதாக, யாஸ் புயலின் காரணமாக நாகர்கோவில் - ஷாலிமார் சிறப்பு ரயில் மே 23 வரை, ஷாலிமார் - நாகர்கோவில் சிறப்பு ரயில் மே 26 வரை, ஹவுரா - கன்னியாகுமரி சிறப்பு ரயில் மே 24 வரை, ஹவுரா - சென்னை சிறப்பு ரயில் மே 24 முதல் மே 26 வரை, சென்னை - ஹவுரா சிறப்பு ரயில் மே24 முதல் மே 26 வரை, ஷாலிமார் - திருவனந்தபுரம் மே 25 வரை, எர்ணாகுளம் - பாட்னா மே 24 முதல் மே 25 வரை, பாட்னா- எர்ணாகுளம் மே 27 முதல் மே 28 வரை, திருச்சி - ஹவுரா மே 25 வரை, ஹவுரா - திருச்சி மே 27 வரை உள்ளிட்ட 22 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புயலின் அடுத்தடுத்த நகர்வுகளை வைத்து வேறு எதுமாதிரியான பாதிப்பை தரும் என்பதை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவிக்க உள்ளனர்.