ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த மல்யுத்த வீரர்களுக்கு அனுமதி இல்லை... டெல்லி காவல்துறை அதிரடி அறிவிப்பு..!
நாட்டுக்காக ஒலிம்பிக் போட்டிகளிலும் காமன்வெல்த் போட்டிகளிலும் விளையாடிய மல்யுத்த வீரர்களை, டெல்லி காவல்துறை தாக்குவது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாலியல் புகாரில் சிக்கியுள்ள பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி கடந்த ஒரு மாத காலமாக மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இச்சூழலில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.
புதிய நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முயற்சி:
இந்த நிகழ்ச்சியில், பிரிஜ் பூஷன் சரண் சிங் கலந்து கொண்டதால், புதிய நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல மல்யுத்த வீரர், வீராங்கனைகள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதன் காரணமாக, தடையை மீறி மல்யுத்த வீரர்கள், புதிய நாடாளுமன்றத்தை நோக்கி அமைதி பேரணி செல்ல முயற்சித்தனர்.
அப்போது, காவல்துறை தடுப்புகளை தாண்டி அவர்கள் பேரணியை தொடர முயன்ற போது அவர்களை காவல்துறை சிறைபிடித்து தங்கள் வாகனத்தில் ஏற்றிச் செற்றனர். இதனால் அப்பகுதி களேபரமாக காணப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட முன்னணி வீரர்களான வினேஷ் போகாத், சாக்ஷி மாலிக், பஜ்ரங் பூனியா ஆகியோர் இந்த கைது நடவடிக்கைக்கு ஆளாகினர்.
மல்யுத்த வீரர்களுக்கு எதிராக வழக்கு:
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்கள், கலவரத்தில் ஈடுபட்டதாகக் கூறி காவல்துறை நேற்று வழக்கு பதிவு செய்தது. இந்நிலையில், ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த மல்யுத்த வீரர்களுக்கு அனுமதி இல்லை என டெல்லி காவல்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து டெல்லி காவல்துறை கூறுகையில், "பலமுறை கோரிக்கை விடுத்தும் ஆவேசத்துடன் நேற்று போராட்டக்காரர்கள் சட்டத்தை மீறினர். அதனால்தான் டெல்லியின் ஜந்தர் மந்தரில் அவர்களின் போராட்டம் நிறுத்தப்பட்டது. மல்யுத்த வீரர்கள் எதிர்காலத்தில் மீண்டும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட அனுமதி கோரி விண்ணப்பித்தால், ஜந்தர் மந்தரைத் தவிர வேறு ஏதேனும் பொருத்தமான இடங்களில் அனுமதிக்கப்படுவார்கள்" என குறிப்பிட்டுள்ளது.
நாட்டுக்காக ஒலிம்பிக்ஸ் போட்டிகளிலும் காமன்வெல்த் போட்டிகளிலும் விளையாடிய மல்யுத்த வீரர்களை, டெல்லி காவல்துறை தாக்குவது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி காவல்துறை, இந்தியாவின் தலைசிறந்த பெண் விளையாட்டு வீராங்கனைகளை ஒடுக்கியுள்ளனர். அதற்கு இரண்டு கி.மீ தொலைவில், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்திருப்பது வேடிக்கையானது என பலர் அதிர்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "வீரர்களின் நெஞ்சில் இருக்கும் பதக்கங்கள் நம் நாட்டின் பெருமை. அந்த பதக்கங்களால், விளையாட்டு வீரர்களின் கடின உழைப்பால், நாட்டின் கவுரவம் அதிகரிக்கிறது.
பாஜக அரசின் ஆணவம் அதிகமாகிவிட்டதால், நமது வீராங்கனைகளின் குரலை அரசாங்கம் இரக்கமில்லாமல் மிதித்து வருகிறது. இது முற்றிலும் தவறு. அரசின் இந்த அநீதியை நாடு முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கிறது" என இந்தியில் பதிவிட்டுள்ளார்.