90% பெண் போலீஸ் நிலை இதுதான்! இதை மாத்த 200 வருஷம் ஆகும்.. ஆனா தமிழ்நாடு வேற லெவல்
90 சதவிகித பெண் போலீஸ் ஜூனியர் பதவிகளில் இருப்பது இந்திய நீதி அறிக்கை 2025இல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 2.4 லட்சம் பெண் போலீஸ் உள்ளனர். அதில், வெறும் 25,282 பேர் அல்லது எட்டு சதவீத பெண்கள் மட்டுமே அதிகாரிகளாக உள்ளனர். பெரிய மற்றும் நடுத்தர அளவிலான மாநிலங்களில் பெண் போலீஸ் பிரதிநிதித்துவத்தில் பீகார் முதலிடத்தில் உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே, நீதித்துறையிலும் காவல்துறையிலும் பெண்கள் சேர்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இருந்தபோதிலும், 90 சதவிகித பெண் போலீஸ் ஜூனியர் பதவிகளில் மட்டுமே இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. இந்திய நீதி அறிக்கை 2025இல், இதுபோன்று பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. காவல்துறையில் பெண் காவலர்களின் எண்ணிக்கையை 33 சதவகிதம் உயர்த்த உச்ச நீதிமன்றமும் மத்திய அரசும் அறிவுறுத்திய நிலையிலும், இதில் பெரிய முன்னேற்றம் நடக்கவில்லை என இந்திய நீதி அறிக்கை 2025 மூலம் தெரிய வருகிறது.
அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்:
காலம் காலமாக பல வகைகளில் பெண்கள் ஒடுக்கப்பட்டு வந்துள்ளனர். பொருளாதார வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளன. அரசியல் ரீதியாக அதிகாரம் தரப்படவில்லை. அவர்களுக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்துள்ளது. கலாசாரம் என்று கூறி அடக்குமுறைக்கு உள்ளாகியுள்ளனர். இதை எதிர்த்து சமூக சீர்திருத்தவாதிகள் பலர் தொடர்ந்து குரல் கொடுத்துள்ளனர்.
பெண்கள் முன்னேற்றத்திற்காக கடந்த 200 ஆண்டுகளாக பல்வேறு சமூக இயக்கங்கள் தோன்றி செயல்பட்டுள்ளன. ஆங்கிலேயர் காலத்திலும் சுதந்திர இந்தியாவிலும் பல சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. இருப்பினும், பெண்கள் முன்னேற்றத்தில் இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் பின்தங்கி இருப்பது இந்திய நீதி அறிக்கை 2025 மூலம் தெரிய வந்துள்ளது.
காவல்துறை, நீதிமன்றம், சிறை, சட்டபூர்வமான உதவி ஆகிய நான்கு விவகாரங்களில் பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து ஆராய்ந்து இந்த அறிக்கை தயாரிக்கப்படுகிறது. டாடா அறக்கட்டளை நேற்று வெளியிட்ட இந்திய நீதி அறிக்கை 2025இல் 90 சதவிகித பெண் போலீஸ் ஜூனியர் பதவிகளில் இருப்பது தெரிய வந்துள்ளது.
பெண் போலீஸ் நிலை என்ன?
இந்தியா முழுவதும் 2.4 லட்சம் பெண் போலீஸ் உள்ளனர். அதில், வெறும் 25,282 பேர் அல்லது எட்டு சதவீத பெண்கள் மட்டுமே அதிகாரிகளாக உள்ளனர். இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) ரேங்கில் 960 பேர் மட்டுமே பெண்கள் உள்ளனர். அதே நேரத்தில், 24,322 பேர் துணை கண்காணிப்பாளர், ஆய்வாளர் அல்லது துணை ஆய்வாளர் போன்ற பதவிகளை வகிக்கின்றனர்.
காவல்துறையில் பெண் காவலர்களின் எண்ணிக்கையை 33 சதவிகிதம் உயர்த்த உச்ச நீதிமன்றமும் மத்திய அரசும் தொடர்ந்து அறிவுறுத்தி நிலையிலும் இதில் பெரிய முன்னேற்றம் நடக்கவில்லை. எந்த மாநிலத்திலும் 33 சதவிகித பெண் காவலர்கள் இல்லை என்பது இந்திய நீதி அறிக்கை 2025இல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவில் போலீஸ், மாவட்ட ரிசர்வ் ஆயுதப்படை (DAR), சிறப்பு ஆயுதப்படை போலீஸ் பட்டாலியன், இந்திய ரிசர்வ் பட்டாலியன் ஆகிய போலீஸ் பிரிவுகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான காலத்தில், 12.3 சதவிகிதமாக உள்ளது.
பெரிய மற்றும் நடுத்தர அளவிலான மாநிலங்களில் பெண் போலீஸ் பிரதிநிதித்துவத்தில் பீகார் முதலிடத்தில் உள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு, பிகாரில் மொத்த காவல்துறை எண்ணிக்கையில் பெண் போலீஸ் மட்டும் 21 சதவிகிதம் இருந்தனர். கடந்த 2024ஆம் ஆண்டு, இது 24 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. பெண் போலீஸ் பிரதிநிதித்துவத்தில் தமிழ்நாடும் முன்னிலையில் உள்ளது. 33 சதவிகித பெண் போலீஸ் என்ற இலக்கை பீகார் மாநிலங்கள் இன்னும் 3.3 ஆண்டுகளில் அடைந்துவிடும்.
நிலைமையை மாற்ற 200 ஆண்டுகள் ஆகும்!
இதே வேகத்தில் பெண் போலீஸ் நிரப்பப்பட்டால், தமிழ்நாடு இந்த இலக்கை அடைவதற்கு இன்னும் 20.4 ஆண்டுகள் ஆகும். அதே சமயம், பாஜக ஆளும் திரிபுராவில் இந்த இலக்கை எட்ட இன்னும் 222 ஆண்டுகள் ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து பேசிய முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் முன்னாள் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான கிரண் பேடி, "காவல் துறையில் பெண்கள் குறைந்த அளவில் இருப்பதற்கு நீண்டகால சமூக மற்றும் அமைப்பு ரீதியான குறைபாடுகளே காரணம்.
குடும்பமும் சமூக எதிர்பார்ப்புகளும் பெண்கள், குறிப்பாக சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பெண்கள், இதுபோன்ற தொழில்களைத் தொடர்வதைத் தடுக்கின்றன" என்றார்.

