6 மாதம் லிவ்-இன்:திருமணம் செய்ய மறுத்த கேரள வாலிபர்: போராட்டத்தில் வங்கி ஊழியர் பெண்!
சமூக வலைத்தளத்தின் மூலம் அறிமுகமாகி டேட்டிங், திருமணம் என முடிவது இந்தக் காலக்கட்டத்தில் இயல்பாகி வருகிறது.
சமூக வலைத்தளத்தின் மூலம் அறிமுகமாகி டேட்டிங், திருமணம் என முடிவது இந்தக் காலக்கட்டத்தில் இயல்பாகி வருகிறது. அந்த வகையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் திண்டுக்கலைச் சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்வதாகக் கூறி லிவ்-இன்னில் இருந்து பின்னர் தலைமறைவாகியுள்ள சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரியைச் சேர்ந்தவர் 24 வயது வாலிபர் ஒருவர். இவர் பட்டமேற்படிப்பு படித்து வருகிறார். இவருக்கும் திண்டுக்கல் மாவட்டம் பழநியைச் சேர்ந்த பெண் ஒருவருக்குக்கும் ஆன்லைனில் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒருவருடத்துக்கு முன்பு ஏற்பட்ட இந்தப் பழக்கம் தொடர் உரையாடல் போன் நம்பர் பரிமாற்றம் ஆகியவற்றுக்கு இடையே காதலாக மலர்ந்துள்ளது. இருவரும் அடிக்கடி சமூக வலைதளத்தில் பேசி வந்தனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறவே, இருவரும் தங்கள் செல்போன் எண்ணை பகிர்ந்து கொண்டு, மணிக்கணக்கில் பேசி வந்துள்ளனர்.
அதன் பிறகு அந்த இளைஞர் சிலகாலம் கழித்து அந்தப் பெண்ணிடம் அவரைப் பார்க்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து இருவரும் நேரில் சந்தித்து பேசினர்.
அடுத்து அந்த வாலிபர், பெண்ணிடம் தான் அவரைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். தாங்கள் இருவரும் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கு அந்த பெண்ணும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து இரண்டு பேரும் ஒரே வீட்டில் கடந்த 6 மாதமாக ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் 2 வாரங்களுக்கு முன்பு வாலிபர், தனது தந்தை வெளிநாட்டில் இருந்து வந்துள்ளதாகவும் அவரைச் சந்தித்து தம் காதலை தெரிவித்து திருமணத்திற்கு சம்மதம் வாங்கி வருவதாகக் கூறிச் சென்றுள்ளார்.
அதன் பிறகு வெகு நாட்களாகியும் அவர் திரும்பி வரவே இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த அந்தப் பெண், நேராக கேரள மாநிலம் மஞ்சேரிக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
அங்கு காதலன் வீட்டிற்கு சென்ற அவர், வாலிபரின் பெற்றோரிடம் தாங்கள் இருவரும் காதலிப்பதாகவும், தங்களுக்கு திருமணம் செய்து வைக்குமாறும் கூறியுள்ளார்.ஆனால் இவர் சொன்னதை ஏற்க மறுத்த அவர்கள் கதவை அடைத்து வீட்டிற்குள் சென்றுள்ளனர்.
இதையடுத்து அந்த பெண் தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என கூறி வாலிபரின் வீட்டின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மஞ்சேரி போலீசார் விரைந்து வந்து இளம்பெண்ணிடம் விசாரித்தனர். அப்போது வாலிபர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி காதலித்தார்.ஆறு மாத காலத்தில் பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார். ஆனால் தற்போது திருமணம் செய்ய மறுக்கிறார் எனக் கூறியுள்ளார்.இதையடுத்து போலீசார் இளைஞர் மற்றும் பெற்றோரிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர். இதற்காக வீட்டிற்குள் சென்றனர். அப்போது அங்கு யாரும் இல்லை. அவர்கள் அனைவரும் தலைமறைவாகி விட்டது தெரியவந்துள்ளது.
இதையடுத்து போலீசார் அந்தப் பெண்ணை தற்போது மஞ்சேரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்