UP Love Marriage: பாதியில் ஓடிய காதலன்.. ரயில்வே ஸ்டேஷனில் முளைத்த திடீர் காதல், அப்பா போட்ட பாம்ப்
UP Marriage: காதலனுக்காக வீட்டை விட்டு ஓடிய இளம்பெண், வேறொரு நபரை திருமணம் செய்து கொண்டு வீடு திரும்பிய சம்பவம் உத்தரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

UP Marriage: வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் திட்டமிட்டபடி காதலன் வராததால், இளம்பெண் தனியாகவே ரயிலில் வெளியூருக்கு சென்றுள்ளார்.
சினிமாவை மிஞ்சிய ட்விஸ்ட்
காதல் தோல்வியால் வாழ்க்கை மீது நம்பிக்கை இன்றி ரயிலில் ஏறிய நபர் சந்திக்கும் பெண்ணால், ஏற்படும் மாற்றங்களை மையமாக கொண்டு ஜாப் வி மெட் என்ற இந்தி திரைப்படம் கரீனா கபூர் நடிப்பில் 2007ம் ஆண்டு வெளியாகி பெரும் ஹிட் அடித்தது. அது வெறும் கற்பனை கதையாக மட்டுமே அப்போது இருந்தது. ஆனால், 18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தூரில் உண்மையாகவே அத்தகைய சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. ஸ்ரதா திவாரி எனும் இளம்பெண் தனது காதலன் சர்தக் என்பவரை திருமணம் செய்துகொள்வதற்காக வீட்டை விட்டு ஓடியுள்ளார். ஆனால், ஒரு வாரம் கழித்து வேறொரு நபரை திருமணம் செய்து கொண்டு வீடு திரும்பியுள்ளார்.
கடைசி நேரத்தில் ஏமாற்றிய காதலன்
MIG காவல் நிலைய பகுதியை சேர்ந்த 23 வயதான ஸ்ரதா கடந்த 23ம் தேதியன்று, சர்தக் என்பவரை திருமணம் செய்துகொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஆனால், திட்டமிட்டபடி ரயில்வே நிலையத்திற்கு வராத காதலன், தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ஸ்ரதாவை திருமணம் செய்து கொள்ள தனக்கு விருப்பமில்லை என தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்த அந்த பெண் அடுத்து என்ன செய்வது என்றே தெரியாமல் அங்கே வந்த ரயில் ஒன்றில் ஏறியுள்ளார். அடுத்த சில மணி நேரங்களில் ரட்லம் எனும் பகுதியை ஸ்ரதா அடைந்துள்ளார்.
ரயில் நிலையத்தில் முளைத்த காதல்
ரயில் நிலையத்திலேயே அமர்ந்து அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்த ஸ்ரதா, தான் படித்த கல்லூரியில் எலெக்ட்ரீசியன் பணி செய்து வந்த கரண்தீப் என்பவரை எதிர்பாராத விதமாக சந்தித்துள்ளார். தனியாக அமர்ந்து அழுதுகொண்டிருந்த அந்த பெண்ணை அணுகி, நடந்தை கேட்டு அறிந்து சமாதானபடுத்தியுள்ளார். பெற்றோரிடம் நடந்தது குறித்து தெரிவித்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு செல்லுமாறு அறிவுரை கூறியுள்ளார். ஆனால் ஸ்ரதாவோ, “திருமணம் செய்வதற்காகவே நான் வீட்டை விட்டு வெளியேறினேன். அதனை செய்யாமல் நான் வீடு திரும்பினால் நான் உயிரோடு இருக்கமாட்டேன்” என தீர்மானமாக பேசியுள்ளார். அந்த பெண்ணை சமாதானப்படுத்த மேற்கொண்ட பலகட்ட முயற்சிகளும் தோல்வியுற, நானே உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என கரண்தீப் தெரிவித்துள்ளார். ஸ்ரதாவும் அதனை உடனடியாக ஏற்றுள்ளார்.
பரிசுத்தொகை அறிவித்த தந்தை
இதையடுத்து கரண்தீப் - ஸ்ரதா ஜோடி மஹேஷ்வர் - மண்டலேஷ்வர் பகுதிக்கு சென்று திருமண்அம் செய்துள்ளனர். அங்கு இருந்து மாண்ட்சார் பகுதிக்கும் சென்றுள்ளனர். இதனிடையே, ஸ்ரதாவின் தந்தை அனில் தனது மகளை தீவிரமாக தேட தொடங்கியுள்ளார். அவள் குறித்து தகவல் அளிக்கும் நபருக்கு 51 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். மேலும் வழிப்போக்கர்கள் யாரேனும் தனது மகள் குறித்து தகவல் தெரிவிப்பார்களா? என்ற எண்ணத்தில் அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஸ்ரதாவின் புகைப்படத்தை வீட்டின் வாசலில் தலைகீழாகவும் அவர் தொங்கவிட்டுள்ளார்.
வீடு திரும்பிய ஸ்ரதா
இந்நிலையில் தான் கடந்த வியாழனன்று தனது தந்தையை தொலைபேசியில் தொடர்புகொண்டு, தான் மாண்ட்சாரில் பாதுகாப்பாக இருப்பதாக ஸ்ரதா தெரிவித்துள்ளார். இதையடுத்து, அன்று இரவு அங்கேயே ஓட்டலில் பாதுகாப்பாக தங்கிவிட்டு காலையில் வீடு திரும்புமாறு அறிவுறுத்தியுள்ளார். ஆனால், அந்த ஜோடிக்கு ஓட்டல் நிர்வாகங்கள் அறை ஒதுக்க மறுக்கவே, அனில் உடனடியாக கரண்தீபின் வங்கிக் கணக்கிற்கு பணத்தை செலுத்தி ரயில் டிக்கெட் எடுத்து வீடு திரும்ப வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து சொந்த ஊர் திரும்பிய ஸ்ரதா, நேரடியாக காவல்நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவங்களை தெரிவித்துள்ளார்.
10 நாட்கள் பிரித்து வைக்க திட்டம்:
இருவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே, தனது மகள் வீடு திரும்பியதால் மகிழ்ச்சி அடைந்துள்ள அனில், அடுத்த 10 நாட்களுக்கு ஸ்ரதாவையும், கரண்தீபையும் பிரித்து வைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். அதன் பிறகும் அவனுடனேயே சேர்ந்து வாழ எனது மகள் விருப்பம் தெரிவித்தால் அவர்களது திருமணத்தை ஏற்பேன் என்றும் அனில் உறுதியளித்துள்ளார்.



















