காதல் திருமணம் செய்து ஊர் திரும்பிய பெண் மீது தாக்குதல்... சட்டவிரோத காப் பஞ்சாயத்து நபர்களால் பெண்ணுக்கு கருச்சிதைவு!
நீலாவதியை பஞ்சாயத்து நபர்கள் கடுமையாகத் தாக்கிய நிலையில், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
ஆந்திராவில் காதல் திருமணம் புரிந்து மீண்டும் தாய் வீடு திரும்பிய கர்ப்பிணி பெண் மீது காப் பஞ்சாயத்தைச் சேர்ந்த நபர்கள் தாக்குதல் நடத்தியதில், அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
வட மாநிலங்களின் பல பகுதிகளில் இயங்கிவரும் சாதிய அமைப்பான காப் பஞ்சாயத்துக்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து அவற்றை சட்டவிரோதமானவை என ஏற்கெனவே அறிவித்துள்ள நிலையில், நிகழ்ந்துள்ள இச்சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆந்திரப் பிரதேசம், திருப்பதி மாவட்டம், பழைய வீராபுரம் கிராமத்தைச் சேர்ந்த நீலாவதி என்பவர், கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீஹரி என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தொடர்ந்து நீலாவதி கருவுற்ற நிலையில், இதனையறிந்த நீலாவதியின் பெற்றோர் அவரை வீட்டுக்குத் திரும்பும்படி கோரியுள்ளனர். இதனையேற்று நீலாவதி கடந்த 14ஆம் தேதி தனது கணவர் ஸ்ரீஹரியுடன் மீண்டும் கிராமத்துக்கு திரும்பியுள்ளார்.
இதனையறிந்த வீராபுரம் கிராமத்தில் சட்டவிரோதமாக இயங்கி வரும் காப் பஞ்சாயத்தைச் சேர்ந்த நபர்கள், நீலாவதி காதல் திருமணம் செய்து ஊர் விதிகளை மீறியதாகக் கூறி, அவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளனர்.
இச்சூழலில் நீலாவதியின் குடும்பத்தினர் அந்நபர்களிடம் இரண்டு நாள்கள் அவகாசம் தருமாறு கோரியுள்ளனர். ஆனால் இரண்டு நாட்கள் ஆகியும் நீலாவதி குடும்பத்தினர் பணத்தைக் கொடுக்க முடியாத நிலையில், ஊர் பெரியவர்கள் நீலாவதியை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
இதனையடுத்து திருப்பதி ரூயா அரசு மருத்துவமனையில் நீலாவதி அனுமதிக்கப்ப்பட்ட நிலையில், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் முன்னதாக நீலாவதி குடும்பத்தினர் திருப்பதி எஸ்.பியிடம் புகார் அளித்தனர்.
தொடர்ந்து வீராபுரம் கிராமத்துக்கு விரைந்து காவல் துறையினர் நீலாவதியைத் தாக்கிய முருகையா, வாணி, சுனில் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காப் பஞ்சாய்த்துகள் சட்டவிரோதமானவை என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அறிவித்ததோடு, சம்மதத்துடன் வயது வந்த இரண்டு நபர்கள் செய்துகொள்ளும் திருமணங்களில் தலையிடுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
Khap Panchayat is illegal, panchayats should refrain from interfering into marriages: SC
— Arvind Gunasekar (@arvindgunasekar) March 27, 2018
சாதி அல்லது சமூகம் சார்ந்த குழுக்களாக உள்ள காப் பஞ்சாயத்துகள், பெரும்பாலும் வட இந்தியாவின் கிராமப்புறங்களில் இன்றளவும் சட்டவிரோதமாக இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: New Classrooms: அதிகரிக்கும் அரசுப்பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை; 7,200 புதிய வகுப்பறைகள்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு