Whatsapp Apology : தவறான இந்திய வரைபடத்தை வெளியிட்ட வாட்ஸ்-அப்...எச்சரிக்கை விடுத்த மத்திய அமைச்சர்...நடந்தது என்ன?
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் இடம்பெற்ற உலக வரைபடம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுடன் இந்திய தனது பெரும்பாலான எல்லையை பகிர்ந்து கொள்கிறது. இதன் காரணமாக, இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையேயும் இந்தியா, சீன நாடுகளிக்கிடையேயும் எல்லை பிரச்னை நிலவி வருகிறது.
குறிப்பாக, இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையேயான காஷ்மீர் பிரச்னை கிட்டதட்ட 75 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் உள்ளது.
இந்திய, சீன எல்லை பிரச்னை பொறுத்தவரை சமீபத்தில் கூட இரு நாட்டு ராணுவ வீரர்களும் அருணாச்சல பிரதேசத்தில் மோதி கொண்டது உலக அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இச்சூழலில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் இடம்பெற்ற உலக வரைபடம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதில், இந்தியாவின் எல்லை பகுதிகள் தவறாக வரையப்பட்டிருந்தது.
அதாவது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் சீனாவை ஒட்டியுள்ள இந்தியா பகுதிகள் இந்திய வரைபடத்தில் இடம்பெறவில்லை.
இது பெரும் சர்ச்சையை கிளப்ப, இந்த ட்விட்டர் பதிவுக்கு மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகா் பதில் பதிவு வெளியிட்டிருந்தார். அதில், இந்தியாவின் தவறான வரைபடம் இடம்பெற்றிருப்பதாகவும் இதை வாட்ஸ்ஆப் சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்தியாவில் வா்த்தகத்தை தொடர வேண்டுமென்றால் இந்தியாவின் வரைபடத்தை சரி செய்ய வேண்டும் என்றும் எச்சரிக்கும் விதமாக ட்வீட் செய்திருந்தார். இந்த பதிவை, வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெடாவை அவர் டேக் செய்திருந்தார்.
இதையடுத்து, அந்த விடியோவை வாட்ஸ்அப் நிறுவனம் உடனடியாக நீக்கியது. "எங்களின் எதிா்பாராத தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி. விடியோ நீக்கப்பட்டுள்ளது. மன்னிக்கவும், வரும் நாள்களில் கவனத்துடன் செயல்படுவோம்" என்று பதில் பதிவில் விளக்கம் அளித்தது.
Dear @WhatsApp - Rqst that u pls fix the India map error asap.
— Rajeev Chandrasekhar 🇮🇳 (@Rajeev_GoI) December 31, 2022
All platforms that do business in India and/or want to continue to do business in India , must use correct maps. @GoI_MeitY @metaindia https://t.co/aGnblNDctK
கடந்த சில நாட்களில், மத்திய அமைச்சர் வெளியிடும் இரண்டாவது எச்சரிக்கை பதிவு இதுவாகும். சமீபத்தில், ஜூம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனர் எரிக் யுவான் இந்தியாவின் தவறான வரைபடத்தைக் கொண்ட வீடியோவை ட்வீட் செய்திருந்தார். அப்போது, அவருக்கும் மத்திய அமைச்சர் எச்சரிக்கை விடுக்கும் வகையில் பதிவு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.