Bharat Row: இந்தியாவின் பெயரை ”பாரதம்” என மாற்றலாமா? - கடந்த காலங்களில் உச்சநீதிமன்றம் சொன்னது என்ன?
இந்தியாவின் பெயரை ”பாரதம்” என மாற்ற வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்குகளில், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள் தொடர்பாக இந்த தொகுப்பில் அறியலாம்.
இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்றக்கோரிய வழக்கில் ஒரு குடிமகன் நாட்டை எப்படி அழைக்க வேண்டும் என்பதை தங்களால் தீர்மானிக்க முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
”பாரதம்” சர்ச்சை:
நாட்டில் இதுநாள் வரையில் இந்திய குடியரசு தலைவர் மற்றும் இந்திய பிரதமர் என்றே அழைக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க வரும் உலக தலைவர்களுக்கு இரவு விருந்திற்காக வழங்கப்பட்டுள்ள அழைப்பிதழில், குடியரசு தலைவர் மாளிகை இந்தியாவை தவிர்த்து பாரதம் என குறிப்பிட்டுள்ளது. ஆசியான் மாநாட்டில் பங்கேற்க செல்லும் பிரதமர் மோடியின் நிகழ்ச்சி நிரல் தொடர்பான அறிவிப்பிலும் இந்தியா என்ற பெயர் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதனால், செப்டம்பர் 18ம் தேதி கூடும் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில், இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்றுவதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு:
நாட்டின் பெயரை மாற்றுவதற்கான முயற்சி தொடர்பாக சமூக வலைதலளங்களில் நிலவும், சலசலப்புக்கு மத்தியில், இந்தியாவை பாரத் என்று அழைக்கக் கோரி ஏற்கனவே இரண்டு முறை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்குகளில் மனுதாரரின் கோரிக்கை என்ன? நீதிமன்றம் கூறியது என்ன என்பது தற்போது அறிந்து கொள்ளலாம்.
முதல் வழக்கு:
இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்றக்கோரி கடந்த 2016 ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட, மனுவை அப்போதைய இந்திய தலைமை நீதிபதி டிஎஸ் தாக்கூர் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு நிராகரித்தது. அந்த உத்தரவில், ”நாட்டை "பாரத்" அல்லது ”இந்தியா” என்று அழைப்பதைத் தேர்வுசெய்ய ஒவ்வொரு இந்தியருக்கும் உரிமை உண்டு. ஒரு குடிமகன் நாட்டை எப்படி அழைக்க வேண்டும் என்பதை உச்சநீதிமன்றம் தீர்மானிக்க முடியாது” என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மீண்டும் எழுந்த கோரிக்கை:
கடந்த 2020 ஆம் ஆண்டில் டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 1-இல் திருத்தம் செய்யக் கோரி மனு தாக்கல் செய்தார். அதில் “"இந்தியா" என்ற பெயர் கிரேக்க வம்சாவளியைச் சேர்ந்தது. "இண்டிகா" என்ற வார்த்தையிலிருந்து அது வந்தது. "இந்தியா" என்ற ஆங்கிலப் பெயர் நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அதை "பாரத்" என்று மறுபெயரிடுவது மக்களிடியே உள்ள காலனித்துவ அடையாளத்தை அகற்ற உதவும். இந்தியாவை பாரதம் என பெயர் மாற்றம் செய்வது நமது முன்னோர்கள் கடினமாக போராடி பெற்ற சுதந்திரத்தை நியாயப்படுத்தும்” என வலியுறுத்தப்பட்டு இருந்தது. அந்த மனுவை தள்ளுபடி செய்த , அப்போதைய இந்திய தலைமை நீதிபதி பாப்டே, "பாரதம் மற்றும் இந்தியா இரண்டும் அரசியல் சாசனத்தில் கொடுக்கப்பட்ட பெயர்கள். அரசியலமைப்பில் இந்தியா ஏற்கனவே 'பாரத்' என்று அழைக்கப்படுகிறது" என்று விளக்கமளித்தார்.
அரசியலமைப்பின் பிரிவு 1 என்றால் என்ன? எப்படி வந்தது?
அரசியலமைப்பின் பிரிவு 1, நமது தேசம் எப்படி அழைக்கப்படுகிறது என்பதைக் குறிப்பிடும் ஒரு முக்கியமான விதியாகும். 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி வரைவு விதி 1 அரசியலமைப்பு சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதுதொடர்பான விவாதத்தின் போது, பாரத், ஹிந்துஸ்தான், ஹிந்த், பாரத்பூமி, பாரத்வர்ஷ் போன்ற பெயர்கள் முன்மொழியப்பட்டன. சில வரைவுக் குழு உறுப்பினர்கள் பாரதம் என்ற பெயரை தேர்வு செய்துள்ளனர். ஆனால், மற்றவர்கள் இந்தியா என்ற புதிய பெயரை விரும்பினர். இறுதியில் "இந்தியா, அதுவே பாரதம், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்" என்ற அறிக்கைக்கு அரசியலமைப்புச் சபை ஒப்புதல் வழங்கியது.
அரசியலமைப்பில் பிரிவு 1(1) இன் படி, "இந்தியா, அதாவது பாரதம் மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தியோகப்பூர்வ நோக்கங்களுக்காக நாடு எவ்வாறு அழைக்கப்பட வேண்டும் என்பது தொடர்பான அரசியலமைப்பில் உள்ள ஒரே ஒரு விதி இதுதான்.