Electoral Bonds: அது என்ன தேர்தல் பத்திரம்? எதற்குக் கொண்டு வரப்பட்டது? ரத்து செய்யப்பட்டது ஏன்?- ஓர் அலசல்!
Electoral Bonds Scheme: தேர்தல் பத்திரத் திட்டம் இன்று ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அது எதற்குக் கொண்டு வரப்பட்டது? ரத்து செய்யப்பட்டது ஏன் என்பது குறித்துக் காணலாம்.
அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிக்க சில ஆண்டுகளுக்கு முன்னால் அறிமுகம் செய்யப்பட்ட முறைகளில் ஒன்று தேர்தல் பத்திரம் ஆகும்.
பொதுவாக அரசியல் கட்சிகளுக்குப் பல்வேறு வகைகளில் பணம் கிடைக்கிறது. வங்கிகளில் வழங்கப்படும் வட்டித் தொகை, கட்சி உறுப்பினர்களுக்கான கட்டணம், கட்சி வரி, சொத்துகளை விற்றல், தன்னார்வ நன்கொடை உள்ளிட்டவை மூலம் எல்லோரும் தெரிந்துகொள்ளும் வகையில் கட்சிகள் நிதி திரட்டுகின்றன. அதேபோல, கூட்டங்களில் நிதி சேகரிப்பு, தேர்தல் பத்திரங்கள், நிவாரண நிதி, இதர வருமானங்கள் மூலம் யாரென்றே தெரியாத நபர்கள் மூலம் கட்சிகள் நன்கொடை பெறுகின்றன.
தேர்தல் பத்திரம் என்றால் என்ன? (Electoral Bonds Scheme News: )
இந்த சூழலில், தேர்தல் பத்திரத் திட்டம் சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பத்திரங்களை தனிநபர்களோ, நிறுவனங்களோ வங்கிகளில் வாங்கி, தாங்கள் விரும்பும் கட்சிக்கு நன்கொடையாக அளிக்கலாம். வங்கிகள் தங்க பத்திரங்கள்போல, தேர்தல் பத்திரங்களையும் (Electoral Bonds ) விற்பனை செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன.
நன்கொடை வழங்கும் முறை
தேர்தல் பத்திரம் மூலம் குறிப்பிட்ட அளவு நிதி, நன்கொடையாகக் கட்சிகளுக்கு வழங்கப்படுகிறது. ஒரு நபரோ, நிறுவனமோ எத்தனை பத்திரங்களை வேண்டுமானாலும் வாங்கி, கட்சிகளுக்கு அளிக்கலாம். சம்பந்தப்பட்ட கட்சி, 2 வாரத்துக்குள் பத்திரத்தை பணமாக மாற்ற வேண்டும். இல்லாவிட்டால் தேர்தல் பத்திரங்களின் மதிப்புக்கு ஈடான தொகை, பிரதமர் நிவாரண நிதிக்கு மாற்றப்படும்.
தேர்தல் பத்திரத்தை வாங்குவது எப்படி?
இந்திய ஸ்டேட் வங்கி, தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்து வருகிறது. ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி ஆகிய மதிப்பில் பத்திரங்கள் விற்கப்படுகின்றன. எனினும் டெல்லி, மும்பை, லக்னோ, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட குறிப்பிட்ட எஸ்பிஐ கிளைகளில் மட்டுமே பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்.
ஆண்டுதோறும் ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் ஆகிய 4 மாதங்களில் மட்டும் தேர்தல் பத்திரங்கள் விற்கப்படுகின்றன. இந்த காலத்தில், மாதத்தில் 10 நாட்களுக்கு தேர்தல் பத்திரங்கள் வழங்கப்படும். எனினும் தேர்தல் நேரத்தில் மட்டும், மாதத்தில் 30 நாட்களுக்கும் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்.
எப்போது நடைமுறைக்கு வந்தது?
கடந்த 2017- 18ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தேர்தல் பத்திர முறைத் திட்டம், நிதி மசோதாவில் அறிவிக்கப்பட்டது. 2018ஆம் ஆண்டு திட்டம் நடைமுறைக்கு வந்தது. அப்போதில் இருந்து 2022 வரை தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெற்றுள்ளன. மக்களவை / சட்டப்பேரவைத் தேர்தலில் 1 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்ற கட்சிகள் மட்டுமே நன்கொடை பெற முடியும்.
இதன்படி நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்குக் கிடைத்த நன்கொடை 9,208 கோடி ரூபாய் ஆகும். இதில் பாதிக்கும் மேற்பட்ட தொகையை பாஜக மட்டுமே பெற்றிருக்கிறது. குறிப்பாக 5,270 கோடி ரூபாய் நிதியை பாஜக பெற்றுள்ளது. இது மொத்த நன்கொடையில் 57 சதவீதமாகும்.
அதேபோல 2022-23ஆம் ஆண்டில், பாரதிய ஜனதா கட்சி, தேர்தல் பத்திர நன்கொடையாக 720 கோடியாக அதிகரித்தது. அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சி பெற்ற நன்கொடை 95 கோடி ரூபாயில் () இருந்து 80 கோடி ரூபாயாகக் குறைந்தது.
சர்ச்சை ஏன்?
தேர்தல் பத்திர சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பாக, அரசியல் கட்சிகள் ரூ.20 ஆயிரத்துக்கு மேல் ஒருவரிடம் நன்கொடை பெற்றால் அதன் முழு வவரத்தையும் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால் இந்த சட்டம் இயற்றப்பட்ட பிறகு, தேர்தல் பத்திரங்கள் மூலம் எத்தனை கோடி ரூபாய் நன்கொடைகளை அரசியல் கட்சிகள் பெற்றாலும் யார் அளித்தார்கள் என்ற விவரத்தைத் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டியதில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம்கூட எந்தத் தகவலையும் பெற முடியாது. இதனால் சர்ச்சை எழுந்தது.
இந்த பத்திரங்களில் வாங்குபவரின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் கோரப்படாது. இதனால்தான் நிதி வழங்கும் தேர்தல் பத்திர நடைமுறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. அதேபோல தனிநபர்களோ, நிறுவனங்களோ நன்கொடை வழங்குவதன் மூலம், கைமாறை எதிர்பார்ப்பர் என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இந்த திட்டத்தை ரத்து செய்யக் கோரி ஏடிஆர், காமன் கேஸ் உள்ளிட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் 2019-ல் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தன.
இந்த மனுக்கள் மீது 5 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு முதல் தலைமை நீதிபதி சந்திர சூட், நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்து வந்தது. இந்த வழக்கில் தேர்தல் பத்திர முறையையே ரத்து செய்து, உச்ச நீதிமன்றம் இன்று (பிப்.15, 2024) அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.
தீர்ப்பு சொல்வது என்ன?
உச்ச நீதிமன்றத் தீர்ப்பில், தேர்தல் பத்திர முறையால் மக்களின் தகவல் அறியும் உரிமை மீறப்படுவதாகவும் பின்வாசல் வழியான பேரங்கள் ஊக்குவிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல இந்தியாவில் கிளைகள் உள்ள வெளிநாட்டு நிறுவனங்களும் கட்சிகளுக்குத் தேர்தல் பத்திரங்களை வழங்க அனுமதி அளித்தது, இந்திய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ள நீதிபதிகள், இந்தப் பணம் தேர்தல் தவிர்த்து வேறு காரணங்களுக்கும் பயன்படுத்தப்படலாம் என்றும், ஊழலை ஊக்குவித்து கறுப்புப் பணத்தைக் குறைக்க உதவாது என்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.