Crime: பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை.. பழங்குடி சிறுமியின் உடலை தரதரவென இழுத்துச் சென்ற காவல்துறை..! கொடூரத்தின் பின்னணி என்ன?
பாதிக்கப்பட்ட பழங்குடி சிறுமியின் உடலை காவல்துறை அதிகாரி தரதரவென இழுத்து சென்றது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்க மாநிலம் கலியகஞ்ச் பகுதியில் பழங்குடி சிறுமி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
மேற்குவங்கத்தில் கலவரம்:
இதையடுத்து அங்கு வெடித்த வன்முறை அப்பகுதியை உலுக்கியது. குறிப்பாக, பாதிக்கப்பட்ட பழங்குடி சிறுமியின் உடலை காவல்துறை அதிகாரி தரதரவென இழுத்து சென்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தின் உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இந்த சம்பவம் நடந்துள்ளது. பின்னர், பாதிக்கப்பட்டவரின் உடலை உள்ளூர்வாசிகள் கண்டெடுத்தனர்.
சம்பவத்தை விளக்கியுள்ள காவல்துறை தரப்பு, "உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தின் கங்குவா கிராமத்தில் வசிக்கும் சிறுமி, வியாழன் மாலை டியூஷனுக்குச் சென்றபோது காணாமல் போனார். உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியும் அவரது குடும்பத்தினரால் இரவு முழுவதும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை" என தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். டயர்களை எரித்தனர். போலீசார் மீது கற்களை வீசினர்.
சிறுமியின் உடலை இழுத்த சென்ற காவல்துறை அதிகாரி:
பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியா, இது தொடர்பாக வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், சில போலீஸ் அதிகாரிகள் பாதிக்கப்பட்டவரின் உடலை இழுத்துச் செல்வதைக் காண முடிந்தது. மைனர் பெண் ராஜ்போங்ஷி சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும் அமித் மால்வியா குறிப்பிட்டுள்ளார்.
சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. வடக்கு தினாஜ்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் சனா அக்தர், இதுகுறித்து கூறுகையில், "பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மைனர் பெண்ணின் உடலுக்கு அருகில் விஷம் கலந்த பாட்டில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நியாயமான விசாரணை:
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதுடன், இறப்புக்கான காரணத்தை ஆய்வு செய்ய மருத்துவ வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவரின் உடலில் காயங்கள் எதுவும் காணப்படவில்லை.
தேசிய மகளிர் ஆணையம் (NCW), இந்த சம்பவத்தை கவனத்தில் கொண்டு மேற்கு வங்க காவல்துறை இந்த விவகாரத்தில் தலையிட்டு நியாயமான விசாரணையை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மை என கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்றும் ஆணையம் கோரியுள்ளது.
மேற்குவங்கத்தில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: Madurai Chitrai Festival: கொடியேற்றத்துடன் தொடங்கிய சித்திரை திருவிழா...! கோலாகலம் பூண்ட மதுரை..! பரவசத்தில் பக்தர்கள்..!