மும்பை கனமழை : குழிக்குள் கார் மூழ்கும் காட்சிகள் : சமூகவலைதளத்தில் வைரலாகும் வீடியோ !
கனமழை காரணமாக கார் ஒன்று குழிக்குள் மூழ்கும் காட்சிகள் சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
தென் மேற்கு பருவ மழை தீவிரம் அடைய தொடங்கியுள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா பகுதியில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மும்பை மாநகரில் கடந்த ஒரு வாரமாக மழையின் தாக்கம் மிகவும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சாலைகள் தண்ணீர் தேங்கி உள்ளது. கனமழை காரணமாக மும்பையில் கடந்த வாரம் மூன்று அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழுந்து பலர் உயிரிழந்தனர். இந்தாண்டு தென்மேற்கு பருவ மழையினால் மும்பை மாநகர் அதிகளவில் சேதங்களை சந்தித்து வருகிறது.
இந்நிலையில் தற்போது மும்பை மாநகரில் கார் ஒன்று ஒரு குழிக்குள் மூழ்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பாக ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதன்படி மேற்கு மும்பையின் காட்கோபர் பகுதியில் அமைந்துள்ள ராம் நிவாஸ் என்ற தனியார் குடியிருப்பு வளாகத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்கு கார் பார்கிங் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று குழிக்குள் மூழ்கியுள்ளது. இந்த காருக்குள் மக்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இது தொடர்பான வீடியோ தான் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Scary visuals from Mumbai's Ghatkoper area where a car drowned in few seconds. pic.twitter.com/BFlqcaKQBo
— Shivangi Thakur (@thakur_shivangi) June 13, 2021
இந்த வீடியோ தொடர்பாக மும்பை மாநகராட்சி சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், "இந்த இடம் தனியார் குடியிருப்பிற்கு சொந்தமான இடம். மேலும் இந்த குடியிருப்பின் அருகே நீண்ட நாட்களுக்கு முன்பாக ஒரு கிணறு ஒன்று இருந்துள்ளது. அந்த கிணற்றை கான்கிரீட் சிமெண்ட் கலவை வைத்து மூடிவிட்டு அதை கார் பார்க்கிங்காக இந்த குடியிருப்பினர் பயன்படுத்தி வருகின்றனர். பருவமழை காரணமாக அந்தப் பகுதியில் போடப்பட்டிருந்த சிமெண்ட் கலவை கரைந்துள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பகுதியில் மழை நீர் ஏதாவது தேங்கி இருந்தால் அதை உடனடியாக மோட்டார் இயந்திரம் வைத்து எடுக்கவும் மும்பை பெருநகர மாநகராட்சி சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளத்தில் பலரும் வீடியோவை வியந்து பார்த்து தங்களின் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடமுடியாதா? - மத்திய அரசுக்கு மும்பை நீதிமன்றம் கிடுக்கிப்பிடி..!