குடியரசு துணைத் தலைவரை போன்று மிமிக்ரி செய்த எம்.பி.! வீடியோ எடுத்து குஷியான ராகுல் காந்தி
சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்களில் ஒருவரான திரிணாமுல் எம்பி கல்யாண் பானர்ஜி, குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கரை போன்று மிமிக்ரி செய்து நடித்தார்.
நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம் தேசிய அளவில் தொடர் அதிர்வலைகளை கிளப்பி வருகிறது. கடந்த டிசம்பர் 13ஆம் தேதி, நாடாளுமன்றத்தின் பார்வையாளர் மாடத்தில் இருந்த இரு இளைஞர்கள் திடீரென மக்களவைக்குள் குதித்தனர். தங்களின் கைகளில் இருந்த மர்ம பொருள்களை அந்த இளைஞர்கள் வீசியதால் அங்கு புகை மண்டலமாக காட்சி அளித்தது.
பரபரப்பான சூழலில், அவர்களை எம்பிக்கள் சிலர் பிடித்து சரமாரியாக தாக்கி பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர். நாடாளுமன்றத்துக்கு உள்ளே இளைஞர்கள் இருவர் களேபரம் செய்த அதே சமயத்தில், நாடாளுமன்றத்தின் வெளியே இருவர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
நாடாளுமன்றத்தை அதிரவைத்த சம்பவம்:
22 ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்றம் தாக்குதலுக்கு உள்ளான அதே நாளில், அத்துமீறல் சம்பவம் நடந்திருப்பது பாதுகாப்பு குளறுபடி குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பின. எனவே, இது தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி மக்களவையில் போராட்டம் நடத்தியதால் எதிர்க்கட்சிகளை சேர்ந்த 141 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
சுதந்திர இந்திய வரலாற்றிலேயே, ஒரே நேரத்தில் இத்தனை எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதில்லை. ஆளுங்கட்சியின் செயலை கடுமையாக சாடியுள்ள எதிர்க்கட்சிகள், எம்பிக்களை சஸ்பெண்ட் செய்யப்படவில்லை, ஜனநாயகத்தை சஸ்பெண்ட் செய்துள்ளனர் என விமர்சித்துள்ளனர். இதற்கு மத்தியில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள், நாடாளுமன்ற வளாகத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குடியரசு துணை தலைவரை போன்று மிமிக்ரி செய்த எம்பி:
இந்த நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்களில் ஒருவரான திரிணாமுல் எம்பி கல்யாண் பானர்ஜி, குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கரை போன்று மிமிக்ரி செய்து நடித்தார். இதை, ராகுல் காந்தி வீடியோவாக எடுத்தார். இதை, குடியரசு துணை தலைவர் கடுமையாக சாடியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், "மாநிலங்களவை தலைவர் பதவி என்பது வேறு. சபாநாயகர் பதவி என்பது வேறு. அரசியல் கட்சிகள், வேறு வேறு திசையில் பயணிக்கலாம். பரஸ்பரம் விவாதித்து கொள்கின்றன. ஆனால், இந்த நிலையில் உங்கள் கட்சியின் மூத்த தலைவரை கற்பனை செய்து பாருங்கள்.
மாநிலங்களவை தலைவரை மிமிக்ரி செய்வதா? சபாநாயகரை மிமிக்ரி செய்வதா? எவ்வளவு அபத்தமானது. எவ்வளவு வெட்கக்கேடானது, ஏற்றுக்கொள்ள முடியாதது" என்றார்.
Close-up shot of Jagdeep Dhankar’s mimicry by opposition MPs.
— Shantanu (@shaandelhite) December 19, 2023
Rahul Gandhi Ji: I’m in the Loksabha 😀
Kalyan Banerjee: I have been appointed here only to sahe Narendra Modi 😂
Burns for BJP IT Cell and journos like Pallu. pic.twitter.com/M0ttdWynLq
இந்த விவகாரத்தில் கல்யாண் பானர்ஜியையும், ராகுல் காந்தியையும் விமர்சித்த பாஜக, "எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஏன் இடைநீக்கம் செய்யப்பட்டனர் என்று நாடே யோசித்துக்கொண்டிருந்தால், அதற்கான காரணம் இதுதான். திரிணாமுல் எம்பி கல்யாண் பானர்ஜி, குடியரசு துணை தலைவரை கேலி செய்கிறார். அதே நேரத்தில் ராகுல் காந்தி அவரை ஆவலுடன் உற்சாகப்படுத்துகிறார். பொறுப்பற்றவர்களாக இருக்கின்றனர். அத்துமீறி நடந்து கொண்டுள்ளனர்" என தெரிவித்தது.