வந்தே பாரத்: அதிவேக ரயில் சேவை! புதிய வழித்தடங்களில் பயண நேரம் குறைப்பு! முழு விபரம் இதோ!
கர்நாடக மாநிலம் பெங்களூரு முதல் கேரள மாநிலம் எர்ணாகுளம் இடையே விரைவில் வந்தே பாரத் ரெயில் இயக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இந்தியாவின் அனைத்து பகுதிகளையும் அதிவிரைவு ரயில் போக்குவரத்து சேவையின் மூலம் இணைக்கும் நோக்கில் கடந்த 2019ஆம் ஆண்டு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் அறிமுகம் செய்யப்பட்டன. தற்போது வரை 76 ரயில்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில் புதிதாக நான்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்கள் கொடியசைத்து தொடங்கி வைக்கப்படும் என்று இந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இவை அனைத்து சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எஃப் ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட மினி வந்தே பாரத் 2.0 எக்ஸ்பிரஸ் மாடலை சேர்ந்தவை. புதிய வந்தே பாரத் ரயில் சேவை பட்டியலில் வாரணாசி – கஜுராஹோ, பிரோஸ்பூர் கன்டோன்மென்ட் – டெல்லி ஜங்ஷன், லக்னோ ஜங்ஷன் – சஹரான்பூர், கே.எஸ்.ஆர் பெங்களூரு – எர்ணாகுளம் ஜங்ஷன் 26422/ 26421 எண் கொண்ட வாரணாசி, கஜுராஹோ இடையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களை இணைக்கிறது. இது வியாழக்கிழமை தவிர்த்து வாரத்தின் 6 நாட்களும் இயக்கப்படுகின்றன. மொத்தமுள்ள 465 கிலோமீட்டர் தூரத்தை 7 மணி 40 நிமிடங்களில் கடக்கிறது. இந்த ரயில் வடக்கு ரயில்வே நிர்வாகத்தின் கீழ் இயக்கப்படவுள்ளது.
சராசரியாக மணிக்கு 61 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படும்.26462/ 26461 எண் கொண்ட பிரோஸ்பூர் கன்டோன்மென்ட் , டெல்லி ஜங்ஷன் இடையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களை இணைக்கிறது. வாரத்தில் புதன்கிழமை தவிர்த்து எஞ்சிய 6 நாட்களும் இயக்கப்படவுள்ளன. மொத்தமுள்ள 487 கிலோமீட்டர் தூரத்தை 6 மணி 35 நிமிடங்களில் கடக்கிறது. இதுவும் வடக்கு ரயில்வே நிர்வாகத்தின் கீழ் இயக்கப்படும் என்பது கவனிக்கத்தக்கது. இந்த ரயிலில் சராசரி வேகம் மணிக்கு 74 கிலோமீட்டர்.
குறிப்பாக கர்நாடக மாநிலம் பெங்களூரு முதல் கேரள மாநிலம் எர்ணாகுளம் இடையே விரைவில் வந்தே பாரத் ரெயில் இயக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. தற்போது, வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் நேரத்தை ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளபடி, பெங்களூரு கே.ஆர்.எஸ். ரயில் நிலையத்தில் இருந்து காலை 5.10 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் (வண்டி எண் 26651) அதே நாள் மதியம் 1.50 மணிக்கு எர்ணாகுளம் ஜங்ஷன் ரயில் நிலையத்தை வந்தடைகிறது. மறுமார்க்கத்தில், எர்ணாகுளம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் (26652) இரவு 11 மணிக்கு பெங்களூரு கே.ஆர்.எஸ். ரயில் நிலையத்தை சென்றடைகிறது. இந்த வந்தே பாரத் ரயில் கிருஷ்ணராஜபுரம், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு மற்றும் திருச்சூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
பெங்களூருவில் காலை 5.10 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில் கிருஷ்ணராஜபுரத்திற்கு காலை 5.23 மணிக்கும், சேலத்திற்கு காலை 8.13 மணிக்கும், ஈரோட்டிற்கு காலை 9 மணிக்கும், திருப்பூருக்கு காலை 9.45 மணிக்கும், கோவைக்கு காலை 10.33 மணிக்கும், பாலக்காட்டிற்கு காலை 11.28 மணிக்கும், திருச்சூருக்கு மதியம் 12.28 மணிக்கும் சென்றடைகிறது. ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் தலா 2 நிமிடங்கள் ரயில் நிற்கிறது.மறுமார்க்கத்தில் எர்ணாகுளத்தில் இருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்படும் இந்த வந்தே பாரத் ரயில் திருச்சூருக்கு மதியம் 3.17 மணிக்கும், பாலக்காட்டிற்கு மாலை 4.35 மணிக்கும், கோவைக்கு மாலை 5.20 மணிக்கும், திருப்பூருக்கு மாலை 6.03 மணிக்கும், ஈரோட்டிற்கு இரவு 6.45 மணிக்கும், சேலத்திற்கு இரவு 7.18 மணிக்கும், கிருஷ்ணராஜபுரத்திற்கு இரவு 10.23 மணிக்கும் சென்றடைகிறது. திரும்பும்போதும் ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் தலா 2 நிமிடங்கள் நின்று செல்லும். புதன்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்களும் இந்த ரயில் இயக்கப்படும்.





















